2 September 2014

ரூ.499-ல் விமான பயணம்: ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மீண்டும் கட்டண குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது. ரூ. 499 கட்டணத்தில் இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலிருந்தும் மற்றொரு இடத்துக்கு இந்நிறுவன விமா னத்தில் பயணிக்க முடியும். இந்த கட்டண சலுகையில் எரிபொருள் சர்சார்ஜ் அடங்கும். ஆனால் பிற வரிகள் மற்றும் கட்டணங்கள் தனி.
இந்த சலுகையைப் பெற செப்டம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை முன் பதிவு செய்ய வேண்டும். ஆனால் பயண தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் அக்டோபர் 24 வரையாகும். இந்த காலத்தில் மேற்கொள்ளும் பயணத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விடுமுறை நாள்களில் பயணத்துக்கு முன்பதிவு செய்யும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே இத்தகைய சலுகை அறிவிக்கப்பட்டதால், முன் பதிவு செய்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைமை வர்த்தக அதிகாரி கனேஸ்வரன் அவிலி தெரிவித்துள்ளார்.
இத்தகைய சலுகை அறிவிக்கப் பட்டதன் மூலம் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயண செலவை வாடிக்கையாளர்கள் குறைத்துக் கொள்ள முடியும் என்று நிறுவனம் தெரிவித்தது.
கடந்த வாரம் இதேபோல ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 100 கட்டணத்தில் டிக்கெட் வழங்கப் போவதாக அறிவித்தது. ஏர் இந்தியா தினத்தைக் கொண்டாடுவதற்காக இந்த சலுகையை அந்நிறுவனம் அறிவித்ததால், ஒரே சமயத்தில் வாடிக்கையாளர்கள் விமான இணைய தளத்தைப் பயன்படுத்தியதால், ஏர் இந்தியா இணைய தளம் சில மணி நேரம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home