1 November 2013

ஆரம்பம் திரைப்படமும் – அதிரவைத்த சில உண்மைகளும் -ஹேமந்த் கார்கரே’ வின் வீரத்தை நினவு கூற்கிறது !!



இந்தப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே
யாரையும் குறிப்பிடுபவை அல்ல
என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆரம்பம்அப்படியொரு படம்தான்.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னமே வெளியாகிவிட்டதால் நிச்சயம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்தப் படத்தின் திரை மொழி, இசை, காட்சிகள் என நுணுக்கமான ஆய்வுகளை பல விமர்சகர்களும் செய்யக் கூடும். அவற்றையெல்லாம் காத்திருந்து பார்ப்போம். இப்போது, கதையில் நகலெடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பேசுவோம்.
மர்மான முறையில் மரணித்த காவல் அதிகாரி:

கதை: காவல்துறை அதிகாரி அசோக் (அஜித்) தனது நண்பருடன் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்து களமிறங்குகின்றனர். அந்த தாக்குதலில் அசோக்கின் உயிர் நண்பர் மரணமடைய அதற்கு காரணம் என்ன என்ற ஆய்வைத் தொடங்குகிறார் அசோக்
உண்மை: நேர்மையான காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே’ – பயங்கரவாத குண்டுவெடிப்புகள் நடக்கும்போது, உரிய விசாரணையைச் செய்யாமல் தவறான நபர்களை  காவல்துறை பலமுறை கைது செய்திருக்கிறது. அதுவும் அரசியல்வாதிகள் கொடுக்கும் அழுத்தம் தாளாமல், யாரோ ஒரு முஸ்லிமைக் கைது செய்துவிடுவதும், அப்பாவிகள் நீதிமன்றக் காவலில் அவதிப்பட, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியாமல் போய்விடுவதும் உண்டு. (பார்க்கஅப்படி ஒரு வழக்காக முடிந்திருக்க வேண்டிய மாலேவ்கான் குண்டுவெடிப்புவழக்கை, காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே விசாரித்தார். குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த இந்துமத அடிப்படை தீவிரவாதிகளின் சதியை அவர் வெளிக் கொண்டுவந்தார்.

எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது அப்பாவிகளின் கொலையிலேயே முடியும். இதனை தனது விசாரணையின் மூலம் நிரூபித்த ஹேமந்த் கார்கரே மும்பையில் நடந்த ’26/11′ பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக களத்தில் உயிர்களைக் காப்பாற்றினார். பாதுகாப்பற்ற கவசம் வழங்கப்பட்டதாலேயே மரணம் நடந்ததா? என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்த முடியாத வகையில் ஆவணங்கள் தொலைந்தும் போயின.
கதை: மர்ம மரணம் அடைந்த காவல்துறை அதிகாரியின் நண்பரை தேச துரோகியாக சித்தரிக்கிறது அரசு. அத்தோடு அவரின் மனைவிக்கு ரூ.2 கோடி கொடுப்பதாக பேரம் நடக்கிறது. நான் பேரம் பேசினால் எதுவும் படியாம போகாது என்பது உங்களுக்கே தெரியும். ஆனா என்னாலயே முடியலஎன்றபடி தரகர் ரம்யா வெளியேறுகிறார்
உண்மை: ஹேமந்த் கர்கரே மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் கைது செய்யப்பட்டதும். பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் அவரை தேச துரோகியாக சித்தரித்தன.
ஆனால், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு அவர் பலியானதும் மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்தார்.
கதை: ரம்யா அரசியல்வாதிகளோடும், தொலைக்காட்சி நிறுவனங்களோடும் இணைந்து செயல்படுகிறார். பலவிதமான தரகு வேலைகளில் களத்தில் நிற்கிறார்
உண்மை: காங்கிரஸ் ஆட்சியில் வெளிவந்த, வரலாறு காணாத – 2 ஜி முறைகேடு வழக்கில், டாட்டா  மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டவர்  நீரா ராடியா. வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற நிற்வனத்தை வைத்துக் கொண்டு அவர் நடத்திய உரையாடல்கள் வெளிவந்தன. (முழு உரைகளும்) இதுபோன்ற தரகர்கள், நமது நாட்டுக்கு அமைச்சராக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் லாபியிலும் ஈடுபடுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக, அவர்களின் தொலைபேசி உரையாடல்களும் வெளியாகின.

இந்த உரையாடல்களின் மூலம் புகழ்பெற்ற NDTV செய்தி சேனலின் செய்தியாளர் பர்கா தத், அதிகார பேரங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததும் செய்தியானது. பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான லாபங்களுக்காக அவர்கள் அரசின் சொத்துக்களை தரகு பேசுகின்றனர். இதே நீராராடியாதான் டாடா நிறுவனத்துக்கு அடிமாட்டு விலையில் குஜராத் அரசின் நிலத்தையும், நிதி உதவியையும் பெற்றுக் கொடுத்தார் என்பதும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. (http://deshgujarat.com/2010/11/25/was-gujarati-bahu-niira-radia-a-nano-link-between-modi-and-tata/)
கதை: பிணையில் உள்ள தீவிரவாதியை விடுவித்துக் கொடுக்க ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே பேரம் பேசுகிறார். அதற்கான தொகை துபயில் கை மாறுகிறது
உண்மை: இன்று நடக்கின்ற தீவிரவாத தாக்குதல்களுக்கெல்லாம் உளவுத்துறை சரியில்லை, எங்கள் ஆட்சியில் அப்படியில்லை என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், கந்தகார் விமானக் கடத்தல் நடந்தது. (நாடாளுமன்ற வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடும் நடந்தது மற்றொரு அவமானகரமான நிகழ்வு)
இதுபோன்ற தாக்குதல்களை உளவுபார்த்து கண்டுபிடிப்பதை விட இப்படியொரு சம்பவத்தை வைத்து இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவது அரசியலுக்கு பலன் கொடுக்கும் என நினைத்தார்களோ என்னமோ? அவர்களின் உளவுத்துறை வேலை செய்யவில்லை. இறுதியில் இந்தியாவின் பிணையில் இருந்த தீவிரவாதியை விடுவித்தனர்.
கதை: ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் ஊழல்
இந்தப்படம் கிரியேட்டிவ் காமன் உரிமம் பெற்றதல்ல நன்றி: ராய்டர்ஸ்)
உண்மை: ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் காங்கிரசும் பாஜகவும் மாற்றி மாற்றி  ஊழல்
கதை: ஊழல்வாதியையும், ஊழல்வாதிகளுக்கு துணையாக இருந்தவர்களையும். அவர்களோடு கூட்டு சேர்ந்த தீவிரவாதிகளையும். அசோக் உள்ளிட்ட நல்லகதாப்பாத்திரங்கள் அழிக்கிறார்கள்’.
உண்மை: உண்மையில், நமது நாட்டிற்கு விடப்பட்டிருக்கும் சவாலான ஊழலையும், அப்பாவி மக்கள் கொலைகளின் மூலம் தனது அரசியல் வெற்றியை சாதிக்க கணக்குப் போடும் சக்திகளிடமிருந்தும் இந்தியாவை விடுவிப்பது நமது கைகளில்தான் உள்ளது. சரியான மாற்று எது என்பதை அறிந்து, அதன் வழியே இந்தியாவை திருப்புவது இளைஞர்களாகிய நமது கடமை.
ஆம். இது ஆரம்பம்மட்டுமே
நன்றி
சிந்தன் ரா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home