8 September 2013

நிராகரிப்புக்கு நன்றி சொல்லுங்கள் !





TO ALL THOSE WHO ARE SAD AND DOWN BECAUSE OF REJECTIONS AND FAILURES:
நிராகரிப்பின் விரக்தியில் மனம் சோர்ந்து பலபேர் ஓய்ந்து போகிறார்கள். நநிராகரிப்பு இல்லாமல் வெற்றிகள் கண்டிப்பாக வருவதில்லை. எல்லாரும் பல புள்ளிகளில் நிராகரிப்புக்கு உள்ளாகி உள்ளாகி தான் வெற்றிகளை ருசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

மேரி க்யூரி போலாந்து பல்கலையில் படிக்க இடம் கேட்ட பொழுது பெண் என்று மறுத்து வெளியேற்றியது அக்கல்வி பீடம். அவர் இரண்டு நோபல் பரிசை தன் ஓயாத உழைப்பால் பெற்ற பின்பே அங்கே எழுந்த முதல் சிலை அவருக்கு தான்

முடிவெட்ட கூட மற்றவர்கள் மறுத்து,உணவகத்துக்குள் இடம் மறுக்கப்பட்டு,மரியாதை என்பதை கடைநிலை ஊழியர் கூட காட்ட மறுத்த பொழுது அறிவால்,ஆக்கப்பூர்வமான அரசியலால் வென்றெடுத்த அந்த மனிதர் சிந்தனையில் எழுந்தது தான் ரிசர்வ் வங்கி,அரசியலமைப்பு சட்டம். அவர் தான் கற்பி,ஒன்று சேர்,புரட்சி செய் என்ற அண்ணல் அம்பேத்கர்

பார்க்க குதிரை முகம் போல இல்ல இருக்கு என்று நடிப்பின் ஆரம்பகாலங்களில் நிராகரிக்கப்பட்டவர் தான் நடிகர் திலகம் சிவாஜி. இதெல்லாம் ஒரு ஒவியமா,இவனெல்லாம் ஒரு ஓவியரா என்று கரித்துக்கொட்டப்பட்ட இளைஞன் தான் நவீன ஓவியத்தின் தந்தையாகி பிகாசோ ஆனார்.

ஊமைப்படங்கள் ஓடாது என்று முடிவுகட்டி சாப்ளின் படத்துக்கு திரையரங்கே தராமல் இருந்த பொழுது ஒரே தியேட்டரில் படம் ஓட்டி எப்பொழுதும் நிறையாத அந்த அரங்கு நிறைந்த பொழுது உலகம் அண்ணாந்து பார்த்தது. கம்யூனிஸ்ட் என்று அவரையே முத்திரை குத்தி வெளியேற்றியே அமெரிக்காவே அவரை அவரின் இறுதிக்காலத்தில் கவுரவ ஆஸ்கர் வழங்கி தனக்கு பெருமை தேடிக்கொண்டது

இனிமேல் அவ்வளவு தான் என்று தேசத்துரோகி முத்திரை குத்தப்பட்டு குத்துச்சண்டை போட்டிகளில் தடை செய்யப்பட்ட முகமது அலி,முக்கில் ரத்தம் கொட்ட பாகிஸ்தான் போட்டியில் வெளியேறிய சச்சின்,டிக்கெட் கொடுப்பவராக இருந்த தோனி,பன்னாட்டு கூட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட வர்கீஸ் குரியன்,வெறும் இருபத்தைந்து ஆயிரம் ரூபாய்க்கு முதல் படத்துக்கு இசை அமைத்த ரஹ்மான் என்று எல்லாரும் மவுனமாக தான் அந்த தருணங்களை கடந்தார்கள். மீண்டும் உலக சாம்பியன் ஆனார் முகமது அலி,உலகின் எல்லா பந்து வீச்சுக்கும் சிம்ம சொப்பனம் ஆனார் சச்சின்,மூன்று உலககோப்பைகள் சரண் புகுந்தது தோனியிடம்,பன்னாட்டு நிறுவனங்களை தூக்கி சாப்பிட்டது எளியவர்களின் அமுல்,ரோஜா உலகின் தலைசிறந்த நூறு இசைக்கோர்வைகளில் ஒன்றானது. உங்களுக்கான பொழுது நாளையாக கூட இருக்கலாம்

ஜெயிக்க ஆரம்பித்த பின் எதிர்ப்பார்கள்;ஓயாமல் எதிர்ப்புகள் தொடரும். ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்ளுங்கள் ,”என்னை நிராகரிக்க முடியாததால் தான் எதிர்க்கிறார்கள். நான் இன்னமும் முனைப்பாக நல்லன சார்ந்து இயங்குவேன்என்று. வாழ்த்துகள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home