22 October 2013

வாக்களிக்க விரும்பாதவர்கள் 49- O என்ற படிவத்தை நிரப்பிக் கொடுக்கலாம் என்பதற்குப் பதிலாக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் NOTA என்ற பட்டனை வைக்கவேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் நன்மை உள்ளதா?



நாங்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்று படிவத்தில் நிரப்பிக் கொடுப்பது சிரமமானது என்பதால் இதில் பயன் இல்லாமல் இருந்தது. படித்தவர்களும், அதிகமாக மெனக்கெடுவதற்கு நேரம் ஒதுக்குவோர்களும்தான் படிவத்தை பூர்த்திசெய்து கொடுக்க முடியும். 49- O படிவம் என்பது வாக்களிக்க விரும்பாதவர்களின் ஒரு சதவிகிதத்தைக்கூட பிரதிபலிக்காமல் இருந்தது. இதற்காக தனியாக ஒரு பட்டன் வைக்கும் போது அதில் சிரமம் இல்லாமல் வாக்களிக்கலாம். இதை அழுத்தினால் போதும். வேட்பாளர் பட்டியலில் உள்ள யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை என்று கருதக் கூடியவர்கள் அதற்கான பட்டனை அழுத்தினால் போதும்.

வேட்பார்கள் தகுதியற்றவர்கள் என்ற காரணத்துக்காகவும் அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை இல்லை என்ற காரணத்துக்காகவும் தான் அதிகமான மக்கள் வாக்களிப்பதில்லை. சிலர் எவன் ஆண்டால் எனக்கென்ன என்ற மனநிலையில் பொறுப்பற்ற தன்மை காரணமாகவும் வாக்களிக்காமல் உள்ளனர்.

ஒரு தொகுதியில் ஐமபது சதவிகிதம் வாக்கு பதிவானால் மீதி ஐம்பது சதவிகிதம் பேர் வாக்களிக்க வரவில்லை என்பது மட்டும் தான் தெரியும். என்ன காரணத்துக்காக வாக்களிக்க வில்லை என்பது தெரியாது. அனைவரும் பொறுப்பற்று நடந்து கொண்டதாகத் தான் இதை எடுத்துக் கொள்வார்கள்.

வாக்களிக்க நான் விரும்பவில்லை என்பதை தெரிவிக்க வழி இருப்பதால் வாக்களிக்காத ஐம்பது சதவிகிதம் மக்களில் இந்த தேர்தல் முறையையும் அர்சியல் கட்சிகளையும் வெறுப்பவர்கள் எவ்வளவு என்பது தெரிய வரும். இப்படி வாக்களிக்க வந்தும் யாருக்கும் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தேர்தல் முறையில் மாற்றம் செய்யும் அவசியம் ஏற்படும்.

சில தொகுதிகளில் 80 சதவிகிதம் 90 சதவிகிதம் என்று வாக்குகள் பதிவாகின்றன. ஆனால் அதில் உண்மை இருப்பதில்லை. யார் ஓட்டும் போட மாட்டார்கள் என்பதை அறிந்து கொண்டு அதை கள்ள ஓட்டு போடுவோர் போட்டு விடுவதால் தான் இது போல் ஏற்படுகிறது. குறிப்பாக இடைத்தேதலில் அதிக வாக்குகள் இப்படித்தான் பதிவாகின்றன. யாருக்கும் ஓட்டுப் போட மாட்டேன் என்று கருத்துவோர் அதைப் பதிவு செய்தால் அவர்கள் பெயரில் கள்ள ஓட்டு போட முடியாது.

ஜனநாயகம் தேர்தல் முறையை எதிர்ப்பதை கொள்கையாக கொண்டவர்களும் வாக்களிக்க மாட்டார்கள். இவர்கள் வாக்களிக்காவிட்டால் இவர்கள் வாக்கை யாராவது போட்டு விடுவார்கள். இதற்காக தனி பட்டன் அமைக்கும் போது இவர்களும் கூட தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள்.

இது போல் சில நன்மைகள் இதில் உள்ளதால் இதை நாம் வரவேற்கலாம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home