24 October 2013

பஸ்சில் தவறிய ரூ.9 லட்சம் நகை, பணம்: டைம்கீப்பர், கண்டக்டர் தந்த இன்பஅதிர்ச்சி




மதுரையில் பஸ்சில் தவற விட்ட ரூ.9 லட்சம் நகை, பணம் அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் கனகராஜ், பி.எம்.டி., என்ற தனியார் பஸ் கண்டக்டர் இளங்கோவன் முயற்சியால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அலுவலர் ஜெயராமன், 62. இவரது மனைவி ஜீவா, 52. சர்க்கரை நோயாளியான ஜெயராமன், மனைவியுடன் அக்.,19ல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வந்தார். சிகிச்சை முடிந்து, திண்டுக்கல் செல்ல ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.பி.எம்.டி., பஸ்சில் ஏறினர். இருக்கைகளில் இடம் கிடைக்காததால், 2 பேரும் இறங்கி, மற்றொரு பஸ்சில் அமர்ந்தபோது தான், ஜீவா தன் கைப்பையை தவற விட்டது தெரிந்தது. அதில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகைகள், கிரடிட் கார்டு, ரூ.25 ஆயிரம், மொபைல் போன் இருந்தன. அதிர்ச்சியில், இறங்கி தேட துவங்கினர். அவர்களிடம் அரசு போக்குவரத்து கழக டைம்கீப்பர் கனகராஜ் விசாரித்தார்.பி.எம்.டி., பஸ்சில் பையை தவற விட்டிருக்கலாம் என கருதிய கனகராஜ், அதன் மேலாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கண்டக்டர் இளங்கோவனின் மொபைல் போன் எண்ணை பெற்றார். பின், திண்டுக்கல் சென்று கொண்டிருந்த இளங்கோவனிடம் தகவல் தெரிவிக்க, அவரும் பஸ்சில் தேடி, அனாதையாக கிடந்த பையை எடுத்து வைத்துக்கொண்டார்.அந்த பஸ் மதுரை திரும்பியதும், ஜெயராமனிடம் பை ஒப்படைக்கப்பட்டது.

நெகிழ்ச்சி அடைந்த ஜெயராமன், ""என் பணிக்காலத்தில் நேர்மையாக உழைத்தேன். அதன் பயன்தான் டைம்கீப்பர், நடத்துனர் ரூபத்தில் பணம், நகைகள் திரும்ப கிடைத்தது'' என்றார்.

டைம் கீப்பர் கனகராஜ்,""முதியவர் பதறியதை பார்த்து விசாரித்தேன். முதலில் ஏறிய பஸ்சில் பையை தவற விட்டிருக்கலாம் என கணித்து, விசாரணையில் இறங்கினேன்.அதன்படி, அந்த பஸ்சில் பையிருந்தது. கண்டக்டர் இளங்கோவனும், அதை எடுத்து விட்டார்,'' என்றார்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home