30 October 2013

அண்ணனுடன் உறங்க பயப்படும் தங்கை



டியர் மேடம், என்னுடைய பிரச்னையை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று கூடத் தெரியவில்லை. வெளியில் சொன்னால் என்னை எப்படி  நினைப்பார்களோ என பயமாக இருக்கிறது. என் கணவர், அம்மா, சகோதரிகள் என யாரிடமும் சொல்ல பயந்து கொண்டு, கடைசியாக உங்களுக்கு  எழுதுகிறேன்.
எனக்கு 12 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்தே இருவரும் ரொம்பவும் ஒற்றுமையானவர்கள்.  பிள்ளைகளால் எனக்கோ, என் கணவருக்கோ எந்தப் பிரச்னைகளும் வந்ததில்லை. படிப்பிலும் இருவரும் சுட்டி. சமீப காலமாக என் மகளிடம் ஏதோ  மாற்றத்தைப் பார்க்கிறேன். பள்ளியிலேயே முதல் மாணவியாக வரக்கூடியவள், கொஞ்ச நாளாக படிப்பில் கவனமின்றி இருக்கிறாள். அடிக்கடி  கோபப்படுகிறாள்.
எதற்கெடுத்தாலும் அழுகிறாள். தைரியமான பெண்ணான அவள், தாழ்வு மனப்பான்மையில் அவதிப்படுகிறாள். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாள்.  சரியாக சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. நானும் அவளிடம் எப்படியெல்லாமோ விசாரித்துப் பார்த்தேன். பதில் இல்லை. ஒருநாள் அவளாகவே  என்னிடம் வந்து அழுதாள். இனிமேல் நான் உன்கூடப் படுத்துக்கறேன். அண்ணன்கூட படுக்க மாட்டேன்என்றாள்.
என்ன, ஏதென விசாரித்த எனக்கு அதிர்ச்சி. தூக்கத்துல அண்ணன் என்பக்கம் திரும்பிப் படுக்கறான். கட்டிப் பிடிக்கிறான். எனக்கு என்னவோ பயமா  இருக்கு... ஏதோ தப்புனு தெரியுது... என்னால நார்மலா இருக்க முடியலை...என அழுதாள். எனக்கு அவளுக்கு என்ன பதில் சொல்லித் தேற்றுவது  எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை என் மகனும் மிகவும் நல்லவன். டீன் ஏஜில் இருந்தாலும், அனாவசியமாக பெண்களைக்  கிண்டலிப்பது, சீண்டிப் பார்ப்பது மாதிரியான எந்தத் தவறான பழக்கமும் அவனுக்கு இல்லை.
எதேச்சையாக தூக்கத்தில் நடந்த விஷயம் என இதை ஒதுக்கித் தள்ளுவதா அல்லது என் மகனைக் கூப்பிட்டுக் கண்டிப்பதா? இதனால் அவன் வேறு  மாதிரி மாற ஏதேனும் வாய்ப்புண்டா? எனக்கு என் மகன், மகள் இருவருமே முக்கியம். இருவரின் மனமும் நோகாதபடி, இந்தப் பிரச்னையை சரி செய்ய ஏதேனும் வழிகள் உண்டா?- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
உறவுச்சிக்கலுக்கு தீர்வு  சொல்கிறார் மனநல மருத்துவர் லட்சுமிபாய். அன்புத் தோழி, முதலில் பயத்தையும் பதற்றத்தையும் உதறித் தள்ளுங்கள்.  நீங்கள் சொல்வது போல உங்கள் மகனும், மகளும் நல்ல பிள்ளைகள்தான். பிரச்னை அவர்களிடத்தில் இல்லை. அவர்களது வயது அப்படி. இருவருமே  விடலைப் பருவத்தில் இருக்கிறார்கள். பெண் குழந்தைக்கு ஓரளவு வயதானதும் அவளை தனியே படுக்க வைக்கப் பழக்க வேண்டும். என்னதான்  அண்ணன் - தங்கையாக இருந்தாலும், அந்த வயதுக்குரிய உடல் மாற்றங்கள், ஹார்மோன்களின் வேலை என எல்லாமே அந்த வயதில்  தலைதூக்குவது இயல்புதான்.
ஆண் பிள்ளைக்குப் போய் அம்மா எப்படி எல்லாவற்றையும் சொல்லித் தருவது, அப்பாதானே சொல்ல வேண்டும் என்கிற நினைப்பில் பல  அம்மாக்களும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கிறார்கள். அப்படியில்லை. ஆண் குழந்தைக்கும் அம்மாதான் ஆசிரியை. உடலமைப்பைப் பற்றி, பருவ  வயதில் உண்டாகக் கூடிய மாற்றங்கள் பற்றி, எது சரி, எது தவறு என்பன பற்றியெல்லாம் நீங்கள்தான் உங்கள் மகனுக்கு நாசுக்காக எடுத்துச் சொல்ல  வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தங்கையுடன் ரொம்பவும் நெருக்கமாக இருக்கக் கூடாது என்பதையும் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும்  மிகவும் பொறுமையாக, அன்பாகச் சொல்ல வேண்டியது முக்கியம். உங்கள் மகளிடம் காணப்படுகிற அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், அவள் தீவிர  மனச்சோர்வில் இருப்பது தெரிகிறது. உடனடியாக அவளை ஒரு கவுன்சலிங் அழைத்துச் செல்லுங்கள். அவளுக்கு மட்டுமின்றி, உங்கள் மகனுக்கும்உங்களுக்கும், உங்கள் கணவருக்குமேகூட ஒரு கவுன்சலிங் அவசியம்.
விடலைப் பருவத்தில் உண்டாகக் கூடிய உடல், மன மாற்றங்களைப் பற்றி, இனப்பெருக்கம் பற்றியெல்லாம் கவுன்சலிங்கில் அவர்களுக்கு  நாகரிகமாகப் புரிய வைப்பார்கள். உங்களுக்கும், உங்கள் கணவருக்குமான அந்தரங்க உறவு உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியாமல் ரகசியமாக இருக்க  வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் மகளிடம் நிறைய பேசுங்கள். எல்லாம் சரியாகி விடும் என நம்பிக்கை கொடுங்கள். இந்தப்  பிரச்னைக்கு கவுன்சலிங்கும், உங்களுடைய அன்னியோன்யமான பேச்சும்தான் மருந்து.




ஒருவேளை இதை நீங்கள் அலட்சியப்படுத்தினால், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் திருமணமே வேண்டாம் எனத் தவிர்ப்பதற்கும், இருவரும்  பிரியவும் வாய்ப்புகள் அதிகம். அவர்களது எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கும். எனவே தாமதிக்காமல் உடனடி நடவடிக்கைகளில் இறங்குங்கள்.
எழுத்து வடிவம்: ஆர்.வைதேகி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home