22 September 2014

இரண்டு கொடுத்தால் பத்து கிடைக்கும்!



‘‘பிரசவ வலி, மகிழ்வின் முகவரி. பிறந்து, வளரும் காலத்தில் அது சிறப்புக் குழந்தை என்று அறிந்தால் ஆரம்பிக்கும் வலியை தாய் உயிர் இருக்கும்  வரை சுமக்கிறாள். பெற்ற குழந்தையை தாயன்புக்கு வெறுக்கத் தெரியாது. அதுவே ஆழமான அன்பாக மாறும் போது தாயின் போராட்டம் சிறப்புக்  குழந்தையையும் சாதனையாளராக்குகிறது. அன்பைவிட பெரிய மந்திரமோ, மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையே. சிறப்புக் குழந்தைகளின்  முதல் தேவை அன்பு... கூடுதல் அன்பு. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சமே’’ என்கிறார் குழந்தைகள் மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவியல் நிபுணர்  வினோதினி.

‘‘காலத்தின் கைகளில் எல்லாவற்றையும் மாற்றி எழுதும் எழுதுகோல் இருக்கிறது என்று சொல்வார்கள். சிறப்புக் குழந்தைகளைப் பற்றிய பார்வையும்  பெற்றோரின் அறியாமையுமே இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. குழந்தையின் குறைபாட்டை வெளியில் சொல்வதையே அவமானமாகக்  கருதுகிறார்கள் பலர். குழந்தையின் இயல்பான வளர்ச்சிக்கு எதிரி அந்த மனநிலையே.   சிறப்புக் குழந்தைகளை லூசு’, ‘மென்டல்என தன்னம்பிக்கையை சிதைக்கும் விதமாக அழைப்பது, ஒதுக்கி வைப்பது, குடும்பத்தின் அவமானச்  சின்னமாக கருதுவது - இவைதான் பல இடங்களில் நடக்கின்றன. குடும்பத்தின் அன்பை இழக்கும் இக்குழந்தைகள் அதற்கான இல்லங்களுக்கோசிறப்புப் பள்ளிகளுக்கோ தள்ளப்படுகிறார்கள். இப்படியான சமூகப் பார்வையை மாற்ற வேண்டிய பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு.

அழுகையும் பார்வைப் பரிமாற்றமும் கூட குழந்தையின் செல்ல சமிக்ஞைதான். 3 மாதங்களில் தலை நிற்க வேண்டும்... 6 மாதத்தில் குப்புற விழ  வேண்டும்... ஒரு வயதில் ஒரு வார்த்தை, 2 வயதில் 2 வார்த்தைகள் அடங்கிய வாக்கியம் பேச வேண்டும்... வயதுக்கு ஏற்ற வளர்ச்சி  குழந்தைகளிடம் இருக்கிறதா என்பதை அவ்வப்போது கவனிக்க வேண்டும். சளி, வைரஸ் காய்ச்சலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட  பெற்றோர் குழந்தைகளின் குறைபாடுகளுக்கு அளிப்பதில்லை. அவை கண்டு கொள்ளப்படாமல் விடுவதால், வாழ்வை எதிர்கொள்ள முடியாதவர்களாக  மாற்றப்படுகிறார்கள்.  

தசையில் குறைபாடுள்ள குழந்தைக்கு பென்சில் பிடித்து எழுதுவதில் சிக்கல் உண்டாகும். பேச்சுக் குறைபாடுள்ள குழந்தை, தான் எதிர்கொள்ளும்  சிக்கல்களால் மன அழுத்தத்துக்கு ஆளாகும். அதனால் இயற்கை உபாதைகளை முறைப்படுத்த முடிவதில்லை. படிப்பதைப் புரிந்து கொள்வதில்  சிக்கல், மற்ற குழந்தைகளுடன் பழகுவதில் முரண்பாடு என சுற்றம் நரகமாக மாற்றப்படும். பேச்சுக் குறைபாடு சரி செய்யப்படாத நிலையில் அனைத்து  வளர்ச்சிகளுமே பின்தங்கும் சூழல் உருவாகிறது.

வளர்ச்சிப் படிநிலைகளில், காணப்படும் குறைபாட்டின் அடிப்படையில் குழந்தைகள் உளவியல் நிபுணரிடம் நுண்நரம்பியல் அறிகுறிகள் குறித்து  சோதனை மேற்கொள்ளலாம்... பிரச்னையின் தாக்கத்தை உணரலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், மூளை தூண்டுதலுக்கான பயிற்சிகள்  மூலம் சரி செய்ய முடியும். மூளையில் ஏற்படும் சில தடைகளின் காரணமாக எழுதுவது, படிப்பது, கணக்கிடுவது என கற்றல் சார்ந்த பிரச்னைகள்  உருவாகும். அவற்றையும் தடுக்கலாம்.

உடலில் உள்ள நரம்பு, தசை ஆகியவற்றுக்கு பயிற்சி அளித்து மூளைத்திறன் தூண்டப்படுகிறது. உடல் சார்ந்த செயல்பாடுகள் இதன் மூலமே  துரிதப்படுத்தப்படுகின்றன. பிரசவத்தின் போது போதிய அளவு பிராண வாயு கிடைக்காததால், குறை மாதத்தில் பிறந்ததால், நெருங்கிய உறவில்  திருமணம் செய்வதால் உண்டாகும் மரபணு கோளாறால், எடை குறைவால் குழந்தைகளுக்கு மூளைத்திறன் பாதிப்பு ஏற்படுகிறது. வளர்ச்சிப்  படிநிலைகளில் பின்தங்கவும் இவையே காரணம். குறைபாட்டை உணர்வதுதான் முதல்படி. குழந்தைகள் மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவியல்  நிபுணரின் துணையுடன் குறைபாட்டை மதிப்பீடு செய்வது அடுத்த கட்டம். குறைபாடு என்ன என்பதை மிகச் சரியாக கண்டறிந்த பிறகே அதற்கான தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும்.

இப்படி ஆய்வு செய்து தனது குழந்தைக்கு குறை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் காலம் காலமாக பெற்றோரிடம் மிகக்  குறைவாகவே இருக்கிறது. பிரச்னையை ஏற்றுக் கொள்ளும் போதே குழந்தைக்கு 10 வயதுக்கு மேல் ஆகிவிடுகிறது. பிறகு மருத்துவரிடம் செல்லும்  போதும் என் குழந்தைக்கு எதுவும் இல்லை என டாக்டர் சொல்ல வேண்டும்என்று தாயின் மனம் பரிதவித்தபடிதான் இருக்கும். மதிப்பீட்டுக்குப் பிறகுமருத்துவர்கள் குறிப்பிடும் குறைபாடுகள் குழந்தைக்கு இருப்பதை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும். முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போதுதான்  குழந்தையை புரிந்து கொள்ளும் சகிப்புத்தன்மையும் அதற்கான மாற்று வழிகளைத் தேடும் ஆர்வமும் உண்டாகும்.

இந்த உலகில் தீர்க்க முடியாத பிரச்னை என்று எதுவும் இல்லை. குறைபாடுகள் உறுதி செய்யப்பட்ட பல குழந்தைகள் தொடர் முயற்சி, பெற்றோரின்  ஊக்கம், சமூகத்தின் பாராட்டுகளைச் சுமந்து சாதனைச் சிகரங்களை எட்டியிருக்கிறார்கள். இப்படியான ஒரு குழந்தை சாதனை படைத்தால்பெற்றோருக்கு அதைவிடப் பேரானந்தம் வேறு என்ன வேண்டும்? குழந்தையிடம் காணப்படும் அதீத அறிவை பாராட்டுவது போல, சிறுசிறு  குறைபாடுகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிந்ததை ஏற்றுக் கொள்ளும் தெளிவு அவசியம். அடுத்த கட்டமாக குழந்தையுடன்  இணைந்து பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறு குறைந்த அவகாசத்தில் குழந்தைகளிடம் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்ப்பதே. திருப்திப்படாத சூழலில்  குழந்தைகளுக்கு அளிக்கும் பயிற்சியை நிறுத்தி விடுவார்கள்... பயிற்சியாளரை மாற்றி விடுவார்கள்.  பேச்சில், கற்றலில், மூளையில், உடலில் என எந்தக் குறைபாடாக இருந்தாலும் மாய மந்திரங்கள் போல உடனே சரி செய்ய முடியாது. மெல்ல  மெல்லதான் மாற்றத்தை உருவாக்க முடியும். இது மாத்திரைகளால் குணமாக்கும் பிரச்னையும் அல்ல.

பெற்றோரின் அன்பு, சுற்றத்தாரின் ஆதரவு, ஆசிரியரின் புரிதல், சக நண்பனின் தோழமை, பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, அட்டென்ஷன் தெரபி  என பல உதவிகள் இது போன்ற குழந்தைகளுக்குத் தேவை. உடலையும் மூளை செயல்பாட்டையும் இணைத்து முன்னேற்றத்தை நோக்கி மெல்ல  நகர்வதற்கான பயிற்சிகள் ஒரே இடத்தில் கிடைத்தால் அலைச்சல் மிச்சம் ஆகும். இந்தக் குழந்தைகளை பார்த்து யாரும் பரிதாபப்படத்  தேவையில்லை. சாதாரண வாழ்க்கை வாழ, பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை வலிமை பெறச் செய்ய உதவியாக இருப்பதைத்தான் இந்தக்  குழந்தைகள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்.

விருப்பத்தையும் தனித்திறனையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் போது இந்தக் குழந்தைகளின் மனம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. அந்த மகிழ்ச்சி  அவர்களது உடலில், மனதில் மிகப்பெரிய மாயத்தை உருவாக்குகிறது. சத்தான உணவும், ஆரோக்கியமான சூழலும், அன்புடன் கூடிய அரவணைப்பும்மனதுக்கு பிடித்த விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சாதாரணக் குழந்தையிடம் காட்டும்  அன்பைவிட, இவர்கள் கூடுதல் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அன்பை இரண்டு மடங்காகத் தந்தால், பத்து மடங்காக திரும்பக் கிடைக்கும்  என்றால் யாராவது முடியாது என்று சொல்வோமா?’’

 

நன்றி குங்குமம்தோழி
_அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home