5 June 2014

சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு?


ரியாத்:இங்கிலாந்தை சேர்ந்த மிகவும் பிரபலமான சாக்லெட் நிறுவனம் காட்பெரீஸ். இந்த நிறுவனம் தயாரித்துள்ள சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து நெக்கி ஆசியன் ரிவியூ என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நிறுவனத்தின் மலேசிய பிரிவில் தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகளில் பன்றி கொழுப்பு கலந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, மலேசிய உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்ட காட்பெரீஸ் நிறுவனத்தின் சாக்லெட்டுகளை கைப்பற்றி ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பன்றி கொழுப்பின் மூலக் கூறுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இஸ்லாமிய சட்டத்தின்படி இந்த சாக்லெட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.இஸ்லாமிய சட்டத்தின்படி, பன்றி கறி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதனையடுத்து இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் சவுதி அரசும், அங்கு காட்பெரீஸ் சாக்லெட்டுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. சவுதியில் விற்பனை செய்யப்பட்டு வரும் காட்பெரீஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளாக சாக்லெட் உள்ளிட்ட உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உணவு கட்டுப்பாட்டு துறைக்கு சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்தோனேசியாவிலும் இவ்வகை சாக்லெட்டுகளில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home