6 August 2013

ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான்


ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான்

அப்துல்கலாம் நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனாக இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார்.

எல்லாம் தயாரா? பிரச்சினை ஒன்றுமில்லையே?” திரும்பத் திரும்ப உதவியாளர்களை கேட்டுக்கொண்டே இருந்தார்.

எல்லாம் சரியாக இருக்கிறது சார். நிச்சயமாக நாம் வெல்வோம்அவர்களது பதிலில் திருப்தியடைந்தாலும் ஏதோ ஒன்று அவருக்கு இடித்துக்கொண்டே இருந்தது.

ஆகஸ்ட் 10, 1979. ஸ்ரீஹரிகோட்டா. முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி பூமியின் சுற்றுப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். ரோகிணி என்பது சோதனை சேட்டிலைட். பிற்பாடு இந்தியா செலுத்த திட்டமிட்டிருக்கும் சேட்டிலைட்டுகளின் தலைவிதியை இந்த நாள்தான் தீர்மானிக்கப் போகிறது. திட்ட இயக்குனராக இருந்த அப்துல்கலாமும் அவரது குழுவினரும் ஏழு ஆண்டுகளாக இரவுபகல் பாராமல் இந்நாளுக்காக காத்திருந்தார்கள். 1980ல் ரோகிணியை நிலைநிறுத்த வேண்டுமென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் ஓராண்டு முன்பாகவே தயாராகி விட்டார்கள்.

ஏவுதளத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார் கலாம். ரோகிணியை ஏவுவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பாக எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆராய்வதற்காக கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்தார். கலாம் நினைத்ததைப் போலவே ஏதோ வில்லங்கம். ‘சில கட்டுப்பாட்டு கருவிகள் முறையாக இல்லைஎன்று கம்ப்யூட்டர் ஆட்சேபம் தெரிவித்தது. இந்த நாளின் வெற்றிக்காக நாடே காத்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்றே புரியவில்லை. தன்னுடைய குழுவில் இருந்த நிபுணர்களை கலந்தாலோசித்தார்.

கவலைப்படாதீர்கள் சார். ஒன்றுக்கு நாலு முறை ரோகிணியை பரிசோதித்துவிட்டோம். தேவையான அளவு எரிபொருள் இருக்கிறது. எல்லாம் சரியாகவே இருக்கிறது. கம்ப்யூட்டரில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம்

அரைமனதுடனேயே கம்ப்யூட்டரின் ஆட்சேபணையை புறந்தள்ளிவிட்டு, ரோகிணியை ஏவினார் கலாம். முதல் கட்டத்தில் எல்லாமே சரியாக அமைந்தது. குழுமியிருந்த அறிவியலாளர்கள் முகத்தில் வெற்றிக்களிப்பு. இரண்டாவது கட்டத்தில் ஏதோ பிரச்சினை. சுற்றுப்பாதையில் ரோகிணி நிலைநிறுத்தப்படாமல் வீழ ஆரம்பித்தது. அன்று வங்காளக்கடலில் வீழ்ந்தது ரோகிணி மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களின் ஏழாண்டு பிரதிபலன் பாராத உழைப்பும், இலட்சியமும் கூடத்தான். கலாம் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

காலை ஏழு மணிக்கு இச்சம்பவம் நடக்கிறது. ஏழேமுக்கால் மணிக்கு பத்திரிகையாளர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் பிரத்யேக பத்திரிகைச் சந்திப்புக்காக குவிந்துவிட்டார்கள். இந்தியப் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவர்களில் சர்வதேசப் பத்திரிகையாளர்களும் கலந்திருந்தார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) அப்போதைய தலைவர் பேராசிரியர் சதிஷ்தவான் பத்திரிகையாளர்களை எதிர்கொண்டார். ரோகிணியின் தோல்விக்கு தானே தார்மீக பொறுப்பேற்றுக் கொண்டார்.

எங்கள் குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர். அவர்களுக்கு இன்னும் கூடுதலான தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுகிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரே ஆண்டில் எங்கள் குழு மாபெரும் வெற்றியை ஈட்டும்

கலாமுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது. திட்ட இயக்குனர் என்கிற அடிப்படையில் இத்தோல்விக்கு அவர்தான் பொறுப்பு. நிறுவனத்தின் தலைவர் என்கிற அடிப்படையில் தன்னுடைய குழுவினரை காப்பாற்றும் வகையில் நாகரிகத்தைக் காட்டிய தவான் அவரது மனதில் உயர்ந்து நின்றார்.

மீண்டும் ஆரம்பத்தில் இருந்து உழைக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு நாளின் ஒரு நொடியையும் வீணாக்காமல் அசுரத்தனமான உழைப்பு. ஜூலை 18, 1980ல் தயாரானார்கள். உலகமே ஸ்ரீஹரிகோட்டாவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இம்முறை நாடே போற்றும் வெற்றி. இனி விண்வெளியையும் ஆள்வோம் என்று இந்தியா உலகுக்கு அறிவித்தது. வெற்றிச் செய்தியை நேரிடையாக கேட்க இம்முறை முன்பைவிட கூடுதலாக பத்திரிகையாளர்கள் சதீஷ்தவானை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். தவான் கலாமை அழைக்கிறார்.

உன் வாயால் வெற்றியை சொல்லு

தழுதழுத்த நிலையில், கண்களில் ஈரம் கசிய அன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் கலாம். எப்படி வென்றோம் என்று ஒட்டுமொத்த கதையையும் சொன்னார்.

பின்னாளில் இந்த நிகழ்வைப் பற்றி சொல்கிறார் கலாம். “அந்நாளில் நான் ஒரு முக்கியமான பாடத்தை கற்றேன். ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான். உலகின் மிகச்சிறந்த நிர்வாகவியல் பாடமான இதை நான் எந்தப் புத்தகத்திலும் வாசித்ததில்லை. என்னுடைய அனுபவத்தின் வாயிலாக கற்றேன்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home