18 November 2013

டெங்கு காய்ச்சல் தற்காத்துகொள்ளும் முறைகள்



மிழகத்தின் பல மாவட்டங்களில் இப்போது டெங்குகாய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கை அவ்வப்போது நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சலின் பாய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி? விரிவான தகவல்களை பார்ப்போம்
டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?
டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி.ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவது இல்லை.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் இல்லாமலும் ஒருவருக்கு டெங்கு இருக்குமா?
ஆம்  கொசு கடித்து நோய்க் கிருமி மனித உடலுக்குள் சென்று, மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை பல்கிப் பெருகும். அதனால், இந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி வெளிப்படும் வாய்ப்பு உண்டு.
டெங்கு காய்ச்சலைக் கவனிக்காமல்விட்டால் என்ன ஆகும்?
டெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி, மருந்து ஏதேனும் உள்ளதா?
தடுப்பு ஊசி, மருந்து எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.
டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?
டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால், இது குணமாக்கக்கூடிய காய்ச்சலே. ஒருவருக்கு ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை லட்சம் இருக்க வேண்டும். ஆனால், டெங்கு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு அது வெறும் ஆயிரமாகக்கூடக் குறைந்துவிடலாம். எனவே, தேவைப்பட்டால், ரத்தத் தட்டு எண்ணிக்கையைப் பொருத்து ரத்தம் செலுத்துதல் அல்லது ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஒரே விஷயம். காலத்தைக் கடத்தாமல் சிகிச்சை அளித்துவிட வேண்டும்.
டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகியப் பரிசோதனைகள் செய்யப்படும். பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நிலைமை மோசமாகத் தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும்.
டெங்கு காய்ச்சல் எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும்?
ஏழு நாட்களில் சரியாகிவிடும். உடல் வலி, சோர்வு போன்ற இதன் பாதிப்புகளில் இருந்து இரண்டு வாரங்களில் வெளிவரலாம்.
டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டிகொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.
வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.
வீட்டுச் சுவர்கள் மீது டி.டி.டி.மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் டெல்டாமெத்திரின்மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ்
கிரிசாலைப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.
இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!
டெங்கு காய்ச்சல் தடுக்க
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.
கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.
குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.
காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது
டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்படிப் பரவாது
ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home