3 May 2013

இதிலுமா அரசியல்!......தின மணிக்கு பாராட்டு...

இதிலுமா அரசியல்!......தின மணிக்கு பாராட்டு...

இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து தலையங்கம் எழுதிவரும் தினமணி நாளிதழ் எப்போதாவது நடு நிலையுடன் ஒரு சில தலையங்கம் எழுதும்.....

அந்த வகையில் பாகிஸ்தானில் குண்டு வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைல் இறந்த சரப்ஜித் சிங் பற்றி இன்றைய நாளிதழில் நடு நிலையோடு எழுதப்பட்ட தலையங்கம்....

இதிலுமா அரசியல்!

ஒரு மரண தண்டனைக் கைதியைத் தூக்கிலிடுவதற்குக் காலதாமதம் ஆகும்பட்சத்தில், அவரை சக கைதிகளை விட்டு அடித்து கொன்றுவிடலாம் என்கிற தவறான முன்னுதாரணத்தை சரப்ஜித் சிங்கின் படுகொலையின் மூலம் உலகுக்கு பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் சிறைச்சாலையில் நடந்திருக்கின்ற இந்த கொடூரமான சம்பவம் மனிதாபிமானமுள்ள எவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும். ஆனால், பாகிஸ்தான் அரசுக்கோ அங்கே இருக்கின்ற தலைவர்களுக்கோ இந்த சம்பவம் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் வேடிக்கை.

1990-ம் ஆண்டில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 20 பேர் மரணத்துக்குக் காரணமானவர் என்று குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங். அவரைத் தவறாகக் கைது செய்தனர் என்று குடும்பத்தினர் சொல்வதும், அவர் குற்றவாளியா இல்லையா என்பது விவாதிப்பதும் தேவையில்லாத விஷயம். அந்நாட்டு நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று கருதி தண்டனை வழங்கிவிட்டது. அதில் நாம் மாற்றுக் கருத்துச் சொல்ல முடியாது.

கடந்த 22 ஆண்டுகளாக லாகூர் சிறையில் தனது வாழ்நாளின் பாதியைக் கழித்துவிட்ட சரப்ஜித் சிங்கை, இத்தனை நாள்களாக சக கைதிகளால் தாக்கப்படாத ஒருவரை, திடீரென்று சென்ற வாரம் சக கைதிகள் கொடூரமாகத் தாக்கியதன் மர்மம் புரியவில்லை. இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டது என்பதால், சரப்ஜித் மரணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் திட்டம் இருந்திருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குரு, கஸôப் ஆகியோருக்கு இந்திய அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியதற்குப் பதிலடி கொடுக்க விரும்பிய தீவிரவாத அமைப்புகள், சிறை அதிகாரிகளின் துணையோடும், ஆதரவோடும் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று நம்பவும் இடமிருக்கிறது.

சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா முன்வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது. அதை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இல்லைதான். ஆனால், ஒரு இந்தியக் கைதி, எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சிறையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட பின்னர், "அவரை சிகிச்சைக்காக அனுப்பி வையுங்கள்; நாங்கள் தரமான சிகிச்சை அளிக்கிறோம்' என்று இந்தியா முன்வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொண்டிருக்கலாம். செய்யவில்லை. இந்தியாவுக்கு அனுப்பாவிட்டாலும் வேறு ஏதாவது நாட்டிற்காவது அனுப்பி சிகிச்சை அளியுங்களேன் என்கிற யோசனையையும் பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது. இப்போது சரப்ஜித் சிங் மூளைச் சாவு ஏற்பட்டு, இறந்துபோன நிலையில் இந்தியாவுக்கு அவரது சடலத்தை பாகிஸ்தான் அனுப்பியிருப்பதால் என்ன லாபம்?

தாக்குதல் நடந்து ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. ஆனால் இதுவரை சிறை அதிகாரிகள் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாக்குதல் நடத்திய கைதிகள், "சரப்ஜித் சிங்கைக் கொல்ல திட்டமிட்டோம். ஆகவே ஆயுதங்களைச் சேகரித்து தாக்குதலை நடத்தினோம்' என்று முதற்கட்ட விசாரணையில் தெளிவாகவே ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

சரப்ஜித் சிங் மரணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கல் செய்தியில் பாகிஸ்தானுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். ஏனைய அரசியல் கட்சிகளின் பல்வேறு தலைவர்களும் பாகிஸ்தானின் செயல் மனிதாபிமானமற்றது என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்திய அரசு இதில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறியுள்ளனர். இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துவிட முடியும் என்று நமக்குப் புரியவில்லை.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சரப்ஜித் சிங்கை இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திக்கவே தடை விதித்து, பிறகு பலதடவை கேட்டுக்கொண்டதன் பிறகே அனுமதி அளித்த பாகிஸ்தானிடம், ராஜீய உறவுகள் மூலம் எதையும் இந்திய அரசு சாதித்திருக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மத்திய அரசில் எந்தக் கட்சி ஆட்சியில்

இருந்தாலும் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதுதான் கசப்பான உண்மை.

அதே நேரத்தில், இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள சரப்ஜித் சிங்கின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அறிவித்திருப்பது நெருடலாக இருக்கிறது. மிக மோசமாக அடித்துக் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங்கின் குடும்பத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவது, நிதியுதவி செய்வது, அந்தக் குடும்பத்தின் துயரத்தில் பங்கேற்பது ஆகியவை ஒரு அரசின் கடமை. ஆனால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தினால் அவரைக் "கைதி' என்ற நிலையிலிருந்து "தியாகி' என்ற நிலைக்கு உயர்த்துவதாக அமைந்துவிடும். ஒரு படுகொலைக்காக ஒரு நபர் மீது நாம் கொள்ளும் அனுதாபம், அரசியலாக்கப்படுதல் கூடாது.

இந்திய அரசு தூக்கிலிட்ட அப்சல் குரு, கஸôப் ஆகியோரை பாகிஸ்தான் அரசு தியாகியாக அறிவித்தால், எத்தகைய மனநிலையில் நாம் சிக்கித் தவிப்போம் என்பதை நினைத்துப் பார்த்து, இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

சரப்ஜித் சிங்குக்காக நாம் கேட்கக் கூடியது, கொலைத்தாக்குதல் நடத்திய கைதிகளும், இதற்குக் காரணமாக பின்னணியில் செயல்பட்ட சிறை அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதானே தவிர சரப்ஜித் சிங்கை தியாகியாக்க முற்படுவதோ அந்த மரணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதோ நாகரிகமாக இருக்காது.



அஷ்ரஃப் 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home