19 December 2013

பொற்காலத்தை நோக்கி மீண்டும் பிரகாசிக்க துவங்கும் துபாய்!



100 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் சுமையால் உலகத்திலேயே உயரம் கூடிய கட்டிடமான பர்ஜ் கலீஃபாவை அபுதாபிக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட துபாய், தனது பொற்காலத்தை நோக்கி மீண்டும் பிரகாசிக்க துவங்கியுள்ளது.
பர்ஜ் கலீஃபாவை (முதலில் பர்ஜ் துபாய் என பெயரிடப்பட்டிருந்தது. பர்ஜ் என்றால் டவர் என்று பொருள்) இதுவரை ஆறரை கோடி பேர் கண்டு சென்றுள்ளனர். அவர்கள், அருகில் உள்ள ஆடம்பர ஷாப்பிங் மால்களில் இருந்து கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய ஆடைகள், வாசனைப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
பர்ஜ் கலீஃபா திறந்ததை தொடர்ந்து ஒரு காலத்தில் மணல் மேடுகளாக காணப்பட்ட பகுதிகளில் எல்லாம் கோபுரங்கள் எழத் துவங்கின.
தூய்மை, பொறுப்புணர்வின் காரணமாக துபாய் மெட்ரோ உலகில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 3 லட்சம் பேர் மெட்ரோவில் பயணித்துள்ளனர். இதனால் ரியல் எஸ்டேட் துறையிலும் முன்னேற்றம் காணப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் வீழ்ச்சியை சந்தித்ததால் 60 சதவீதம் எமிரேட்ஸுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், தற்போது நிலம் மற்றும் கட்டிடத்தில் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊக வியாபாரிகளை ஒழிக்க அரசு அண்மையில் சொத்துப் பதிவு கட்டணத்தை நான்கு சதவீதமாக அதிகரித்தது.
கடந்த ஆண்டு துபாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ் வியாபாரத்தில் 81 சதவீதம் வளர்ச்சி காணப்படுகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது.
நவம்பர் மாதம் நடந்த ஏர் ஷோவில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் 99 பில்லியன் டாலருக்கு போயிங் ஏர்பஸ் விமானங்களை வாங்கப் போவதாக அறிவித்தது. இதன் மூலம் துபாய் மத்திய கிழக்கு நாடுகளில் முக்கிய யாத்திரை மையமாக மாறப்போகிறது.
துபாய் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய வர்த்தக மையமாக மாறும் என்று ஷேக் முஹம்மது கூறியது மிகைப்படுத்தல் அல்ல என்று எக்னாமிக் டைம்ஸ் கூறுகிறது.
ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையிலுள்ள நகரம் என்ற நிலையில் விமான பயணத்தின் வரலாற்றில் துபாய் சாதனை படைத்துள்ளது. உலகிலேயே மிகச்சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் திகழ்கிறது.
தற்போது ஜபல் அலியில் மக்தூம் சர்வதேச விமான நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது. பணிகள் முழுமையடைந்தால் கிட்டத்தட்ட 15 கோடி பயணிகள் துபாய் வழியாக சஞ்சரிப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஜபல் அலி துறைமுகம் சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே மிகவும் நெரிசலான துறைமுகமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் சுற்றுலா பயணிகள் துபாய்க்கு வருகை தந்துள்ளனர். 2020-ஆம் ஆண்டு வேல்ட் எக்ஸ்போ நடைபெறும்போது இந்த எண்ணிக்கை 2 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் துபாயின் பொருளாதார நிலைக் குறித்து ஐ.எம்.எஃப் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளன. 64 பில்லியன் டாலர் தொகையை உடனடியாக திருப்பி அடைக்கவேண்டும். வாடகை விண்ணைத் தொடும்போது பன்னாட்டு நிறுவனங்கள் வேறு இடங்களை தேடும்.
தொழில் மோசடிகள் குறித்தும் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் உயர்ந்துள்ளன. மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே எமிரேட்ஸ் குடிமக்கள் ஆவர். அவர்களில் ஜனநாயகவாதிகள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர்.
சவூதி அரேபியாவில் அண்மையில் வெளிநாட்டு தொழிலாளிகளுக்கும், போலீசுக்கும் இடையே நிகழ்ந்த மோதலை ஒரு மோசமான அறிகுறியாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.
THANKS TO
NEW INDIA

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home