12 October 2013

6 பேக் நல்லதா கெட்டதா?



சமீப காலங்களில் வந்த படங்களில் பாலிவுட்டில் அமீர்கான், சல்மான்கான், கோலிவுட்டில் சூர்யாபரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமைப்பில்  நடித்தனர். படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே நடிகர் சிக்ஸ் பேக் உடலமைப்பு கொண்டு வருவதற்காக நாள் ஒன்றுக்கு 15 நேரம் பயிற்சி எடுத்து  கொண்டார் என்பது போன்ற விளம்பரங்களும் வருவதுண்டு. இந்த சிக்ஸ் பேக் தீ, தற்போது இன்றைய இளைஞர்களிடம் பரவி உள்ளது. அழகின்  முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்.
அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக உடலில்  சேரும் கொழுப்பு உடலியக்கத்தின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும்  கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதியில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை  தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். உழைப்புக்கான சூழ்நிலை நகர வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதைப் பெற  வேண்டும்.
அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு. ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன். இயல்பாக சுரக்கும் இந்த ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது  ஸ்டீராய்டு.  இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தசைகள் அளவில் பெரிதாகும். அதன்மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக  பயங்கரமானவை. முதலில் ஏற்படுவது ஆண்மைக் குறைவு தான்.
மேலும் மலட்டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர், மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்றவையும்  ஏற்படும். அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்பான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள்  மருத்துவர்கள்.
எளிய பயிற்சிகள்: இதயப் பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை வேகமாக குறைக்க வேறு வழி இல்லை.  உயர்ந்த இதயத் துடிப்பு மற்றும் வியர்வை உடம்பை விட்டு வெளியேறுவதால், கொழுப்புத் திவலைகளை சிதைக்க உதவி புரியும். இது செல்லுலைட்  என்ற தோலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக சிதைக்க உதவும். இதற்காக மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், நீந்துதல் மற்றும் நடனம் ஆடினால்  சில கிலோகிராம் எடை நம் உடலை விட்டு ஓடும். எடை குறைப்புக்கு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருப்பது முக்கிய பங்கு  வகிக்கிறது.
அதிலும் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னரும் கூட, அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றமானது கொழுப்பை எரிக்கும். அதிக வளர்ச்சிதை மாற்ற  வீதத்தை அடைய ஒருவர் அளவான உணவை போதிய இடைவெளியில் சாப்பிட வேண்டும்.  சில சமயங்களில் பளு தூக்குவதால், மீள்வரு  தசைகளில் உண்டாகும் செல்லுலைட் என்ற தோல்களில் படியும் கொழுப்பை கரைக்க உதவும். பளு தூக்கும் பயிற்சி உடல் கட்டமைப்பை அதிகரிக்க  உதவும். உடம்பில் உள்ள கொழுப்பை நீக்கியதும், சிக்ஸ் பேக் வயிற்றுடன் உடலை கட்டமைக்க தசைகளை வலுப் பெறச்செய்ய வேண்டும்.
அதற்கு சில உடற்பயிற்சிகளை செய்தால் சரியான கட்டமைப்புடன் வயிறு அமையும். வயிற்றுக்கான உடற்பயிற்சி செய்தோமானால், வயிற்று  தசைகளுக்கு சரியான அளவு இழுவிசை இளக்கத் தன்மை கிடைக்கும். அதுவும் தரையில் படுத்து, முட்டியை மடக்கி கைகளை தலைக்குப் பின்னால்  கட்டிக் கொண்டு, தலை, முட்டியை தொடும் அளவிற்கு உடம்பை தூக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி மேல் மற்றும் நடு வயிற்றை குறி வைக்கும்.  இந்த பயிற்சியை உடம்பின் இரு பக்கங்களாக செய்தால் சரிவுள்ள தசைகளை மேம்படுத்தும்.
கட்டுப்பாடான உணவு அவசியம்: காலை ஆறு மணிக்கு இரண்டு டீ, ஒன்பது மணிக்கு ஓட்ஸ் மற்றும் எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு. காலை 11  மணிக்கு பப்பாளிப் பழம். சர்க்கரை இல்லாத புரதச் சத்து நிறைந்த பானம். மதியம் ஒரு மணிக்கு அரை கிலோ சிக்கன். எண்ணெய் சேர்க்காத  கோதுமை ரொட்டி, மாலை ஐந்து மணிக்கு மீண்டும் புரதச்சத்து பானம், 7.30 மணிக்கு திரும்பவும் புரதச்சத்து பானம், இரவு ஒன்பது மணிக்கு எட்டு  முட்டைகளின் வெள்ளைக்கரு, ஒரு ஆப்பிள். இவைதான் உணவு. மாவுச்சத்து, நார் சத்து, கொழுப்புச் சத்து, அடங்கிய உணவுப் பொருட்களை அறவே  சாப்பிடக் கூடாது.தண்ணீரின் அளவைப் படிப்படியாகக் குறைக்க வேண்டி இருக்கும்.
மேலும், சர்க்கரை, உப்பு, தண்ணீர் மூன்றையும் உடலை விட்டு சுத்தமாக நீக்க வேண்டும். ஆகையால், 16 வயதினருக்கு மேற்பட்ட ஆண்கள்  மட்டும்தான் சிக்ஸ் பேக் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதைவிடக் குறைவான வயதுடையவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏனெனில் முதுகுத்  தண்டு வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்படும்‘‘  என்கின்றனர் மருத்துவர்கள். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சிக்ஸ் பேக்  செய்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும் நீரின் அளவினை 40 சதவிகிதம் அளவுக்கு குறைத்தே ஆக வேண்டும்.
மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் சிறுநீரகம்  முற்றிலும் செயலிழந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். மாவுச்சத்துபால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம், என்றனர்.  இதுபற்றி எலும்பு சிகிச்சை  நிபுணர் தெரிவிக்கையில், சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம்தான்.
அதிலும் புரதம், மாவுச்சத்து இல்லாமல், கடும் உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். மனிதனுக்கு  வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம் ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசை நார்கள் பயன்படுகின்றன.  ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்னைகள்தான் அதிகம், என்றனர்.
அழகுக்கு ஆசைப்பட்டுத்தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் விழுகிறார் கள். ஆனால், நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி  செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ் பேக் அழகு என்பது தற்காலிகமானதே. நீடித்தது அல்ல. அழகைவிட ஆரோக்கியமே  முக்கியம் என்பதையும் இளைஞர்கள் உணர வேண்டும், என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home