சார் ஒரு நிமிசம்
சார் ஒரு நிமிசம் - பாலியல் தொழிலை அனுமதித்தால் வன்புணர்வு நடக்காதாம்..............!!
பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்ற கருத்துருவாக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் சிலர் நிலைமையின் சீரியஸ்னஸ் புரியாமல் கருத்து சொல்கிறார்கள்.
டெல்லி சம்பவத்துக்கு எதிராக உணர்வுப்பூர்வமாகக் கூடிய இளைய தலைமுறையினரைத் திருப்தி படுத்தும் நோக்கில் மத்திய அரசு, நீதிபதி வர்மா குழுவை நியமித்து அறிக்கை வழங்கும்படி கேட்டுக்கொண்டது. அவரும் பொதுமக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்க பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராய்ந்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகச் செயல்பட்டு வரும் "பாரதிய பதிதா உத்தார் சபா" என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, "பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தால், பாலியல் வன்முறைகள் குறையும்" என்று கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "பலாத்காரத்தால் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழந்தது வருந்தத்தக்கது. பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காதது, பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தத் தருணத்தில் பாலியல் தொழிலை அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும். ஏற்கனவே 164 நாடுகளில் பாலியல் தொழில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடடா! என்னே ஒரு சிந்தனை பாருங்கள்!! சட்டப்படி தடுத்து வைத்திருப்பதால்தான் அதை மீறும் குற்றங்கள் நடக்கின்றனவாம்! அதனால் அதற்கு அனுமதி அளித்து விட்டால் அத்தகைய குற்றங்கள் நடக்காதாம்! அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்குச் சட்டப்பூர்வமாக அனுமதி உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போரட்டிக்கும் போதெல்லாம் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.
திருடுவது, வழிப்பறி செய்வது, கொள்ளையடிப்பது கள்ள நோட்டடிப்பது கறுப்புப் பணம் பதுக்குவது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது ஆகியவை குற்றங்கள் என்று சட்டத்திலிருப்பதால்தானே நடக்கின்றன. பேசாமல் இவற்றையும் சட்டரீதியில் அங்கீகரித்து விட்டால் நாட்டில் குற்றவாளிகள் குறைந்து விடுவார்களே என திருடர்களும் கொள்ளைக்காரர்களும் பரிந்துரைக்காமலிருக்க வேண்டும் என்பதே நமது கவலை!
- பஞ்ச் கல்யாணி
நன்றி : இந்நேரம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home