11 September 2014

பெண்களைத் தாக்கும் புது ஆபத்து




‘‘அடடா, பத்தாங்கிளாஸ் படிக்குதுன்னாங்க... ஆனா, அந்த ஹீரோயின் தளதளன்னு காலேஜ் பொண்ணு மாதிரி இருக்குப்பா!’’ - இப்போதெல்லாம்  நம்மிடையே அடிக்கடி எழுகிறது இந்த கமென்ட். நடிகைகள் மட்டுமல்ல... பதின்ம வயதின் தொடக்கத்தில் உள்ள பள்ளிக்கூட மாணவிகள் பலரும்  இப்போது இருபதுக்கு மேல் வயதைச் சொல்லும்படி இருக்கிறார்கள். அப்போதைக்கு அந்த அதீத வளர்ச்சி சுற்றியிருப்பவர்களால் பாராட்டப்படுகிறது.  இதனால் அந்தந்த பெண்களுக்கும் அதில் பெருமை வந்துவிடுகிறது.

ஆனால், ‘‘நிஜத்தில் இப்படிப்பட்ட வளர்ச்சி, பெண்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து உயிருக்கே உலை வைக்கும்’’ என அதிர்ச்சி தருகிறார் கௌசல்யா  நாதன். சென்னையைச் சேர்ந்த ‘லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்’ நிபுணர் இவர். ‘‘பொதுவாக அடுத்தவரிடமிருந்து நம்மைத் தொற்றிக் கொள்ளாமல்,  நமது உடல் உறுப்புகள் காலத்தால் பழுதாவதால் வரும் நோய்களை என்.சி.டி (Non Communicable Diseases) என்போம். மாரடைப்பு, நீரிழிவு, உயர்  ரத்த அழுத்தம், ஆஸ்துமா, கேன்சர் போன்றவை எல்லாம் அப்படிப்பட்டவைதான்.

உலக அளவில் 40 வயதுக்குள்ளாகவே என்.சி.டி நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின்  கணக்கெடுப்பு. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நோய்களால் நிகழும் இறப்பு, 52 சதவீதம். அதிலும் உடலை சீக்கிரமே முதிர்ச்சி அடைய வைக்கும்  உடல் பருமனும், கொலஸ்ட்ரால் பிரச்னையும் ஆண்களை விட பெண்களிடம்தான் அதிகம்’’ என அடிப்படைகளை விளக்கும் டாக்டர் கௌசல்யா,  வயதாவதை முடிந்தவரை தள்ளிப் போடும் ‘ஆன்டி ஏஜிங்’ நிபுணரும் கூட. இந்தியாவில் இளைஞர்களிடம் உள்ள ‘இளவயது வயோதிகம்’ குறித்து  ஆராய்ச்சி செய்து வருகிறார் இவர்.

‘‘வளர்ச்சி என்பதற்கும் முதிர்ச்சி என்பதற்கும் வித்தியாசம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 13 வயதில் ஒரு பெண் 20 வயது மாதிரி  தெரியும்போது, நாம் அதை பாஸிட்டிவாகப் பார்க்கிறோம். 9 வயதில் பெண்கள் பருவமடைந்து விடுவதைக் கூட இயல்பாக எடுத்துகொள்ளத் துவங்கி  விட்டோம். ஆனால், அந்தப் பெண் 20 வயதில் எப்படி இருப்பாள் என சிந்திக்கத் தவறுகிறோம். உண்மையில் நம் உடலின் உள்ளுறுப்புகளுக்குத்தான்  முதலில் வயதாகிறது. அது 3, 4 ஆண்டுகள் கழித்தே வெளித்தோற்றத்தில் பிரதிபலிக்கிறது.

எனவே, நம் கண்ணால் 20 வயது என்று மதிப்பிடக் கூடிய பெண், உள் உறுப்புகளின் அடிப்படையில் இன்னும் கூட ‘முதியவளாகி’ப் போயிருக்கலாம்.  பிற்காலத்தில் இது உடல் பருமன், பாலிசிஸ்டிக் ஓவரி எனப்படும் கருப்பை பிரச்னை, டைப் 2 டயபடீஸ், சுவாசக் கோளாறுகள், இதய நோய்கள் என  ஏகப்பட்ட பிரச்னைகளைக் கொண்டு வரலாம். கருப்பை சீக்கிரமே வயோதிகமடைந்து, பிள்ளைப் பேறு கூட இல்லாமல் போகலாம்.

‘சரி, சில பெண்கள் சீக்கிரமே வளர்ந்து விடுகிறார்கள்... அதற்கு என்ன செய்வது?’ எனத் தப்பித்துக் கொள்ள முடியாது. இது ஒன்றும் ஜெனிட்டிக்  பிரச்னையோ நோய்த் தொற்றோ அல்ல. முழுக்க முழுக்க நம்முடைய அறியாமையால் நாமே உருவாக்கிக்கொள்கிற பிரச்னை. ஒரு மனிதனின்  வாழ்நாள் முழுவதும் உடன்வரக் கூடிய கொழுப்பு செல்கள், 5 வயதுக்குள்ளாகவே உருவாகிவிடுகின்றன. நம்மூர் தாய்மார்கள், குழந்தை  கொழுகொழுவென்றிருந்தால்தான் ஆரோக்கியம் என நினைத்து, கண்டதையும் திணித்து அந்த கொழுப்பு செல்களை அதிகமாக்கிவிடுகிறார்கள்.

சமீபத்தில் நான் சந்தித்த ஒரு டீன் ஏஜ் பெண் அவள்... உடல் பருமன் அவளின் முதல் பிரச்னை. தன் அம்மாவையே எதிரியாகப் பார்ப்பது இரண்டாம்  பிரச்னை. காரணம் ஒன்றே ஒன்றுதான்... தோற்றத்தில் அவளை விட அவள் அம்மா இளமையாகத் தெரிகிறார். ‘யாரு... உங்க அக்காவா?’ என்ற  விசாரிப்புகள் அவளை மன அழுத்தத்துக்கே தள்ளியிருக்கின்றன. மேலே நாம் சொன்ன உடல் பிரச்னைகளோடு, இம்மாதிரியான உளவியல்  பிரச்னைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மாதிரியான அம்மா - பெண்கள் இன்று காணுமிடமெல்லாம் பெருகிவிட்டார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அந்தக் கால வளர்ப்பு முறைக்கும்  இந்தக் கால வளர்ப்பு முறைக்கும் உள்ள வித்தியாசமே! வெளிநாட்டு மக்கள் இங்கு வந்து செட்டில் ஆனால் கூட அவர்களின் உணவுப் பழக்கத்தை  விட்டுவிட்டு, இங்குள்ள இட்லி, தோசையை சாப்பிடப் பழகிக் கொள்கிறார்கள். காரணம், அவர்களின் உணவுகள் இங்கே ஃப்ரெஷ்ஷாக கிடைக்காது.  அப்படியே கிடைத்தாலும் இந்த ஊர் சூழலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதில் நிச்சயம் இருக்காது.

ஆனால், நம் ஊர் குழந்தைகளைப் பாருங்கள்... இங்கே கிடைக்காத - கிடைத்தாலும் ஆரோக்கியமில்லாத - நம் தட்பவெப்பத்துக்கு கொஞ்சமும்  பொருத்தமற்ற ஃபாரீன் உணவுகளுக்குத்தான் அடிமையாகிக் கிடக்கிறார்கள். வளரும் காலத்திலும் பெண் குழந்தைகளிடம், ‘உனக்கு படிப்புதான்  எல்லாமே’ என்று சொல்லி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். உடல் உழைப்பு இல்லை... சின்னச் சின்ன வீட்டு வேலைகள் கூட செய்வதில்லை.  புத்தகமே கதியாகக் கிடப்பதும், போரடிக்கும்போது ஃப்ரிட்ஜைத் திறந்து எதையாவது மேய்வதும் அவர்களின் வழக்கமாகிறது. இதனால் திருமண  வயதில் உடல் பருமன் வந்து சேருகிறது. அப்போது அதே அம்மா அப்பா, ‘வரனே அமையவில்லை... உடம்பைக் குறை’ என்கிறார்கள். இது எந்த  விதத்தில் நியாயம்?’’ எனக் கேள்வி எழுப்பும் கௌசல்யா, இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகத் தரும் டிப்ஸ்கள்தான் ஹைலைட்...

‘‘பெண்கள் எல்லோருக்கும் ‘தான் அழகாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருக்கும். அது அவர்களின் பிறப்புரிமை. இதில் கூச்சப்படவோ குற்ற  உணர்வு கொள்ளவோ எதுவுமில்லை. அழகுக்காக பெண் குழந்தைகள் எதைச் செய்தாலும் பெற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் அது  வெளிப்புற ஆபரணங்களையும் க்ரீம்களையும் வாங்கிக் கொடுப்பதாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான டயட், தேவையான உடற்பயிற்சியைத்  தருவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அழகு உள்ளிருந்து வெளிப்படும். உள்ளிருந்து வெளிப்படும் அழகுக்குப் பெயர்தான் ஆரோக்கியம். குழந்தை  வெகு குண்டாக இருப்பதும், சீக்கிரமே நெடுநெடுவென வளர்வதும், விரைவில் பருவமடைவதும் வளர்ச்சியல்ல... முதுமை என்பதைத் தெரிந்துகொள்ள  வேண்டும்’’ என்கிறார் கௌசல்யா அக்கறையோடு!

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home