4 December 2013

1 ரூபாய் சாப்பாட்டு கடை விளம்பரத்துக்கு ரூ.10 லட்சம் செலவு செய்த மாநகராட்சி



சென்னை: ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் அம்மா உணவகத்தை, ரூ.10 லட்சம் செலவில் கூகுள் மேப்-பில் பார்க்கும் வசதியை மாநகராட்சி செய்துள்ளது. சென்னையில், மாநகராட்சி மூலம் 200 வார்டுகளில் தலா ஒரு மலிவு விலை உணவகம் (அம்மா உணவகம்) துவங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக மயிலாப்பூர், திருவான்மியூர், கீழ்ப்பாக்கம், திருவொற்றியூர், புளியந்தோப்பு உள்ளிட்ட 15 இடங்களில் மலிவுவிலை உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துவக்கி வைத்தார்.

இந்த கடைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மீதமுள்ள 185 வார்டுகளிலும் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது. சென்னையில் தற்போது 200 வார்டுகளிலும் மற்றும் அரசு பொது மருத்துவமனையிலும் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளுக்கும் மலிவுவிலை உணவகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மலிவு விலை உணவகத்தில் காலை உணவாக ஒரு இட்லி (100 கிராம்) ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ரூ.5க்கும் வழங்கப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம் (350 கிராம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், கருவேப்பிலை அல்லது லெமன் சாதம் ரூ.5க்கும் விற்கப்படுகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, பொங்கல் கிடைக்கும். மதியம் 12 முதல் மதியம் 3 மணி வரை தயிர் சாதம், சாம்பார் சாதம், லெமன் சாதம் கிடைக்கும்.

வாரத்தின் 7 நாட்களும் இந்த உணவு கூடங்கள் திறந்திருக்கும். ஆனால், பார்சல் கிடையாது. மலிவுவிலை உணவகத்தை அந்தந்த பகுதியில் உள்ள சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மலிவுவிலை கடைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில குறைகளும் கூறப்படுகிறது. சாப்பிடும் தட்டை சரியாக சுத்தம் செய்யாமல் தரப்படுவதாகவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக பயன்படுத்திய எந்திரம் பல இடங்களில் பழுதாகி விட்டதால், சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, மாநகராட்சி முழுவதிலும் உள்ள 200 அம்மா மலிவு விலை உணவகங்களை இணையதளம் மூலம் பிரபலப்படுத்தும் முயற்சியில் மாநகர மேயர் சைதை துரைசாமி ஈடுபட்டுள்ளார். அதன்படி, அம்மா உணவகங்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளது, கடையின் உள்புற தோற்றம் பற்றி புகைப்படத்துடன் கூடிய தகவலை கூகுள் மேப்-பில் சென்று பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூகுள் நிறுவனத்துக்கு, ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் என 200 கிடைக்கும் ரூ.10 லட்சம் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள அனைத்து மலிவு விலை கடைகளின் விவரம் மற்றும் கடையின் உள்தோற்றம், சாப்பிடும் இருக்கை உள்ளிட்ட அனைத்து தகவலையும் புகைப்படம் எடுத்து கூகுள் நிறுவனம் இணையதளத்தில் ஏற்றம் (அப்லோடு) செய்யப்பட்டுள்ளது.

அம்மா மலிவு விலை உணவகத்துக்கு வருபவர்களுக்கு தரமான உணவு வழங்க கூடுதல் செலவு செய்வதற்கு பதில், இப்படி தேவையில்லாத விளம்பரத்துக்கு ரூ.10 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். மலிவு விலை உணவகத்துக்கு வருபவர்கள் சாதாரண ஏழைகள்தான். இணையதளத்தை பார்த்து, தேடி கண்டுபிடித்து அம்மா உணவகத்துக்கு வருபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது அவர்களின் கருத்து.

(அம்மா உணவக விவரத்தை 'கூகுள் மேப்'-ல் பார்க்கலாம்)

மேலும், இரவு நேரத்தில் அம்மா உணவகத்தில் சப்பாத்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பல மாதம் ஆகிறது. அதற்கான இயந்திரமும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. சப்பாத்தி திட்டத்தை விரைவில் அமல்படுத்தினால் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home