25 March 2014

கோடை காலத்தில் கூடவே வரும் நோய் தொல்லைகள்!



கோடைகாலம் வந்து விட்டாலே வியர்க்குரு, அம்மை நோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, சூட்டு கட்டி, அதி வியர்வை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். கோடைகால வெயில் ஒருபுறம், கோடை கால நோய்களின் வேதனை மறுபுறம். இவையனைத்தும் கோடைகால தொல்லை.

இது போன்ற நோய்கள் ஏற்பட காரணம்……… “வெயிலில் அதிக நேரம் அலைவது, குறைந்த அளவே தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அதிகநேரம் அடக்குவது, அதிகமான காரவகை பலகாரங்கள், உணவுகளை உண்பதை நேரம் தவறி சாப்பிடுவது, ஓய்வின்றி திரிவது, உழைப்பது, நேரம் தவறி தூங்க செல்வது, இரவில் அதிக நேரம் கண்விழிப்பது, தலைக்கு எண்ணை தேய்ப்பதை தவிர்ப்பது, மலம் தினசரி கழிக்காமல் இருப்பது, காய்கறி, பழங்கள் சாப்பிடுவதை வெறுப்பது, தயிர், மோர் சேர்க்காமல் இருப்பது, உடலில் எதிர்ப்பு சக்தி குறைவது, இறுக்கமான ஆடைகளை அணிவது, தரமில்லா துணிகளை (பாலிஸ்டர்) உடுத்துவது போன்ற காரணங்களால் மேற்கூறிய நோய்கள் ஏற்படக் கூடும்.

வியர்க்குருவை தடுக்க………… தினம் இருமுறை குளிக்க வேண்டும். மலத்தை அடக்க கூடாது. வெயிலில் வெகு நேரம் திரிவதை தவிர்க்க வேண்டும். அப்படியே திரிந்தாலும் உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க கருநிற குடைகளை தவிர்த்து வெள்ளை அல்லது பிறவண்ண குடைகளை பயன்படுத்தலாம். உடலை குளிர்விக்கும் பழங்கள், இளநீர், மோர், பதனீர், வெள் ளரிக்காய், நொங்கு, தர்பூசணி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். நேரம் தவறி தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக்கூடாது. நூல் ஆடைகளை பயன்படுத்த வேண்டும். காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும். முடிந்த வரையில் குளிர் நீரில் 2 முறை குளிக்க வேண்டும்.

இவையே வியர்க் குரு வராமல் தடுக்கும் வழிகளாகும். மேல் பூச்சாக ஒரிஜினல் சந்தனம் பூசலாம். பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்து குளிக்கலாம். திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை நீரில் கரைத்து தேய்த்து குளிக்க மறையும். மஞ்சள், சந்தனம், வேப்பிலை இந்த மூன்றையும் சம அளவு எடுத்து மைபோல் அரைத்து வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி 1 அல்லது 2 மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

வாரத்தில் இரு தினங்கள் நல்லெண்ணையை உடல் முழுவதும் தேய்த்து 45 நிமிடம் முதல் 60 நிமிடம் வைத்திருந்து குளிக்கலாம். ஆஸ்த்துமா நோய், சைனஸ் நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம்.

அம்மை நோய்கள்……….. பெரியம்மை, விளையாட் டம்மை, மணல்வாரி அம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும். சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

இவை அனைத்துமே எளிதில் தொத்திக்கொள்ளும் தொற்று நோய்கள். முதலில் தோன்றும் ஜுரத்தின் போதே இருமல் வழியாகவும், நோய் பரவக்கூடும். எனவே தும்மல் வழியாகவும், அவர்படுக்கும் படுக்கை வழியாகவும் நோய் பரவக்கூடும். எனவே அம்மை நோய் கண்டவரை தனி அறையில் வைத்து மருத்துவம் மேற் கொள்ள வேண்டும்.

தடுக்கும் வழிகள்……….. சரியான நேரத்திற்கு உணவு உண்பது, சரியான நேரத்திற்கு தூங்க செல்வது, உடலுக்கும், வயதுக்கும் தகுந்த உழைப்பு, உழைப்புக்கு தகுந்த ஓய்வு, உடலை குளிர்விக்கும் உணவுகள், பழங்கள், காய்கள், கீரைகள், தயிர், மோர் சேர்ப்பது, களைப்பு தீர குளிப்பது, உடலின் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வது போன்றவற்றால் மேற்கண்ட அம்மை நோயை சரிவர கண்காணித்து குணப்படுத்தாத நிலையில் மூளை, நரம்பு மண்டலம் கூட பாதிக்கப்படக்கூடும்.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home