4 September 2014

மின்சார கட்டணம் உங்களை மலைக்க வைக்கிறதா?

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடுகளில் மின்சார நுகர்வு பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மின் விளக்குகள், டிவி, மிக்சி, கிரைண்டர், பேன், ரெப்ரிஜிரேட்டர், ஏசி உபகரணங்கள் அதிகரித்து விட்டன. கூடவே இன்டக்ஷன் ஸ்டவ், கம்ப்யூட்டர்கள், லேப்டாப், செல்போன் என்று பலதரப்பட்ட பொருட்கள் மின்சார தேவைகளை இன்று அதிகரிக்க செய்துள்ளது. இதனால் மின்கட்டணம் என்பது பெரும் தொகையாக மாறி வருகிறது.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மின் வாரியம் கூறினாலும் அதில் ஆர்வம் காட்டுவோர் குறைவு. தரமான மின்சார உபகரணங்கள், ஸ்டார் குறியீடுகள் அதிகம் உள்ள ஏசி, ரெப்ரிஜிரேட்டர் போன்றவைகளை பயன்படுத்தலாம். மின்சார உபயோகத்தை குறைக்க சில வழிகளை கையாளுவதன் மூலம் மின் கட்டணத்தை கணிசமாக குறைக்க இயலும்.

* இயற்கையாக கிடைக்கின்ற காற்றும், வெளிச்சமும் வீட்டிற்கு கிடைக்கும் வகையில் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். இள வண்ணங்களை பெயின்ட்டுக்கு தேர்வு செய்ய வேண்டும். திரைசீலைகளை அகற்றும் விதத்தில் பொருத்த வேண்டும். விளக்குகள், பேன் போன்றவற்றை உபயோகம் தீர்ந்துவிட்டால் உடனே நிறுத்திவிட வேண்டும்.

* வீட்டிற்கு வெளியே இரவு வெளிச்சத்திற்கு ஒரு விளக்கை மட்டும் பயன்படுத்துவது நல்லது. காம்பவுண்ட் சுவர்களில் வரிசையாக விளக்குகளை பொருத்துவதை தவிர்த்து ஓரிரு விளக்குகளை பயன்படுத்தலாம்.

* டி.வி, கம்ப்யூட்டர் போன்றவற்றை பயன்பாடு முடிந்தால் சுவிட்ச்போர்டில் ஆப் செய்ய வேண்டும். ரிமோட் மூலம் ஆப் செய்தால் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

* மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துகின்ற பிஇஇ ஸ்டார் லேபிள்கள் உள்ள உபகரணங்களை பயன்படுத்துவது நல்லது. ரெப்ரிஜிரேட்டர்களுக்கு ஐந்து ஸ்டார் இருப்பது அவசியம்.

* அளவுக்கு அதிகமான பொருட்களை ரெப்ரிஜிரேட்டரில் அடைக்க கூடாது. அடிக்கடி திறந்து மூடக்கூடாது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரெப்ரிஜிரேட்டரை ஆப் செய்து வைக்கலாம்.

* நாள் முழுவதும் செயல்படுகின்ற ரெப்ரிஜிரேட்டர்களுக்கு 2 யூனிட் மின்சாரம் தேவை. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நிறுத்தி வைப்பதால் பொருட்களுக்கு கேடு வராது, மின்சார செலவும் குறையும்.

* சாதாரண டியூப்லைட்டுகள் 60 வாட்ஸ்சில் எரியும்போது, பருமன் குறைந்த டியூப்லைட் 28 வாட்ஸ்சிலேயே பிரகாசம் அளிக்கும். இதனால் கட்டணம் 50 சதவீதம் வரை குறையும்.

* சாதாரண பேன்களில் 160&120 வாட் மின்சார தேவை இருக்கும். அதுவே பைவ் ஸ்டார் பேன்கள் உபயோகிக்கும்போது மின்சார செலவு பாதியாக குறையும்.

* 1000 வாட் உள்ள இஸ்திரிபெட்டி ஒரு மணி நேரம் பயன்படுத்தினால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். இரண்டு மூன்று நாட்களுக்கு சேர்த்து ஒரு நாள் அயர்ன் செய்யும்போது மின்செலவை குறைக்கலாம்.

* 120 வாட் உள்ள கம்ப்யூட்டர் 8 மணி நேரம் வேலை செய்தால் ஒன்றேகால் யூனிட் மின்சாரம் செலவாகும். அதனை ஷட்டவுன் செய்த பின்னர் சுவிட்ச் போர்டிலும் ஆப் செய்வதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

* சாதாரண வாட்டர் ஹீட்டர்களால் ஒரு மணி நேரத்திற்கு 3 யூனிட் மின்சாரம் செலவாகும். சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவது சிறப்பான ஒன்று.

* ஜீரோ வாட் பல்புகள் எல்லாம் ஜீரோ வாட் அல்ல என்ற உண்மையை உணர வேண்டும். 15 வாட் முதல் 28 வாட் பல்புகள்தான் ஜீரோவாட் பெயரில் வருகிறது. இவற்றுக்கு வெளிச்சம் குறைவு என்பதற்காக மின்சாரம் குறைவாக இவற்றுக்கு செலவாகும் என்று கருத கூடாது. ஜீரோவாட் பல்புகளுக்காக மாதம் 21 யூனிட் வரை மின்சாரம் செலவாகும். அதே இடத்தில் ஒரு வாட் எல்இடி (லைட் எமிட்டிங் டையோட்ஸ்) பல்ப் பயன்படுத்துவதால் மின்சார பயன்பாடு 1.5 யூனிட்டாக குறையும்.

* குண்டு பல்புகளுக்கு பதில் சிஎப்எல் (காம்பாக்ட் புளோரசன்ட் லாம்ப்) பல்புகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. சாதாரண பல்புகள் எடுத்துக்கொள்கின்ற மின்சாரத்தில் 10 சதவீதத்தை மட்டுமே வெளிச்சமாக கொடுக்கிறது. மற்றவை வெப்பமாக மாறுகிறது. சிஎப்எல் அதுபோன்று அல்ல.

* டியூப்களுக்கு எலெக்ட்ரானிக் சோக்குகள் பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் வெளிச்சத்தை உமிழ்கின்ற விளக்குகளையும் வாங்கி பயன்படுத்தலாம். குழந்தைகள் படிக்கின்ற அறை, சமையல் அறை போன்றவற்றில் இது பயனை தரும்.

-
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home