4 December 2013

திருமணம் ஒர் இஸ்லாமியக் கண்ணோட்டம்





இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களை கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் பிரதான இடத்தைப் பெறுகின்றது. ஒரு குடும்பம் உருவாவதற்கு அத்திவாரமாக அமைவது ஆண் பெண் உறவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் மனித குலம் உற்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். அணு முதல் அனைத்திலும் பால் வேறுபாடு
காணப்படுகின்றது.

ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி என்பார்கள். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். மிருக உலகம், தாவர உலகம் உற்பட எல்லா உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவை எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றி உறவு கொள்வதற்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான். ஆனால், மனிதனைப் பொறுத்தவரையில் அவன் பாலுணர்வின் கடிவாளத்தை கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக விட்டுவிடுவதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாக அமைதல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

சமூகம் என்ற விருட்சத்திற்கு வித்தாக அமைவது குடும்பம். குடும்பம் என்ற நிறுவனத்தின் நுழைவாயில் திருமணமாகும். இப்பின்னணியிலேயே இஸ்லாம் திருமணத்திற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இளைஞர்களை மணவாழ்வுக்கு தூண்டுகின்ற பல அல்குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களை காணமுடிகின்றது. திருமணம் என்பது உலகில் தோன்றிய இறைதூதர்கள் அனைவரினதும் வழிமுறையாகும் என்பதை குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிசெய்கின்றன. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

மேலும் (நபியே) உங்களுக்கு முன்பு பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்கு மனைவிமார்களையும் குழந்தைகளையும்
கொடுத்திருந்தோம்.


இது தொடர்பான ஒரு நபிமொழியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைப்பாற்பட்டவையாகும். அவையாவன கத்னா செய்து கொள்ளல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், திருமணம் முடித்தல்.
(ஆதாரம் : திர்மிதி)

திருமணம் என்பது அல்லாஹ்வின் ஓர் அத்தாட்சி என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. பொருளாதார பிரச்சினைக்கு அஞ்சி மணம் முடிக்காமல் இருப்பது பிழையானதுள. ஒருவர் குடும்ப வாழ்வை துவங்குகின்ற போது அல்லாஹ் அவருக்கு எல்லா வகையிலும் உதவிக்கரம் நீட்டுகின்றான் என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு:
மூவருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும்: கற்பொழுக்கத்தை நாடி திருமணம் முடிப்பவர், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை, இறைப்பாதையில் போராடும் போராளி. (அஹ்மத், நஸாஈ)


மணவாழ்வின் பயன்கள்

இளைஞர்களை திருமணத்திற்கு தூண்டும் வகையில் திருமணத்தினால் விளையும் நன்மைகளைப் பற்றியும் இஸ்லாம் பேசுகின்றது.

மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானது. அதைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதும், கௌரவமானதும். பாதுகாப்பானதுமான வழியாக திருமணம் அமைந்திருப்பதாக இஸ்லாம் கருதுகின்றது. குழந்தைச் செல்வத்தைப் பெறுவது திருமணத்தின் மற்றுமொரு விளைவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். திருமணத்திற்கூடாக குழந்தைச் செல்வம் பெறப்படல் வேண்டும் என்பது ஒரு முக்கிய எதிர்ப்பார்ப்பு என்பதனாலேயே நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கக் கூடிய பெண்களை திருமணம் முடிக்குமாறு தூண்டினார்கள்.
மனஅமைதியும் உளத்திருப்தியும் திருமணத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் மற்றுமொரு நன்மையாகும். எந்த மனிதனும் வாழ்க்கைத்துனையின்றி மனஅமைதியை பெறுவது சிரமசாத்தியமானதாகும். ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கூடாக இணைகின்ற போதே இருவரது வாழ்வும் நிறைவு பெறுகின்றது.

இவ்வுண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது:
நீங்கள் ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும் அன்பையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

தாய்மை உணர்வையும், தந்தை உணர்வையும், பெறுவதற்கான வழியாக விளங்குவதும் மணவாழ்வாகும். சகோதரன், சகோதரி முதலான உறவுகள் தோன்றுவதும் திருமணத்தின் வழியிலாகும். இத்தகைய உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. சுறுசுறுப்பு, ஊக்கம், உற்சாகம், பொறுப்புணர்ச்சி முதலான மனித வாழ்வு வளம் பெற தேவையான பண்புகளை மணவாழ்வு வளர்ப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். திருமணம் முடித்தவர்களின் ஆயுள் பிரமச்சாரிகளின் ஆயுளை விட கூடியதாக அமைகிறது என்பதும் ஆய்வுகளுக்கூடாக தெரியவந்துள்ளது. அன்றாட வாழ்வின் பொறுப்புக்களை கணவன் மனைவிக்கிடையேயும் குடும்பத்தின் ஏனையஉறுப்பினர்களுக் கிடையேயும் அழகாக பகிர்ந்து கொண்டு நிறைவுடனும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும் திருமண வாழ்வு வழியமைத்துக் கொடுக்கின்றது.
சீரான குடும்பங்கள் இணைந்தே பரஸ்பர அன்பும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் கொண்ட ஒரு சிறப்பான சமூகம் தோன்ற முடியும் என்ற வகையிலும் குடும்ப வாழ்வில் நுழைவாயிலாக விளங்கும் திருமணம் முக்கியத்துவம் பெறுகின்றது.


திருமணம் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு

மணவாழ்வில் நாட்டமும் அதற்குரிய சக்தியும் கொண்டவர் தொடர்ந்தும் திருமணம் முடிக்காமல் இருந்தால் தான் வழிதவறி விடக்கூடும் என அஞ்சும் போது அவர் திருமணம் செய்து கொள்வது கட்டாய கடமையாகும். மணவாழ்வில் நாட்டம் இருந்தும் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர் தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இத்தகையவர்களுக்கு நபியவர்கள் பின்வருமாறு வழிகாட்டினார்கள். இளைஞர்களே! உங்களில் மணம்முடிக்க சக்தி பெற்றவர் மணமுடிக்கட்டும். அது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவும் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவியாக அமையும். மணமுடிக்க முடியாத நிலையில் இருப்பவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையை அறுக்கக்கூடியதாக இருக்கும்.

பின்வரும் அல்குர்ஆன் வசனமும் இத்தகையவர்களுடைய கவனத்திற்குரியதாகும்.
(திருமணம் செய்து கொள்ளும் வசதியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லாஹ் தனது பேரருளால் அவர்களை வசதிபடைத்தவர்களாக ஆக்கும் வரை அவர்கள் கற்புடன் நடந்து கொள்ளவும்.)
(24: 33)

ஒருவருக்கு மணவாழ்வில் நாட்டமும் அதற்கான சக்தியும் வசதியும் இருந்த போதிலும் மணமுடிக்காத போது தான் வழிதவறிவிடலாம் என்ற பயம் இல்லாத போது அவர் திருமணம் செய்து கொள்வது சுன்னத்தாகும். இத்தகையவர் கூட மணவாழ்வில் நுழைவதையே இஸ்லாம் வரவேற்கின்றது, வலியுறுத்துகின்றது. ஒரு வணக்கவாளியின் வணக்கம் அவர் திருமணம் முடிக்காதவரை முழுமையடையாது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்று சிந்தனைக்குரியதாகும்.

தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதவரும், குடும்பத்திற்கு தேவையான வாழ்க்கைச் செலவை வழங்க முடியாதவரும் திருமணம் முடித்தல் ஆகாது என்பதும் ஷரீஆவின் நிலைப்பாடாகும்.

மணவாழ்க்கை நடாத்தக் கூடிய சக்தி, வாய்ப்பு வசதிகள் இருந்தும் மணவாழ்வை துறந்து பிரமச்சாரியாக வாழ்வதை, துறவரம் பூணுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. குடும்ப வாழ்க்கையைப் புறக்கணித்து வணக்க வழிபாடுகளில் தீவிர ஆர்வம் காட்டிய சில நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு கண்டித்து நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் காணலாம். உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் ஆகிய இருவரும் இந்த வகையில் நபியவர்களால் வழிப்படுத்தப்பட்டவர்களாவர்.


இஸ்லாமிய திருமண ஒழுங்குகள்:

துணைத் தெரிவு

திருமணம் என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒருவகைத் துவக்கமாகும். மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவியாவாள். கணவன் என்பவன் மனைவியின் வாழ்க்கைத் துணைவனாவான். ஆண், பெண் இருபாலாரும் தமது வாழ்க்கைத் துணையை சரியாகத் தெரிவு செய்து கொள்வதில் தான் இல்லற வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது நடைமுறையில் கவனத்திற் கொள்ளும் அம்சங்கள் பல காணப்படுகின்றன. பணம், பதவி, குலம், கோத்திரம், அழகு என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இஸ்லாம் துணைத் தெரிவில் நற்குணத்திற்கும் நன்னடத்தைக்கும் முக்கியத்துவமும் முன்னுரிமையையும் கொடுக்குமாறு வழிப்படுத்துகின்றது. இஸ்லாமிய நோக்கில் ஓர் ஆண் தனக்குரிய துனையைத் தெரிவு செய்யும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.


நற்பண்புகளும் நன்னடத்தையும்

இறை நம்பிக்கையும் மறுமைப் பற்றிய விசுவாசமும் இல்லாத ஒருவரிடம் நற்பண்புகளையோ நன்னடத்தையையோ எதிர்பார்க்க முடியாது. இந்த வகையில் துணைத் தெரிவில் மார்க்கப் பற்று கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். இது பற்றிப் பேசும் சில நபிமொழிகள் பின்வருமாறு.

1. மார்க்கப் பற்றுடையவள் மூக்கறுப்பட்ட அடிமையாக இருப்பினும் அவளே சிறந்தவள் (இப்னு மாஜா)
2. மார்க்கமுள்ள பெண்ணை தேடி அடைந்து கொள், இல்லாத போது நீ அழிந்து விடுவாய் (புகாரி, முஸ்லிம்)
3. உலகம் என்பது இன்பப் பொருளாகும். அதன் இன்பப் பொருட்களுள் சிறந்தது சாலிஹான பெண்ணாகும் (முஸ்லிம்)

அழகும் அடக்கமும் பணிவும் கட்டுப்பாடும் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட ஒரு பெண்ணே இஸ்லாமிய நோக்கில் சாலிஹான பெண்ணாக கொள்ளப்படுகின்றாள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்;தில் சிறந்த, சாலிஹான பெண்ணுக்கு பின்வருமாறு வரைவிலக்கணம் சொன்னார்கள்.
'நீ அவளைப் பார்த்தால் உன்னை மகிழ்விப்பாள். நீ அவளுக்கு கட்டளையிட்டால் உடன் கட்டுப்படுவாள். நீ அவளை வைத்து சத்தியம் செய்தால் அதனை நிறைவேற்றி வைப்பாள். நீ வீட்டில் இல்லாத போது தன்னையும் உன் பொருளையும் பாதுகாத்துக் கொள்வாள். (நஸாஈ)


குழந்தைப் பாக்கியமுடையவளாக இருத்தல்

சந்ததியை விருத்தி செய்தல் மணவாழ்வின் நோக்கங்களுள் ஒன்றாகும். எனவே ஒருவர் தனக்குரிய துணையைத் தெரிவு செய்கின்ற போது குழந்தைகளைப் பெறக்கூடிய பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் வழிகாட்டலாகும்.

இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு:
அதிக அன்பும் குழந்தைப் பேறும் கொண்ட பெண்களை மணமுடிப்பீர்களாக. மறுமையில் நான் ஏனைய சமூகங்களுக்கு முன்னால் உங்களது எண்ணிக்கையை வைத்து பெருமைப்படுவேன்.
ஒரு பெண் குழந்தைப் பேறுடையவளா என்பதை அவளது குடும்பத்தில் திருமணம் முடித்துள்ள ஏனைய பெண்களை வைத்து உறுதிசெய்து கொள்ளலாம்.



Jazzakallah - Sheikhagar.org




-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home