14 November 2014

பதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள் பற்றிய தொகுப்பு

நவம்பர் 14: குழந்தைகள் தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு....
அப்பாவை பிரிந்து,அம்மா மனநிலை பிறழ்ந்த நிலையில் பசியோடும்,வலியோடும் வாழ்ந்தாலும் அதை மறைத்துக்கொண்டு  மேடை நாடகம் ஒன்றில் நகைச்சுவை வேடத்தில் பதினான்கு வயதில் தோன்றி அந்த குட்டிப்பையன் நடிக்கிறான் ;நாடகம் தோல்வியடைகிறது ,"அந்த சிறுவனின் நடிப்பு மட்டும் பிரமாதம் !"என பத்திரிகைகள் புகழ்கின்றன. அந்த சிறுவன் சாப்ளின்
உலகப்போர் சமயம் அது;வீட்டில் வறுமை தாண்டவமாட தினமணி செய்தித்தாள்களை தொடர்வண்டியில் இருந்து வீசும் பொழுது அதைப்பெற்று ஊரெல்லாம் விநியோகம்
செய்து வீட்டின் வறுமை போக்க உதவுகிறான் அந்த சுட்டிப்பையன் ; கூடவே செய்திகளை ஊரில் பலருக்கு படித்து காண்பிக்கவும் செய்கிறான்.வருங்காலத்தில் செய்திதாள்களெல்லாம் கொண்டாடப்போகும் அந்த பொறுப்பான சிறுவன் அப்துல் கலாம்
தாலிபான்கள் முதலிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பெண் குழந்தைகள் படிக்க முடியாமல் தடுக்கப்படும் அவலத்தை உலகுக்கு தன் எழுத்தின் மூலம் எடுத்து சொன்னவரும் , அவர்களின் கல்விக்காக தொடர்ந்து போராடியவரும் ஆன மலாலாவுக்கு அவரின் பதினான்காம் வயதில் பாகிஸ்தானின் முதல் தேசிய இளைஞர்அமைதி விருது வழங்கப்பட்டது
பதினான்கு வயதில் ராய்பூரை நோக்கி சொந்த ஊரான கல்கத்தாவில் இருந்து அப்பாவின் பணிமாறுதல் காரணமாக படிக்க போன நரேந்திரன் அங்கே நல்ல பள்ளிகள் இல்லாததால் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்த பொழுது  விளையாடி பொழுது போக்காமல் அப்பாவுடன் பல்வேறு ஆழமான தலைப்புகளில் அனுதினமும் பேசி பேசி அறிவை விரிவு செய்து கொண்டான் ; உலகமே சுவாமி விவேகானந்தர் என புகழ இருக்கும் மாமனிதரே அந்த சிறுவன்
தந்தை  பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால்  சிறையில் தள்ளப்படுகிறார் ,தங்கை இறந்து போகிறார் -பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார் , சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது சிறுவன் அதையெல்லாம்  மறக்க தானே தனியாக  முயற்சி செய்து தலை சிறந்த
நூல்களை தேடித்தேடி  படிக்கிறான்.உலகின் தலைசிறந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் தான்  அந்த சிறுவன்.
பதினான்கு வயதில் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் அந்த சிறுவன் ; யாருமே செய்யாத சாதனையான ஒன்பதிற்கு ஒன்பது என அனைத்து போட்டிகளிலும் வென்று தேசிய சாம்பியன் ஆனார் ; மின்னல் வேகத்தில் அவனின்  மூவ்கள் இருந்தன -அந்த மின்னல் வேக ஆட்டக்காரர் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்
அந்த சிறுவனின் அப்பா கொல்லராக இருந்தார் ; சாப்பாட்டிற்கே வீட்டில் கஷ்டம்-பள்ளிகல்வியே கிடைக்காமல் தானே முயன்று கற்க வேண்டிய சூழல்;சிறுவன் புத்தக பைண்டிங் செய்யும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கே வரும் புத்தகங்களை அந்த வயதில் படித்து தேறினான். அவன் பிற்காலத்தில் அறிவியல் உலகின் தலைசிறந்த சோதனையாளர் என புகழப்பட்ட மைக்கேல் பாரடே
சா பாலோ  மாநில கால்பந்து போட்டிகளில்  கலந்துகொண்டான் அந்த பதினான்கு வயது பொடியன்  ,"இருந்தவர்களிலே நான் தான் மிகவும் குட்டிப்பையன் ; புல் தரையில் இல்லாமல் செயற்கை மைதானத்தில் ஆடுவது பயத்தை தந்தது.ஆனால்,பந்து காலில் பட்டதும் மீன் நீரில் நீந்துவதை போல ஆடுவோம் என முடிவு செய்து ஆடினேன்." என்று அதை இன்று விவரிக்கும் அவன் அந்த தொடரில் அதிகபட்சமாக பதினைந்து கோல்கள் அடித்தேன். வயதிற்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை என  நான் புரிந்து கொண்ட வயது பதினான்கு " .அவர் தான் உலகின் தலை சிறந்த
கால்பந்தாட்ட வீரர் என புகழப்படும் பீலே(மூன்று உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல காரணமானவர் )
மிட்ரிடேட் ரி டி போன்ட்டோ எனும் இசைக்கோர்வை மொசார்ட் எனும் தலைசிறந்த இசைமேதை எழுதிய பொழுது வயது பதினான்கு ; பதினான்கு சிறுவன் ஆயிற்றே என சந்தேகத்தோடு வல்லுனர்கள் அதை இசைத்தார்கள்  எந்த மாற்றமும் இல்லாமல் மக்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது ; இருபத்தோரு முறை மக்கள் முதல் முறை இசைத்த பொழுது மீண்டும் மீண்டும் இசைக்க செய்தார்கள்  .ரோமை  மீட்க போராடும்  மிட்ரிடேட்  எனும் மன்னனின் கதையை சொல்லும் இசைக்கோர்வையே அது.
எப்படி டைம் டேபிள் போடுவது என திணறிக்கொண்டு இருந்த பள்ளிக்கு பதினான்கு வயதில் செயல்பாட்டு திட்டத்தை கச்சிதமாக ப்ரோக்ராமிங் மூலம் நண்பர் பால் ஆலனோடு  இணைந்து வடிவமைத்து கொடுத்து  பள்ளியில் நான்காயிரத்து இருநூறு டாலர் வருமானம் பார்த்த அந்த சாகசக்கார பையன் பில் கேட்ஸ்


லோலா என்கிற தன் தங்கையை இழந்த சோகத்தில் முதல் கம்யூனியன் என்கிற அவள் நினைவாக ஒரு ஓவியத்தையும்,ஆன்ட் பெப்பாஎன்கிற இன்னொரு ஓவியத்தையும் அந்த பதினான்கு வயது சிறுவன் தீட்டினான்."அகோரமாக இருக்கிறது,ஒன்றும் புரியவில்லை !"என ஏளனம் செய்தார்கள் பலர். ஆனால் அந்த ஆன்ட் பெப்பா ஸ்பெயினின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றாக பிற்காலத்தில் குறிக்கப்பட்டது ; அந்த சிறுவன் தான் நவீன ஓவியங்களின் தந்தை என போற்றப்பட்ட பாப்லோ
பிகாசோ.

 
பதினான்கு வயதிற்கு முன்னமே விடுதலை போரில் பங்குகொள்ள ஆரம்பித்து இருந்த அந்த தைரியம் மிகுந்த சிறுவன் பல்வேறு அப்பாவி மக்கள் கொல்லபடுவதற்கு காரணமான குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அமைதி வழியில் போராடிய குழுவினர் ஊர் ஊராக சென்று ஆதரவு திரட்டிய பொழுது தன் ஊரில் முன்னணியில் நின்று அவர்களை ஆங்கிலேயருக்கு அஞ்சாமல் பதினான்கு வயதில் வரவேற்றான் ; அந்த வீரச்சிறுவன் பகத் சிங் .
படிக்க லாயக்கில்லை என பள்ளியை விட்டு ஐந்து வயதில் துரத்தப்பட்டு அம்மாவின் கவனிப்பில் மற்றும் கற்பிப்பில் வளர்ந்த அந்த சிறுவன் தன் பதினான்காம் வயதில் நாடு முழுக்க உள்நாட்டு போர் நடந்துகொண்டு இருந்த பொழுது சுடச்சுட செய்திகளை தானே முழுக்க முழுக்க  டர்வண்டியிலேயே
அச்சிட்டு அங்கேயே  தி வீக்லி ஹெரல்ட் என்கிற பெயரில் விற்றும் காண்பித்தான் அந்த புத்திசாலி சிறுவன்  ; அந்த செய்திதாளில் கிசுகிசுக்களையும் இணைத்து வெளியிட்டு குறும்பு செய்தான் அவன்.அவனின் பெயர் தாமஸ் அல்வா எடிசன்.
மும்பை கிரிக்கெட் சங்கம் வருடாவருடம் தேர்ந்தெடுக்கும் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருது கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த சச்சினுக்கு அவரின் பதினான்காம் வயதில் கவாஸ்கரிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது ,"போன சீசனில் நீ நன்றாக விளையாடினாய்;விருதுகளை பற்றி கவலைப்படாதே ;பிற வீரர்கள் சரியாக ஆடாத பொழுது நீ மட்டும் போராடியது எனக்கு பிடித்து
இருந்தது / பின் குறிப்பு :விருது கிடைக்காததற்கு வருந்தாதே ;அந்த விருதை வாங்காத ஒரு இளைஞன் டெஸ்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தான் (கவாஸ்கர் தன்னை குறிப்பிடுகிறார் )" இக்கடிதமே தன்னை கவாஸ்கரை போல சாதிக்க தூண்டியது என்கிறார் சச்சின்
பூ.கொ.சரவணன்
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home