16 November 2013

அன்பால் இருநாட்டையும் இணைத்த சமந்தா !!



குழந்தைகள் தினத்தை முன்னிட்டி சிறப்பு பகிர்வு கடவுள் இன்னும் மனித இனத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்பதைத் தான், மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும் நினைவுபடுத்துகிறது என்பது மகாகவி தாகூரின் வரிகள். அப்படி அமைதியின் சின்னமாகபதினொரு வயதிலே உருவெடுத்த சமந்தா ஸ்மித் எனும் சுட்டியின் கதை உங்களுக்காக இதோ
1972-ல் அமெரிக்காவின் மெய்ன் நகரத்தில் பிறந்து, தன்னுடைய ஐந்து வயதிலே இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்குக் கடிதம் எழுதிய சமத்துப் பொண்ணுதான் இந்த சமந்தா. அப்பொழுது, அமெரிக்காவும் ரஷ்யாவும் பகைமை கொண்டு, டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணிக் கொண்டு இருந்தன. சமந்தா பதினொரு வயது சிறுமியாய் இருக்கும் போது, யூரி அன்ட்ரபோவ் சோவியத் ரஷ்யாவின் தலைவராக இருந்தார். ரொம்பவும் ஸ்ட்ரிக்ட், இரு நாட்டுக்கும் இவராலே சண்டை வந்துவிடும் என்று அமெரிக்க பத்திரிகைகள் அவரை வில்லனா சுட்டிக் காட்டின. இப்படி ஒரு கட்டுரையைப் படித்த சமந்தா, தன் அம்மாவிடம்… ”அம்மாசண்டை போடறதுதான் அவரோட வேலைனா அதைத் தப்புன்னு அவருக்குப் புரியவைக்கணும். யார் அவருக்கு இதைச் சொல்றது?” எனக் கேட்டாள். நீயே கடிதமா எழுதேன் சமந்தா!என்றார் அம்மா. அஞ்சே வரிகளில் சமந்தா எழுதிய கடிதம் இதுதான்
மதிப்பிற்குரிய அன்ட்ரபோவ்!
உங்களுடைய புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள்! உங்கள் நாடும் அமெரிக்காவும் சண்டை போடப்போவதாக அறிகிறேன். ஏன் நீங்கள் சண்டையை விரும்புகிறீர்கள்? எப்படி அதைச் செய்வீர்கள் எனச் சொல்லவும். இரண்டாவது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்தக் கேள்வி இதுதான்ஏன் நீங்கள் என் நாட்டையும், உலகையும் பிடிக்கத் துடிக்கிறீர்கள்?
அன்புடன், சமந்தா
நவம்பர் மாதம் எழுதிய இந்தக் கடிதத்தை அப்படியே மறந்து போனாள் சமந்தா. ஆனால், அடுத்த வருடம் ஏப்ரலில் ரஷ்யாவின் தலைவரிடம் இருந்து பதில் வந்தது.
அன்புள்ள சமந்தா
உன் கடிதம் கிடைத்தது. உன்னுடைய நேர்மையும் தைரியமும் என்னைக் கவர்கிறது. நீ டாம் சாயரின் நேர்மையான நண்பனான பெக்கியை ஞாபகப்படுத்துகிறாய். நீ கேட்டது போல், நாங்கள் போரை விரும்பவில்லை. ஹிட்லரின் நாஜி படைகள் எங்கள் நாட்டைச் சூறை ஆடியபோதேநாங்கள் போரின் வலியை நன்கு உணர்ந்து இருக்கிறோம். நாங்கள் முதலில் போர் செய்ய விரும்புவது இல்லை. மேலும், நீ கேட்ட இரண்டாவது கேள்விக்கு எளிமையாக பதில் தருகிறேன். எங்கள் நாட்டில் உள்ள விவசாயிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் என அனைவரும் அமைதியையே விரும்புகிறோம். கோதுமை விளைவிக்கிறோம், கட்டடங்கள் கட்டுகிறோம், வானில் பறக்கிறோம்
நாங்கள் அமைதி விரும்பிகள். எங்கள் நாடு அமைதியின் பூமி எனஅறிய, நீ ஏன் எங்கள் நாட்டுக்கு வரக் கூடாது? இங்கிருக்கும் அர்டேக்எனும் சுட்டிகளுக்கான கேம்ப்பை நீ நிச்சயம் விரும்புவாய். கூடவே உன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வா!
அன்புடன் அன்ட்ரபோவ்.
என அந்தக் கடிதம் முடிந்தது. சமந்தா ரஷ்யா போனாள். அங்கே அவளுக்கு மாபெரும் வரவேற்பு. ரஷ்ய சுட்டிகளோடு தங்கி, பொழுதைப் போக்கினாள். வானில் முதலில் பறந்த பெண் மணியான வாலன்டினாவைச் சந்தித்துப் பேசினாள். ஆனால், அன்ட்ரபோவ் உடல்நலமின்மையால் அவளைச் சந்திக்க முடியாமல், போனில் பேசினார். சமந்தா ரஷ்ய மக்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்று புரிந்துகொண்டாள். அதே வருடம் ஜப்பானில் அமெரிக்காவின் இளைய அமைதித்தூதராய் கலந்து கொண்டு, அன்பைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் அமைதியை வளர்க்க முடியும் என ஐடியா சொன்னாள். அதை, இரண்டு நாடுகளும் செயல்படுத்தின.
சமந்தா, லைம் ஸ்ட்ரீட் எனும் நாடகத் தொடரில் நடித்துவிட்டு, விமானத்தில் வந்து கொண்டு இருக்கும்போதுஇயந்திரக் கோளாறால் பற்றிய நெருப்பில் அவளின் கள்ளமில்லாச் சிரிப்பு அடங்கிப் போனது. ஒரு அமெரிக்கச் சிறுமிக்காக ரஷ்யாவே கண்ணீர்விட்டு அழுதது. அவளின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை ரஷ்யா எழுப்பியது. அவளுக்காக ஒரு அஞ்சல்தலையையும் வெளியிட்டது. மெய்ன் நகரில் ஒரு கரடிக் குட்டியோடு பளபளக்கும் கண்களோடு, அன்பின் அற்புதச் சின்னமாக சமந்தா சிரித்துக்கொண்டு நிற்கிறாள். ஆகஸ்ட் 25. அவளுடைய நினைவு தினம்.
கடிதத்தின் மூலம் இரு நாடுகளையும் அன்பாலே பிணைத்த சமந்தா இன்றும்எல்லோரின் நினைவுகளில் வாழ்கிறாள்.
நன்றி விகடன்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home