1 November 2013

முஸ்லிம்கள் பதிவு திருமணம் செய்யலாமா ?



இஸ்லாமியர்கள் பதிவு திருமணம் (Register Marriage) செய்து கொள்ளலாமா என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது... 

அதற்கு உரிய பதில் இதோ... 

இந்தியாவில் நடைமுறையிலுள்ள பதிவுத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பதிவுத் திருமணம் செய்யக்கூடாது.

முஸ்லிம் தனியார் சட்டப்படி முஸ்லிம்களுக்குத் தனித் திருமணச் சட்டங்கள் இந்த நாட்டில் உள்ளன. தலாக், மஹர், வாரிசுரிமை, பலதாரமணம் போன்ற பல விஷயங்கள் இவற்றில் அடங்கும். இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்தால் மட்டுமே இந்த உரிமைகளை முஸ்லிம்கள் பெற முடியும். 

முஸ்லிம்களேயானாலும் அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் இந்த விஷயத்தில் பொது சிவில் சட்டத்தின் கீழ் அவர்கள் வந்து விடுவார்கள். மேற்கண்ட உரிமைகளை அவர்கள் பெற முடியாது. 

அதாவது பதிவுத் திருமணம் செய்பவர் தனக்கு முஸ்லிம் தனியார் சட்டம் தேவையில்லை என்று வாக்குமூலம் தருகிறார். நேரடியாக இப்படி அவர் கூறாவிட்டாலும் அதன் விளைவு இது தான். எனவே பதிவுத் திருமணம் என்ற மாயவலையில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. 

முஸ்லிம் தனியார் சட்டத்திற்கெதிராக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயமாகிறது. 

மேலும் இஸ்லாமியத் திருமணம் பெண்ணின் பரிபூரண சம்மதத்துடன் அவளது பொறுப்பாளர் செய்து வைக்க வேண்டும். பொறுப்பாளர் இன்றி தானாக ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள முடியாது. 

பதிவுத் திருமணம் என்பது ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கெள்வதை நிபந்தனையாக்குகின்றது. அவளது தந்தையே அந்த இடத்தில் இருந்தாலும் அவர் சாட்சியாக மட்டும் தான் கருதப்படுவாரேயன்றி திருமணத்தை நடத்தி வைப்பவராக ஆக முடியாது. இதுவும் பதிவுத் திருமணம் கூடாது என்பதற்கான மற்றொரு காரணம். 

Thanks to : Onlinepj.com

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home