16 September 2014

வேலியற்ற சிந்தனை

மனம் மயங்குதே...டாக்டர் சுபா சார்லஸ்

அம்மா, அப்பா, திருமணமாகி 2 பிள்ளைகளைப் பெற்ற அவர்களது மகள், அந்தக் குழந்தைகள் என என்னைச் சந்திக்க வந்தது அந்தக் குடும்பம். அந்த மகளுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை. பால் குடிக்கிற வயதில் ஒரு ஆண் குழந்தை. மகள் முகத்தில் கோபம் கொப்பளிக்க, அம்மாவோ அழுகையை அடக்கிக் கொண்டு என் எதிரே உட்கார்ந்திருந்தார்.

அப்பாதான் முதலில் பேச்சைத் தொடங்கினார். அழுகை, ஆற்றாமை, கோபம், வெறுப்பு என எல்லாம் கலந்த உணர்வுகளுடன் உடைந்து பேசினார்.‘‘கிளியை வளர்த்துக் குரங்கு கையில கொடுத்துட்டோம் மேடம்... இவ எங்களுக்கு ஒரே பொண்ணு. கண்ணுக்குள்ள வச்சு பொத்திப் பொத்தி வளர்த்தோம். படிப்பு, அழகு, சமையல்னு எதுலயும் இவகிட்ட ஒரு சின்ன குறைகூட சொல்ல முடியாது. வசதிக்கும் குறைச்சலில்லை. சீர், செனத்தி, கார், வீடுனு எல்லாம் கொடுத்துதான் கல்யாணம் பண்ணி வச்சோம். அழகழகா ரெண்டு குழந்தைங்களும் ஆச்சு. அந்தாளுக்கு இத்தனைக்குப் பிறகும் வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருக்கு. இந்தக் கொடுமையை நாங்க எங்க போய் சொல்றது... என் பொண்ணு என்ன பாவம் பண்ணினா?’’ - அதற்கு மேல் பேச முடியாமல் துக்கம் அவர் தொண்டையை அடைத்தது.

‘உங்க பொண்ணுக்கு ரொம்பக் கோபம் வருமோ?’ என்றேன். ‘இல்லை’ என்றார்.‘வீட்டுக்காரரோட அடிக்கடி சண்டை போடுவாங்களோ?’  என்றேன்.
‘இல்லவே இல்லை’ என்றார். இன்னும் நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் சொன்ன பதில்கள், அந்தப் பெண்ணை ‘மிஸ் பர்ஃபெக்ட்’ ஆகவே சித்தரித்தன. அவரது மகள் காவியாவிடம் பேசினேன்.  ‘‘அவர் ரொம்ப நல்லவர் மேடம். என் மேலயும் பிள்ளைங்க மேலயும் அளவுக்கதிகமா அன்பு
வச்சிருக்கார். எங்களுக்கு என்ன தேவைன்னாலும் மறுக்காம செய்யறார். இந்த ஒரு விஷயத்துல மட்டும்தான் அவரைப் புரிஞ்சுக்க முடியலை. அவர் தொடர்பு வச்சிருக்கிற பெண், இன்னொருத்தரோட மனைவி. அதைப் பத்தி என் மாமனார், மாமியார்கிட்டயும் சொல்லிப் பார்த்துட்டேன். ‘நீதான் பார்த்து நடந்துக்கணும்’னு சொல்லி விலகிட்டாங்க. அந்தப் பொண்ணை அவருக்குக் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியுமாம். எப்பவாவது ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேரும் போது, அவங்க கூட சேர்ந்து என் கணவரும் குடிப்பார். அப்ப என்னையும் குடிக்கச் சொல்வார். நான் மறுத்துடுவேன்.

அவருக்கு அதுதான் பிரச்னை. அந்தப் பொண்ணு அவர் கூட சேர்ந்து தண்ணியடிப்பா போல... நான் ‘முடியாது’னு சொல்றதாலதான் அவ பக்கம் போயிட்டாரோனு தோணுது... மத்தபடி எங்களுக்குள்ள எந்த விஷயத்துலயும் பிரச்னை இல்லை. எங்களோட தாம்பத்ய உறவுலயும் குறை இல்லை... ஆனாலும், இந்த மனுஷனுக்கு புத்தி இப்படிப் போகணுமா? என் புருஷன் எப்போதும் என்னையே சுத்திச் சுத்தி வரணும்னு ஆசைப்பட்டேனே... நடக்கலியே...’’ - காவியாவின் பேச்சில் ஆத்திரமே மேலோங்கியிருந்தது.‘குடிக்க மறுப்பதால் இன்னொரு பெண்ணை நாடுவதா...’ - காவியா சொன்ன இந்த வார்த்தைகள் எனக்குப் பெரும் நெருடலாக இருந்தன. ‘உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் உண்டா? உங்க பொழுது எப்படிப் போகுது? ஓய்வு நேரத்துல என்ன செய்யறீங்க?’ என்ற என் கேள்விகளுக்கு காவியாவை முந்திக் கொண்டு பதில் சொன்னார் அவரது அம்மா.

‘‘அவ ரொம்பப் பாவம் மேடம். இந்தப் பிரச்னையாலயே அவளால வீட்டையோ, குழந்தைங்களையோ சரியா கவனிக்க முடியறதில்லை. அவளோட ஒரே பொழுதுபோக்கு போன்தான். சதா சர்வ காலமும் போன்ல பேசிட்டே இருப்பா...’’ என்றார். அம்மாவின் கவனிப்பு சரியில்லை என்பதை உணர்த்தியது அவரது குழந்தையின் தோற்றம். ஒன்றரை வயதில், 8 மாதக் குழந்தைக்கான வளர்ச்சி மட்டுமே இருந்தது. காவியாவின் அம்மா கொடுத்த குறிப்பில், அவரிடம் தோண்டித் துருவி விசாரணையைத் தொடங்கினேன். பிரச்னையின் தொடக்கப்புள்ளிக்கே காவியாதான் காரணம் என்பது தெரிந்தது.

நண்பர்கள் என்கிற பெயரில் சில பல ஆண்களுடன் காவியாவுக்குப் பழக்கம். அந்த நட்பில் காவியாவுக்குத் தவறான நோக்கம் எதுவுமில்லை. ஆனாலும், பொழுதுபோக்குவதற்காக ஆரம்பித்த அந்த நட்பு, ஒரு கட்டத்தில் அவரது திருமண உறவையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.  எப்போதும் யாரோ ஒரு ஆண் நண்பருடன் தொலைபேசியில் உரையாடல் அல்லது அவரை வீட்டுக்கே வரவழைத்து உட்கார வைத்து மணிக்கணக்காக அரட்டை... மிச்ச சொச்ச நேரத்துக்கு ஃபேஸ்புக், சாட்டிங், அது இதுவென வேறு தொடர்புகள்... அவரது இந்த அதீத நட்பு ஆர்வமானது, குழந்தைகளை, கணவரைக் கூட கவனிக்க விடாமல் உலகம் மறக்கச் செய்திருக்கிறது. காவியாவின் கணவர் இடத்தில் வேறொரு ஆண் இருந்திருந்தால், இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, பிரிவு வரை கொண்டு போயிருப்பார். ஆனால், அவர் சற்றே மென்மையான குணம் கொண்டவர் என்பதால், அமைதியாக விலகி இருந்திருக்கிறார்.

எப்போது நாம் நம் வாழ்க்கைத்துணை அல்லாத மூன்றாம் நபரிடம் ஒரு சதவிகிதம் அன்பை அதிகம் காட்டுகிறோமோ, அப்போதே நாம் நம்மைச் சுற்றியிருக்கிற வேலியை உடைத்தெறிகிறோம் என்று அர்த்தம். தனக்கான நேரம் இன்னொருவருக்குக் கொடுக்கப்படுவதை எந்தக் கணவனாலும்
மனைவியாலும் தாங்கிக் கொள்ள முடியாது. கணவன்-மனைவி உறவில் கீறல் போன்ற விரிசலை ஏற்படுத்துகிற இந்த விஷயம், போகப் போக பெரிய பிளவையே உண்டாக்கி, பிரிவு வரை கொண்டு போகும். காவியாவின் கணவர் கோபப்பட்டுக் கொந்தளிக்கத் தெரியாதவர் என்பதால், தன் வெறுப்பை யும் ஆற்றாமையையும் வேறு விதமாகக் காட்டியிருக்கிறார். தன்னுடைய இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்திருப்பதால், தனக்கான வேறு இடத்தைத் தேடிச் சென்றிருக்கிறார்.

‘நான் எல்லார்கூடவும் வெறும் ஃப்ரெண்டாதான் பழகறேன். எங்களுக்குள்ள எந்தத் தப்பான உறவும் இல்லை’ என காவியா சொன்ன மாதிரி அவரது கணவருக்கும் அவர் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிற அந்தப் பெண்ணுக்கும் இடையில் இருப்பதும் வெறும் நட்பாக ஏன் இருக்கக் கூடாது?
‘என் பொண்ணு சொக்கத் தங்கம்’ என அதுவரை மகளுக்காக கொடிபிடித்துக் கொண்டிருந்த காவியாவின் அப்பாவுக்கு பிரச்னைக்கான வேர் தெரிந்தது. அத்தனை நேரம் மகளுக்காக வாதாடியவர், அதற்குப் பின் அமைதியானார்.காவியாவுக்கு சில அறிவுரைகளைச் சொன்னேன்.

‘‘என் புருஷன் எப்போதும் என்னையே சுத்திச் சுத்தி வரணும்னு ஆசைப்படறதுல தப்பில்லை. ஆனா, அதுக்கு முன்னாடி நீ அவர்கிட்ட அப்படி நடந்து காட்டியிருக்கணுமில்லையா? கணவர் என்கூட நேரம் செலவழிக்கிறதில்லை. வேலை முடிஞ்சு வந்ததும் இன்னொருத்தி வீட்டுக்குப் போயிடறார்னு சொல்ற நீ, அவர் வரும்போது மூணாவது மனுஷங்களை வீட்டுக்குள்ள விட்டுட்டு, அவங்க கூட அரட்டை அடிச்சிட்டிருக்கிறது நியாயமா? உன் கணவர் இன்னொரு பெண்ணைத் தேடிப் போக நீதான் காரணம். ஒவ்வொரு வினைக்கும், அதுக்கு சமமானதும், எதிரானதுமான வினை ஒன்று நிச்சயம் இருக்கும். இந்த விஷயமும் அப்படித்தான். பயிர்களுக்கு மட்டுமில்லை... உயிர்களுக்கும் உணர்வுகளுக்கும் கூட பாதுகாப்பு வேலி அவசியம். ஒரு கட்டம் வரைக்கும் பெற்றோர், வேலியாக இருந்து நம்மைப் பாதுகாப்பாங்க. கல்யாணத்துக்குப் பிறகு கணவர் வேலியா இருப்பார்.

ஆனா, இது மட்டுமே போதாது. இது எல்லாத்தையும் மீறின சுயக்கட்டுப்பாடும் அவசியம். அடுத்தவங்க நம்மை சுதந்திரமா இயங்க அனுமதிக்கிறாங்கன்னா, நம்மைச் சுத்திப் போடப்பட்ட வேலியைத் தாண்டறதுக்கான அனுமதினு அர்த்தப்படுத்திக்கக் கூடாது. அது அவங்க நம்ம மேல வச்சிருக்கிற அன்பு, நம்பிக்கையோட பிரதிபலிப்புனு உணரணும். உனக்கான மனவேலியை நீதான் அமைச்சுக்கணும். அந்த வேலி, உன் கணவர், குழந்தைங்களைச் சுத்தி போடப்பட்டதா இருக்கணும். வேலியைத் தாண்ட நினைச்சா, உனக்குப் பாதுகாப்பா இருக்க வேண்டிய அதே வேலி, உனக்கே பாதகமா மாறும். நடந்ததை எல்லாம் மறந்து, புது வாழ்க்கையைத் தொடங்கு. உன் கணவர் உன்கிட்ட எப்படி இருக்கணும்னு விரும்பறியோ, அதை முதல்ல நீ செயல்படுத்திக் காட்டு. உன் மனவேலியை நீயே தாண்ட நினைக்கிறது, வேலியே பயிரை மேஞ்ச கதையா, உனக்கு எதிராதான் அமையும்...’’ - அந்த நீண்ட நெடும் அறிவுரை நிச்சயம் காவியாவுக்குள் மன மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையை அப்போதே அவரது கண்களில் பார்த்தேன்.

பயிற்சி

தான் கவனிக்கப்பட வேண்டும், தனக்கான முக்கியத்துவம் குறையக் கூடாது என்கிற எண்ணம் மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் இருக்கும். ஒரு வயதுக் குழந்தையிடம் கூட இதைப் பார்க்கலாம். தன் அம்மா, தன்னைக் கவனிக்காமல் வேறு யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தால், அந்தக் குழந்தைக்குப் பொறுக்காது. அம்மாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப சிணுங்கிச் சிணுங்கி அழும். அம்மாவின் முகத்தைத் தன் பக்கம் திருப்பும். அம்மாவின் அரவணைப்பு குறையும் போது சரியாக சாப்பிடாது, தூங்காது. அதை அத்தனை சுலபத்தில் அதனால் ஏற்றுக் கொள்ள முடியாது. பெரியவர்களுக்கும் இந்த மனநிலை இருப்பதைப் பார்க்கலாம். ஆக்ரோஷமான, கோபப்படுகிற கணவர்கள் என்றால், தன் வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவார்கள். காவியாவின் கணவர் போன்று மென்மையானவர் என்றால், வார்த்தைகளிலோ, வன்முறையான செயல்களிலோ வெளிப்படுத்தத் தெரியாமல் விலகிப் போவார். நமக்கான மனவேலியை நாம்தான் போட்டுக் கொள்ள வேண்டும். வேலி மட்டுமே பாதுகாப்பைக் கொடுத்து விடாது. வேலிக்குள்ளான நமது மன வீட்டுக்குள் யாருக்கு எந்த இடம் என்பதையும் நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் மூன்றாம் நபருக்கு நிச்சயம் இடமிருக்கக் கூடாது. மனவேலியை உறுதியாக அமைத்துக் கொண்டு விட்டால், உள்ளே பூத்து மலர்கிற உறவுகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home