கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசிகள்
|
நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுபவை தடுப்பூசிகள். சரியான நேரத்தில் அவற்றைப் போடத் தவறுவது எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட முக்கியமானது தவறான நேரத்தில் போடுவதும். குறிப்பாக கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘‘குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்களுக்குள் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட வேண்டும். தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, புட்டாலம்மை உள்ளிட்ட பல அம்மைத் தொற்றுகளுக்கு எதிராகப் போராடக் கூடியது இந்தத் தடுப்பூசி. ஒருவேளை 10 முதல் 12 மாதங்களில் இந்த ஊசி போடப்படாவிட்டால், 13 வயதுக்குள் போடப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம். அதைத் தவிர்த்து, திருமண வயதில் போட நினைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் அப்படிப் போட நேர்ந்தால், அந்த ஊசியைப் போட்டதை அடுத்து, 4 மாதங்கள் முதல் 1 வருடம் வரை கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அந்தக் காலக்கட்டம் வரைக்கும் அந்தத் தடுப்பூசியின் தாக்கம் உடலுக்குள் இருக்கும் என்பதே காரணம். இந்த ஊசி போடப்படாத பட்சத்தில் அந்தப் பெண்ணுக்குக் பிறக்கும் குழந்தைக்கு கண்பார்வை பாதிப்பு, காது கேளாமை, மூளைக் காய்ச்சல், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவை வரலாம். நரம்பில் உருவாகும் செல்கள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பல நோய்களும் வரலாம். கர்ப்பிணிகள் தவிர்க்கக் கூடாத இன்னொரு ஊசி டெட்டனஸ் டாக்சைட். பிரசவ காலத்தில் ஏற்படுகிற டெட்டனஸ் தொற்றானது, நஞ்சுக் கொடியைத் தாக்கி, குழந்தை இறந்து போகும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தாயின் உயிருக்கும் ஆபத்து உண்டு. கர்ப்ப காலத்தில் 2 டோஸ் போடக் கூடிய இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது. டைஃபாய்டு, நிமோனியா காய்ச்சல், ஹெபடைட்டிஸ் பி போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை கர்ப்ப காலத்தில் போடவே கூடாது. கணவருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று இருப்பது தெரிந்தால், அதன் மூலம் மனைவிக்கும் பாதிப்பு வரலாம். எனவே அதற்கெதிரான தடுப்பூசியை அந்தப் பெண் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஊசியையும் போட்டுக் கொண்டு 2 மாதங்களுக்கு கர்ப்பம் தரிக்காமலிருப்பது பாதுகாப்பானது.
கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வீட்டில், வேறு யாருக்காவது பறவைக் காய்ச்சல், அம்மை போன்ற தொற்று வந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு தடுப்பூசி போட முடியாது. தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து, கர்ப்பிணிப் பெண்ணைப் பிரித்து வைப்பதுதான் தீர்வு. கர்ப்பிணிப் பெண்ணை நாய் கடித்தால், அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, ரேபிஸ் ஊசி போடப்பட வேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உயிர்தான் பெரிதாகப் பார்க்கப் பட வேண்டுமே தவிர, கருவைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஊசியைத் தவிர்க்க நினைப்பது ஆபத்தானது...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home