16 November 2014

பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம்... கடன் வாங்காமல் திட்டமிடுவது எப்படி?

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படித்து சமுதாயத்தில் பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதற்காக உறுதியான, திடமான செயல்வடிவம் இருந்தால் மட்டுமே, பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று விரும்பினாலும், அதற்கான திடமான திட்டத்தைப் போட்டுவைத்திருக் கிறார்களா என்றால், இல்லை. ஆனால், நம் முன்னோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு எப்படி சேமித்தார்கள் தெரியுமா?
எப்படி சேமித்தார்கள்?
குழந்தை பிறந்தவுடன், அதுவும் பெண் குழந்தை பிறந்தவுடன், அந்தக் குழந்தையின் தாத்தா, தேக்கு மரக் கன்றுகளை வாங்கித் தனது தோட்டத்தில் நட்டுவிடுவார். அந்தக் குழந்தை வளர வளர, அந்த மரக்கன்றும் வளரும். அந்தக் குழந்தை பூப்பெய்தும்போது ஒரு மரத்தை வெட்டி, செலவு செய்வார். பேத்தி கல்லூரிக்குப் போகும்போது, இன்னொரு மரத்தை வெட்டுவார். திருமணத்துக்காக இன்னொரு மரத்தை வெட்டுவார். இப்படி கடனே வாங்காமல், எல்லா செலவுகளையும் செய்து முடித்துவிடுவார்.
ஆனால், நாமோ இன்றைக்கு என்ன செய்கிறோம்? குழந்தையின் காதணி விழாவா? தனிநபர் கடன் வாங்கிச் சமாளிக்கின்றோம். தங்க நகை வாங்க வேண்டுமா? கடன் அட்டையைத் தேய்த்து காரியத்தை முடிக்கின்றோம். பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பா? கல்விக் கடன்  வாங்கிவிடுகின்றோம்.
திருமணச் சீராக கார் வாங்க வேண்டுமா? கார் கடன்  வாங்கி ஜமாய்க்கின்றோம். திருமணச் செலவுக்கான கடன் பெறும் வசதி இப்போதைய நிலையில் இல்லை என்பதால், வீட்டு அடமான கடன் பெறுகிறோம்.பிள்ளைகளுக்குத் தனி வீடு வேண்டுமா? வீட்டுக் கடன்  வாங்கச் சொல்கிறோம்.
நம் முன்னோர்கள் கடன் வாங்கித் தங்கள் செல்வத்தை இழப்பதைவிட, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் செயல்களைச் செய்தார்கள். நாமும் அவர்களைப் பின்பற்றி  கடன் பெறாமல், முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்து வந்தால் எதிர்காலம் குறித்த கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.
 நான்கு கட்டாயச் செலவுகள்!
ஆணோ, பெண்ணோ, குழந்தை களுக்கு 4 முக்கிய செலவுகளைக் கட்டாயம் செய்தாக வேண்டும்.
1. 4 வயதில் ஆரம்பக் கல்வி
2. 18 வயதில் உயர்கல்வி,
3. 20 வயதில் பட்ட மேற்படிப்பு,
4. 25 வயதில் திருமணம்
குழந்தைகளின் காதுகுத்து விழா, பெண் குழந்தைகள் பூப்பெய்தும் விழா போன்றவை அவரவர் வசதிக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ப மாறுபடும் என்பதால், அதை எல்லோரும் ஒரேமாதிரி திட்டமிட முடியாது. கல்வி, திருமணம் போன்றவற்றை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான திட்டமிடலை மட்டும் பார்ப்போம்.
 மூன்று வகை பணவீக்கம்!
முன்பெல்லாம் விலைவாசி என்பது வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது மாதத்துக்கு ஒருமுறையோ உற்பத்திக்கேற்ப மாறுபடும். ஆனால், வளர்ச்சி மற்றும் தேவையின் காரணத்தினால் ஒவ்வொரு மாதமும்  ஏற்றமடைந்த விலைவாசி இன்று தினமும் ஏறிக்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் கல்வி, மருத்துவம், மற்றும் கல்யாணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்கும் பொருந்தும்.
பொதுவாக, விலைவாசி ஏற்றத்துக்கு நாம் முக்கியமாக மூன்று விஷயங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும். அவை, உணவுப் பணவீக்கம், கல்விப் பணவீக்கம்), மருத்துவச் செலவுக்கான பணவீக்கம். இவற்றில் உணவுப் பணவீக்கம் 8 சதவிகிதமாக உள்ளது. மருத்துவப் பணவீக்கம் 15 சத விகிதமாகவும், கல்விப் பணவீக்கம் 20 சதவிகிதமாகவும் உள்ளது என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விலைவாசி ஏற்றத்தைக் கணக்கிட 1980-ல் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி ஏற்றம் கணக்கீடு (Cost Inflation Index) செய்யப்படுகிறது. (ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முடியும் தருவாயில் இந்தக் கணக்கீடு செய்யப்படும்!) அன்று (1980-ல்) 100 புள்ளிகளாக இருந்த கணக்கீடு, 2014 மார்ச் மாத இறுதியில் 1024-ஆக இருக்கிறது. கடந்த 33 வருடத்தில் சராசரியாக 7.30% பணவீக்கம் உயர்வாகும். அதுவும் வருடந்தோறும் கூட்டு வளர்ச்சி (Power of compounding) உயர்ந்து வருகிறது. செலவு, கூட்டு வளர்ச்சியில் வளர்ந்துவரும்போது நம் முதலீடும் அதே விகிதத்தில் வளர்கிறதா என்றும், விலைவாசி ஏற்றத்தைத் தாண்டி வளருகிறதா என்பதையும் பார்ப்பது மிகவும் அவசியம்.
 குறையும் வட்டி!
நம் நாடு வளர்ச்சிப் பாதையில் கால் எடுத்துவைப்பதற்குமுன், வங்கி வட்டி விகிதம் 15 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இன்று அது 8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. எப்போதுமே ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது படிப்படியாக வட்டி விகிதம் குறையும்.
வங்கியில் 1995-ல் வட்டி விகிதம் 15 சதவிகிதமாக இருந்தது. அன்று முதலீடு செய்த தொகை 5 வருடத்தில் இரட்டிப்பாக வளர்ந்திருக்கும். ஏனென்றால், 5 வருட கூட்டுவட்டி கிடைத்தது. ஆனால், இன்று வட்டியின் விகிதம் 8 சதவிகிதமாக இருக்கிறது. இதனால் உங்கள் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக 10 வருடங்கள் ஆகும். ஆனால், இன்று பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதால், வங்கிகள் டெபாசிட்டை 10 வருடத்துக்குப் பதில், 3 வருடங்களுக்கு மட்டுமே ஏற்கிறார்கள். மேலும், வட்டி விகிதம் வருங்காலத்தில் படிப்படியாகக் குறையவே வாய்ப்புள்ளது.
முதலீடு என்பது விலைவாசியைத் தாண்டி வளருமேயானால், உங்கள் கனவு எளிதில் நிறைவேற உறுதுணையாக இருக்கும். இதுவே, உங்கள் முதலீடு விலைவாசி ஏற்றத்துக்கு குறைவாக வளர்கிறது எனில், அது உங்கள் வீழ்ச்சிக்கு வழி செய்யும். அது மட்டுமல்ல, நாம் சேமிக்கத் தேர்வு செய்யும் முதலீட்டு வகையானது கூட்டுவட்டி அடிப்படையில் வளரக்கூடிய வகையில் இருந்தால் மட்டுமே நம் கனவை எளிதில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
 எதற்கு, எந்தவகை முதலீடு?
குறுகிய கால முதலீடு (ஒரு வருடத்துக்குக் குறைவாக): வங்கி சேமிப்பு, அஞ்சலகச் சேமிப்பு, லிக்விட் ஃபண்ட் 
நடுத்தரக் கால முதலீடு (1 முதல் 3 ஆண்டுகள் வரை): வங்கி மற்றும் அஞ்சலக ஆர்டி, அரசு பாண்டுகள்
நீண்ட கால முதலீடு (3 வருடங்களுக்கு மேல்): மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகள், ரியல் எஸ்டேட்
 எப்படித் திட்டமிடுவது?
இன்றைக்கு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதைத் தெரியாமல், ஏதோ ஒரு திட்டத்தில் இலக்கு இல்லாமல் சேமிக்கிறார்கள். பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம் என்பது உடனே நடக்கும் நிகழ்வல்ல. குழந்தை பிறந்ததிலிருந்து இந்த நிகழ்வுகளுக்கான 18-25 வருடங்களில் இந்தச் செலவுகளுக்கான பணத்தை எல்லா பெற்றோர்களாலும் நன்றாகவே திட்டமிட்டு சேர்க்க முடியும்.
பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கு முதலீட்டைத் திட்டமிடுவது பெற்றோர்களுக்குச் சாதகமா அல்லது கல்வி மற்றும் திருமணத்தை கடன் வாங்கி நிறைவேற்றுவது சாதகமா என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.
பொதுவாக, பணம் என்பது கடன் வாங்குபவர்களுக்கு எதிர்மறையாகச் செயல்படுகிறது. அதுவே பணம், முதலீடு செய்யும்போது அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த விளக்கத்தின் மூலமாக உங்கள் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்துக்கு கடன் வாங்குவதா அல்லது முன்கூட்டியே முதலீடு செய்து கடன் வாங்காமல் நிறைவேற்ற விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்.
குழந்தைகளின் திருமணச் செலவுக்கு!

முன்னரே திட்டமிடுதல்:
மகள் வயது 1
மகள் திருமண வயது 25
திருமணச் செலவுக்குத் தேவையான தொகை ரூ.25 லட்சம்
முதலீடு மூலம் எதிர்பார்க்கும் வருமானம் 12%
இன்னும் 24 வருடங்களில் மகள் திருமண வயதை அடைவார்.
24 X 12 = 288 மாதங்கள்.
இதற்காக 12% வருமானம் எதிர்பார்க்கும் மியூச்சுவல் ஃபண்டில், ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூ.1509. அதாவது, மகள் திருமணத்துக்காக பெற்றோர் முதலீடு செய்வது ரூ.4,34,592. ஆனால், 12% வளர்ச்சியில் நமக்குக் கிடைப்பதோ ரூ.25 லட்சம்.
கடன் வாங்குதல்:
மகளின் திருமணத்தை எந்த வகையிலும் பணத்தைச் சேர்க்காமல், சொந்த வீட்டினை அடமானம் வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கி நடத்த முடிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கடனுக்கு 14% வட்டி விகிதத்தில், மாதமொன்றுக்கு ரூ.38,817-ஆக மாத தவணையாகச் செலுத்துவார்.
 கடன் பெற்ற தொகை ரூ.25 லட்சம் 10 வருடங்களுக்கு வட்டியாகச் செலுத்துவது ரூ.21,58,040  அசலும், வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ. 46,58,040 குழந்தைகளின் திருமணத்துக்கு முன்னரே திட்டமிட்டால், மாதம் ரூ1,509 X 288 = 4,34,592 ரூபாயை சீராகச் சேமித்து திருமணச் செலவுக்கான ரூ.25 லட்சத்தை எளிதாகப் பெறலாம். ஆனால், கடனாக வாங்கும் ரூ.25 லட்சத்துக்கு ரூ.46,58,040 (120 மாதங்கள் அசலும், வட்டியாக) செலுத்துகின்றனர்.
 பிள்ளையின் கல்விச் செலவுக்கு!
முன்னரே திட்டமிடுதல்:
பிள்ளையின் வயது 1 பட்டபடிப்புக்குச் செல்லும் வயது 18 உயர்கல்வி செலவுக்குத் தேவையான தொகை ரூ.15 லட்சம் முதலீட்டில் எதிர்பார்க்கும் வருமானம் 12% இன்னும் 17 வருடங்களில் பிள்ளை பட்டபடிப்புக்கு தயாராவார்.
 17 X12 = 204 மாதங்கள் இதற்காக 12% வருமானம் எதிர்பார்க்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.2268 முதலீடு செய்து வந்தாலே, கல்வி செலவை பெற்றோர் ஈடு செய்துவிடலாம்.

அதாவது, முன்னரே திட்டமிடுவதால் பெற்றோர் முதலீடு செய்யும் தொகை ரூ.4,62,672. ஆனால், 12% வருமானத்தின் மூலம் ரூ.15 லட்சமாக உயர்ந்திருக்கும்.
 கடன் வாங்கினால்...
இப்படி இல்லாமல் பெற்றோர்கள் குழந்தையின் கல்வி செலவுக்கு வங்கியில் கல்விக் கடனாக ரூ.15 லட்சம் பெறுகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.21,521 இஎம்ஐயாகச் செலுத்துவார் (120 மாதத்துக்கு 12% வட்டி விகிதத்தில்) 10 வருடங்களுக்கு வட்டி: ரூ.10,82,520 அசலும் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.25,82,520 பெற்றோர்கள் முன்னரே திட்டமிடுவதால் சிறு தொகையை முதலீடு செய்து, கூட்டுவளர்ச்சி மூலம் பிள்ளைகளின் அனைத்து கனவுகளையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?  இனியும், கடன் வாங்கிக்  காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்காமல், உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்காக இன்றே திட்டமிட்டு, பணத்தைச் சேர்க்கத் தொடங்குங்கள்.





-சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home