2 September 2014

மழைக்காலம் வந்தாச்சு குழந்தைகள் பத்திரம்.....



வெயில் காலம் வந்தா மட்டும் தான் பிரச்னையா? மழைக்காலம் வந்தா அதை விடப் பிரச்னைதாங்க என பெற்றோர்கள் புலம்ப ஆரம்பிச்சாச்சு. மழை சீசன் வந்தாலே ஆஸ்பத்திரியில் குழந்தையும் கையுமாக பலரைப் பார்க்கலாம். பெரும்பாலும் சளி, இருமல், காய்ச்சல் பிரச்னைகள். காரணம் கிளைமேட் மாற்றம் தான்.
புது மழைல நனைஞ்சா ஆகாதுன்னு பழைய ஆட்கள் சொல்றதைக் கேட்டிருப்பீங்க. இந்த சீசனை எப்படி சமாளிக்கிறது? குழந்தைகளை நோய்களிலிருந்து எப்படி பாதுக்காக்கிறது

குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுப்ரமணியன்

மழைக் காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கிய விஷம். பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு எளிதில் உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முதல் காரணம் கொசு தான். மழைக்காலத்தில் கொசுக்களால் மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவை பரவும். எனவே மழைக்காலத்தில் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொசுவலை மற்றும் கொசுக்களை விரட்டுவதற்கான பிரத்யோக சாதனங்கள் மூலம் கொசுக்களை குழந்தைகளிடம் நெருங்க விடக்கூடாது. அவ்வாறு செய்வதன் மூலம் கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தவிர்க்க முடியும்

மேலும் அதிக ஈரப்பதத்தினால் கால்களில் பூஞ்சை நோய்களும் வர வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளின் சருமங்களில் அதிக ஈரப்பதம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மழைக்காலத்தில் வாட்டர் போன் இன்பெஃக்ஷன் என்று சொல்ல கூடிய எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதற்கும் வாய்ப்புள்ளது

கோடை காலத்திலிருந்து மழைக்காலத்திற்கு சீசன் மாறும் போது நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மாத்திரைகளோ, ஊசிகளோ போடுவதற்கு பதிலாக சரியான முறையில் பராமரிப்பதன் மூலமும் நோய்கள் வராமல் தடுக்கலாம். கால நிலை மாறும் போது  பெரியவர்கள் தாங்கிக் கொள்வார்கள், ஆனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் எளிதில் தாக்கிவிடும்.
இதை தவிர்ப்பதற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சாப்பிடக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம். சரியான விகிதத்தில் உணவுகளை கொடுக்க வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு திறனை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதிகமாக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்

மேலும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத போது உடனே அதற்கான மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரைப்படியே மருந்து கொடுக்க வேண்டும். நாமே மருந்து கொடுக்கும் முடிவை எடுக்க கூடாது.   

சீசன் மாறும் போது குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்றவை வருவது சகஜம் தான். ஆனால் சரியான முறையில் குழந்தைகளை பாதுகாத்தால் இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம். குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காதில் குளிரான காற்று படக்கூடாது. அதனால் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்வெட்டர், குல்லா போன்றவற்றை போட்டு விடுவதன் மூலம் குளிரிலிருந்து பாதுகாக்கலாம். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கால்களில் சாக்ஸ் போட வேண்டும்.

சின்ன குழந்தைகளுக்கு காது மற்றும் கால் பகுதி அதிகம் குளிராக ஆகாதபடிக்கு பாதுகாப்பான உடைகளை அணிவிக்கவேண்டும். தண்ணீரை சுட வைத்து கொடுப்பதன் மூலம் குளிர் காலங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்குதலை தடுக்கலாம்.
மழையிலே நனைய விடக்கூடாது. நனைந்தால் உடனே துவட்டி விடவும். குளிர்பானங்கள், ஜஸ்கிரீம் போன்றவற்றை குளிர் காலங்களில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இனிப்புகளை அதிகமாக உண்ண கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் உடல் வெப்பத்தை சரியான அளவில் பாதுகாக்க வேண்டும்

குழந்தைகளுக்கு மினி ஸ்கர்ட், சிலீவ் லெஸ் போன்ற டிரஸ்களை போடாமல் உடம்பை முழுவதுமாக மூடும் படியாக ஆடை அணிவிக்க வேண்டும். மெல்லிசான ஆடைகளை போடாமல் நல்ல குளிருக்கு அடக்கமாக போட்டுவிடுங்க.

குளிர் காத்துப்பட்டா நெஞ்சு சளி பிடிக்கும்னு சொல்வாங்க. மாலை நேரங்களில் வெளியில் அலைய விடக்கூடாது. அப்படியே வெளியே போகிற மாதிரி இருந்தால் காதுக்கு ஸ்கார்ஃப் கட்டி கூட்டிப் போங்க. மழை சீசன் என்பதால் குழந்தைகளை வெளியே கூட்டிப்போனால் குடை அல்லது ரெயின் கோட் கட்டாயம் எடுத்துட்டுப்போங்க.

உணவில் காரத்துக்கு மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது. மிளகு ரசம், மிளகு சாம்பார் இப்படி சாப்பிடக்கொடுக்கலாம். கொள்ளு ரசம், இஞ்சி ஆகியவை உடம்பின் சூட்டை அதிகரிக்கும். சளிப் பிடிக்காம பார்த்துக்கும். சில்லுன்னு ஆறிப்போன உணவுகளைக் கொடுக்காமல் சூடான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
நன்றி: தினகரன்.


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home