25 October 2013

வன்முறையின் ஊற்றுக்கண்ணாய்..!உ.வாசுகி

மது அருந்தும் போதைப் பழக்கம் அண் மைக் காலமாக அதிகரித்து வருகிறது. குடி வெறியாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் குடிப்பதை மறைக்க வேண்டும், அது ஒழுக்கக் கேடு என்ற பார்வை இருந்தது. ஆனால், சமீப காலமாக, இது பொழுதுபோக்காகவும், நாகரீகத்தின் அடையாளமாகவும், நவீனத்துவத்தின் பிரதி பலிப்பாகவும் மாறிவிட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் மதுபான வகைகள் விநியோகம் செய்யப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. 1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007ல் 17 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம் என்கிற வர்த்தகக்கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம், 60 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பாதகமான விளைவுகள்
இச்சூழலில் குடிபோதை என்பது தமிழகத்தில் ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையாகவும், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள், குழந்தைகள் என்ற முறையில்,பெண்கள் இயக்கம் சந்திக்கவேண்டிய முக்கிய பிரச்சனையாகவும்உருவெடுத்திருக்கிறது. இதன் மோசமான விளைவுகள் பல முனைகளில் பரந்த பாதிப்பை ஏற்படுத்து கின்றன. குறிப்பாக, குடும்பத்தில், சமூகத்தில், அரசியலில் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. வன்முறையை, குறிப்பாகக் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறையைத் தூண்டுவதில், தவறு செய்வதற்கான துணிச்சலைக் கொடுப்பதில் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது.
குடும் பப் பொருளாதாரத்தைப் பெருமளவு நாசமாக்கு கிறது. சாலை விபத்துக்களுக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. வேலைகளில் கவனமின்மை அதிகரித்து, உற்பத்தி இழப்புஏற்படுகிறது. பல்வேறு உடல்நலக் கோளாறு களுக்கும் அடிப்படையாக உள்ளது.குடிப்பது ஏழை-பணக்காரர் என்ற வித்தியாசமற்று இருந்தாலும், பொருளாதாரத்தில் வசதி யானவர்கள் குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடியும். உடல் நலக் கேடு ஏற்பட்டால், மருத்துவ உதவிகளை நாடி, பயன்படுத்த முடியும். வறுமையான குடும்பங்களுக்கு இது அனைத்துமே கடினம். எனவே, ஏழை குடும்பங்களை இப்பழக்கம் கூடுதலாக சீர்குலைக்கும்.
இந்த அடிப்படையில் பார்த்தால், குடிப்பழக்கத்தின் நாசகர விளைவு களுக்கு, ஒரு வர்க்க பரிமாணம் இருப்பது புலப்படும். குடி போதை, சிந்தனையை மழுங் கடிப்பதன் மூலம், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான கோபத்தைத் திசை திருப்புகிறது. போராட்ட உணர்வுகளை மட்டுப்படுத்துகிறது. தேர்தலில் வாக்குகள் சாராயத்தால் விலைக்கு வாங்கப்படுகின்றன. கள்ளச்சாராயத் தொழில் சமூக விரோத சாம்ராஜ்யமாக உருவெடுத்து அச்சுறுத்துகிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்கம்
கடந்த காலத்திலிருந்தே தனியார் நிறுவனங்கள் பூரண மதுவிலக்குக்கு எதி ரான நிர்ப்பந்தத்தை அரசுக்கு அளித்து வரு கின்றன என்பது உண்மை தான். ஆனால் உலகமயச் சூழல், தீவிர சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கிறது. 1994ல் உருவான உலக வர்த்தகக் கழகம், மதுபானத்தை, சுதந்திர வர்த்தகப் பொருளாக வகைப்படுத்துகிறது. சேவை என்ற அடிப்படையிலோ, மூலதனம் என்ற அடிப்படையிலோ உறுப்பு நாடுகள் எங்கு வேண்டுமானாலும் இந்த வர்த்தகத்தில் ஈடுபடலாம். காட் ஒப்பந்தப் பிரிவுகள், வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் மது பானங்களின் மீது இந்தியா வரி குறைப்பு செய்ய வலியுறுத்துகின்றன. ஒப்பந்தத்தின் பல பிரிவுகள். குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில மாநில அரசுகள் நினைத்தாலும் குறுக்கே வரும் அபாயம் உண்டு.
போரே கமிட்டி
1943ல் பொது ஆரோக்கியம் பற்றிய பரிந் துரைகள் அளிப்பதற்காக இந்தியாவில் அமைக்கப்பட்ட போரே கமிட்டி, 1946ல் தனது அறிக்கையை அளித்தது. பொது ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாககுடிப்பழக்கத்தின் விளைவுகளும் பார்க்கப்பட்டன. போரே கமிட்டி அறிக்கை வறுமையாலும், வேலையின்மையாலும், பொழுதுபோக்கு வசதி இன்மையாலும் விரக்திக்குத் தள்ளப்பட்டு குடிப்பவர்களும் உண்டு; சமூகப் பழக்கம் காரணமாகவும், கூட்டாகக் குடிக்கும் பழக்கத்தாலும் குடிப்பவர்கள் உண்டு. பொருளாதார மேம்பாடு, கல்வி, ஆரோக்கியமான பொழுதுபோக்கு போன்றவற்றில் அரசு முதலீடு செய்ய வேண் டும், மது விற்பனையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும், குடிநோயாளிகளின் சிகிச்சைக்கும், மறு வாழ்வுக்கும் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
குறிப்பாக வேலை நேரத்தில் விற்பனை செய்வது தடுக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையை முன் வைக்கிறது. பெங்களூரு நிம்ஹான்ஸ்மருத்துவமனையின் ஆய்வும் அதன்விரிவான பரிந்துரைகளும் இதேகண்ணோட்டத்தைத் தான் கடைப்பிடிக் கின்றன.குடிப்பழக்கமே முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்பது தான் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பு. பரவ லாக, பெண்களின் குரல்களும் அதைத் தான் கோருகின்றன. அதே சமயம், மது அருந்து வதைக் குற்றச் செயலாக்கி தண்டனை கொடுப்பதற்கு பதிலாக, கட்டுப்படுத்துவதும், பிரச்சாரத்தின் மூலமாகக் குறைக்கச் செய் வதும் அணுகுமுறையாக இருக்கலாம் என்ற கருத்துக்களும் மேலோங்கி வருகின்றன. மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்கிற ரீதியில் ஒரு புறம் பூரண மதுவிலக்கு, இல்லையேல் மறுபுறம் அரசே ஊற்றிக் கொடுத்து வருமானம் பார்ப்பது என்ற நிலைபாடு உதவாது.
சில குறைந்தபட்ச நடவடிக்கைகளை நோக்கிப் போக வேண்டும். ஒருபுறம் உற்பத்தியைக் குறைப் பது, விற்பனையைக் கட்டுப்படுத்துவது, மறுபுறம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் குடிப்பழக்கத்தைக் குறைப்பது என்ப தையாவது உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பின்னணியில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் மாதர் சங்கத்தின் சார்பில் குடும்ப வாழ்வை சீரழிக்கும் குடிபோதைக்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு 25-10-2013 அன்று நடைபெற உள்ளது.
முக்கிய கோரிக்கைகள்
டாஸ்மாக் கடைகள் பகல் நேரத்தில் செயல்பட அனுமதிக்கக் கூடாது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை இயக்கலாம் என்பது போன்ற நேரக் கட்டுப்பாடு கோரலாம். வாரத்தில் சில நாட்கள் விற்பனை இல்லை என்று கட்டுப்படுத்தலாம். இது நட்சத்திர ஹோட்டல்களுக்கும் பொருந்த வேண்டும். கார்ப்பரேட் மற்றும், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மதுபானம் இடம்பெறக்கூடாது. 21 வயதுக்குக் குறைவானவர்களுக்கு விற்கக்கூடாது. மீறல்கள் நடக்கும் போது, உற்பத்தி செய்பவர்கள், விற்பவர்கள் மீது தண்டனை விதிக்க வேண்டும்.டாஸ்மாக் கடையோ, இதர மதுபானக் கடைகளோ ஒரு பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட கடைகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது.
ஒரு பகுதியில் மதுபானக் கடை செயல்படக் கூடாது என்று, அங்கு வசிப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் எழுத்து மூலம் ஆட்சேபணை தெரிவித்தால், அக்கடை மாற்றப்பட வேண்டும். மதுபான உற்பத்தியைக் குறைக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் இப்பகுதிகளில் விற்பனையை நிறுத்த வேண்டும்.குடியிருப்புப் பகுதிகளில் கடை நடத்த அனுமதிக்கக் கூடாது. கடை செயல்படும் இடம், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில்/பேருந்து நிறுத்தம், திரைப் பட அரங்குகள், ஆற்றங்கரை போன்ற இடங் களிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும்.தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்க அனுமதிக்கக் கூடாது.டாஸ்மாக் கடைகளில் விற்பனை இலக்கு நிர்ணயித்து, அதை நிறைவேற்ற வேண்டும் என ஊழியர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது.
இதைக் காரணம் காட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. மேற்கூறிய வழிமுறைகளை அமலாக்கும் போது ஏற்படக்கூடிய வேலை இழப்பினால் பாதிப்படையும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மது பானங்கள் விளம்பரம் செய்வது முற்றாக நிறுத்தப் பட வேண்டும். மதுபானக் கடைகளில் பெண்களின் படங்களைப் போட்டு விளம்பரம் செய்வதை அனுமதிக்கக் கூடாது. போதை பழக்கத்துக்கு எதிராக, தொடர்ச்சியான பிரச்சாரம் அரசால் நடத்தப் பட வேண்டும்.அரசே டாஸ்மாக் கடைகளை நடத்திக் கொண்டு அதில் லாபம் பார்த்துக் கொண்டிருந்தால், விழிப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும் உருவாக்குவதில் தயக்கம் ஏற்படும். எனவே, வருமானம் ஈட்டும் வழிமுறையாக அரசு இதைப் பார்ப்பது கூடாது. பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, போதை எதிர்ப்பு கருத்துக்கள் இடம் பெற வேண்டும். பொது இடங்களில் குடிப்பழக்கத்துக்கு எதிரான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
ஆலைகளில், அலுவலகங்களில் அடிக்கடி இது குறித்த கூட்டங்களை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் ஊடகங்கள் இது குறித்த விளம்பரங்களை இலவசமாக வெளியிட வற்புறுத்த வேண்டும். குடிநோயாளிகளின் சிகிச்சைக்கும், மறுவாழ்வுக்கும், அவர்களது குழந்தைகளின் கல்விக்கும், குடும்பத்தினருக்கான மன நல ஆலோசனைக்கும் தகுந்த ஏற்பாடுகள் செய் யப்படுவது குறித்து, மாநில அரசு பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home