20 October 2013

‘வரிச்சலுகை’க்கு லஞ்சம்; சி.எம்முக்கும் ஒரு பங்கா..? : டைரக்டர் ‘பகீர்’ தகவல்



காற்றைப்போல் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்ச ஊழல்தான். இந்த லஞ்ச ஊழல் ஏற்படுத்தும் பாதிப்புகளை பதிவு செய்யும் விதமாக, விழிப்புணர்வு நோக்கில்அங்குசம்என்ற திரைப்படத்தை இயக்கினார் புதுமுக இயக்குநரான மனுக்கண்ணன்.
ஆனால் அந்தப் படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க தணிக்கைக் குழு உற்சாகமாகப் பரிந்துரைத்த போதும் அந்தப் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்கவில்லை. ஏன்? தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவங்களை இயக்குநர் மனுக்கண்ணனே நம்மிடம் விவரிக்கிறார்.
“”என் சொந்த ஊர் வேலூர். நான் எம்.எட்., எம்.பி.ஏ. படித்த பட்டதாரி. மும்பைல, திரைப்பட டைரக்‌ஷனுக்கான படிப்பையும் முடிச்சேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே போராட்ட குணம் அதிகம். கண்முன் நடக்குற தவறுகளை தட்டிக் கேட்பேன். பேனா முனையால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளவன் நான்.
இந்த நிலையில் துபாயில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளரா வேலை பார்த்தேன். அப்ப நக்கீரன் இதழில் வந்த திருச்சி மாவட்டம் பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சீனிவாசன், ஊழலுக்கு எதிரா கடுமையா போராடி வரும் தகவல்களைப் படிச்சேன். தகவல் அறியும் உரிமை சட்டத்தையே அவர் அங்குசமா வச்சிக்கிட்டு, அரசாங்க எந்திரம் என்கிற யானையை அவர் எதிர்த்து நிற்பது எனக்குப் பெரிய விஷயமா பட்டது.
உடனே தமிழகம் திரும்பிய நான் அந்த சீனிவாசனின் கேரக்டரை மையமா வச்சி ஒரு திரைக்கதையை உருவாக்கி, பாடல்கள், ஃபைட்டுன்னு சில சினிமா சமாச்சாரங்களையும் சேர்த்து அங்குசம்என்ற பெயரிலேயே திரைப்படத்தை எடுத்தேன்.
அந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் சமூகநீதிக்கு எதிரா குரல் கொடுக்கும் உணர்ச்சி இளைஞர்களுக்கு ஏற்படும். லஞ்சம் வாங்கும் ஆட்களுக்கு கூச்ச உணர்ச்சியை உண்டாக்கி, அவர்களை இந்தப் படம் திருந்த வைக்கும். பாமர மக்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், நம்ம உரிமையைப் பெற நாம எதற்குக் காசு கொடுக்கணும் என்கிற வேகம் அவர்களுக்குள் தீயா பெருக ஆரம்பிக்கும்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், படத்தின் நிஜ ஹீரோவான சீனிவாசனைப் பேச வைத்தேன். அவர் திருச்சி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகத் திரையைக் கிழித்துத் தொங்க விட்டார். அந்த விழாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பத்தின நூலை அத்தனைபேருக்கும் இலவசமா விநியோகிச்சோம். அந்த விழாவில் சீமான் மாதிரியானவர்கள் கலந்து கொண்டு சீனிவாசனையும் அங்குசம் படத்தையும் மனதாரப் பாராட்டினார்கள்.
அடுத்து படம் முடிந்து தணிக்கைக்கு அனுப்பினோம். செப்டம்பர் 2-வது வாரம் அந்தப் படத்தை தணிக்கைக் குழு உறுப்பினர்களான நல்லி குப்புசாமி செட்டியார், சங்கரவள்ளி, நிருத்தியா, சதீஷ்குமார் மற்றும் சென்சார் போர்டு அதிகாரி பக்கிரிசாமி ஆகியோர் பார்த்தார்கள். படம் முடிந்ததும்அதிகாரி பக்கிரிசாமி அபாரமா எடுத்திருக்கீங்க. இந்தப் படத்தை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் மாணவர்களுக்குப் போட்டுக் காட்டணும். இதுக்கு ரெண்டுயுசர்டிபிகேட் கொடுக்க வாய்ப்பிருந்தால் கூட கொடுப்பேன். உடனே வரிவிலக்கு கேட்டு அரசுக்கு அப்ளை பண்ணுங்கன்னு பாராட்டினார்.
நல்லியோ எங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை படத்தில் கொண்டு வந்திருக்கீங்கஎன மனதாரப் பாராட்டினார். இப்படி தணிக்கைக் குழுவில் இருந்த அத்தனை பேரும் பாராட்டினாங்க. 20-09-2013-ல் தணிக்கை சான்றிதழ் வாங்கினேன். சென்சார் போர்டு அதிகாரி சொன்ன மாதிரி அடுத்தநாளே வரிவிலக்குக்கான அப்ளிகேஷனை 10 ஆயிரம் ரூபாய் டி.டி.யோடு போட்டேன். இதைப்பரிசீலித்த வரிவிலக்கு அதிகாரிகள் படம் பார்க்கணும்னு சொல்ல அவங்களுக்கும் படத்தைப் போட்டுக் காட்டினேன்.
நான்கு அதிகாரிகளுடன் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜேஸ்வரி, பி.வாசு ஆகியோரும் படத்தைப் பார்த்தாங்க. படம் முடிந்ததும் சங்கர் கணேஷ் ஓடி வந்து என்னைக் கட்டித் தழுவி, “இப்படிப்பட்ட படம்தான் வரணும். நீங்க பெரிய இயக்குநரா, தயாரிப்பாளரா வளர என் ஆசீர்வாதம்னு வாழ்த்தினார்.
எல்.ஆர்.ஈஸ்வரி, ராஜேஸ்வரின்னு எல்லோருமே வாழ்த்தினாங்க. அதிகாரிகளும் கைகொடுத்துப் பாராட்டு தெரிவிச்சிட்டு… “நீங்க பாடல் காட்சியில் காட்டிய தேசத்தலைவர்களில் அம்பேத்காரையும் சேர்த்திருக்கலாமேன்னு சொன்னாங்க. கண்டிப்பா அதையும் சேர்த்துருவேன்னு உறுதியா சொன்னேன். அடுத்து, அவங்க துறை அமைச்சரான ரமணாவைப் பார்க்கச் சொன்னாங்க.
அப்பதான் எனக்கு அந்த அதிர்ச்சியான அனுபவம் கிடைக்க ஆரம்பிச்சிது என ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், மேலும் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து எனது நண்பரான அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தாமோதரனோடு, அமைச்சர் ரமணாவின் கிரீன்வேஸ் சாலை அலுவலகத்துக்கு செப்டம்பர் கடைசி வாரம் போனேன். அமைச்சர் ரமணாவின் அப்பா இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இறந்திருந்தார். துக்க விசாரிப்புக்குப்பின், எக்ஸ் மினிஸ்டர் தாமோதரன் அமைச்சரிடம் என்னை அறிமுகப்படுத்தி, என் படத்துக்கு வரிவிலக்கு தேவைன்னு சொன்னார்.
அமைச்சரோ, செகரட்டரியேட்ல தன் அஃபிஸியல் பி.ஏ. சரத்பாபுவைப் பார்க்கச் சொன்னார். மறுநாள் காலைல, நான் மட்டும் செகரட்டரியேட் போனேன். அமைச்சர் ரமணா உள் அறையில் இருக்கமுகப்பு அறையில் பி.ஏ. சரத்பாபு இருந்தார். நாலஞ்சு பேர் அங்கே இருந்தாங்க. என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு, அமைச்சர் பார்க்கச் சொன்னது பற்றி அவரிடம் சொன்னேன்.
வரி விலக்கா? உங்க படத்துக்கு பட்ஜெட் என்ன?’ என்றார்.
நான் சுதாரித்துக் கொண்டு மினி பட்ஜெட் படம் சார்என்றேன்.
சரத்பாபுவோ, “சரி சில ஃபார்மாலிட்டிஸை முடிக்கணும்என்றார்.
என்ன சார் பார்மாலிட்டிஸ்என்றேன்.
பெரிய பட்ஜெட் படம்னா 50 லட்சம், சின்ன பட்ஜெட் படம்னா 5 லட்சம் கொடுக்கணும்என்றார். நானோ, “சார், நான் லஞ்சம் தவறுங்கிற கான்செப்ட்ல படம் எடுத்திருக்கேன். அப்படியிருக்க நானே பணம் கொடுத்தா சரியா இருக்காது. அதோட தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் இதுஎன்றேன்.
பி.ஏ.வோ, “அதெல்லாம் இருக்கட்டும்இங்க ஃபார்மாலிட்டிஸை முடிச்சா தான் வரிவிலக்கு கிடைக்கும். நீங்க சி.எம்.கிட்டயே போனாலும் அவங்க என்னைத்தான் பார்க்கச் சொல்வாங்க. இங்க ஆட்சி வேற, அரசாங்கம் வேற. ஆட்சிக்கு அ.தி.மு.க., தி.மு.க.ன்னு மாறிமாறி யார் வேணும்னாலும் வரலாம். ஆனா அரசாங்கத்தை நடத்துற நாங்க அப்படியே இருப்போம். ஒண்ணு தெரியுமா? இந்தப் பணத்தில் ஒரு பகுதி சி.எம்.மு.க்குப் போகுது. பிறகு துறை மந்திரிக்கும் கொடுத்தாகணும்.
மந்திரி பரம்பரை பணக்காரர் இல்லை. அவர் ஒரு தடவை தொகுதிக்குப் போனா, ஒரு கோடி வரை அவர் செலவு பண்ணியாகணும். அந்தப் பணத்தை நாங்கதான் கலெக்ட் பண்ணிக் கொடுத்தாகணும். புரிஞ்சுதாஎன்று பாடமே எடுத்தார்.
நானோ, “என் படத்தில் முதல்வர் கேரக்டரை உயர்த்திச் சொல்லியிருக்கேன். முதல்வரிடம் புகார் போனதும் அவர் நேர்மையா எம்.எல்.ஏ. மேல் நடவடிக்கை எடுக்கிற மாதிரி காட்சிகளை வச்சிருக்கேன். அந்தப்படம் முதல்வர் என்ற கேரக்டரின் இமேஜை பல மடங்கு உயர்த்தும். முதல்வரை உயர்த்தும் ஒரு படத்துக்கு நான் லஞ்சம் தரவேண்டிய அவசியமில்லை.
லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கு, லஞ்சம் கொடுத்தா அது எனக்கு அவமானம். வேண்டுமானால் சி.எம். நிதிக்கு 3 லட்சம் தர்றேன்என்றேன்.
சரத்பாபுவோ, “நோ காம்ப்ரமைஸ்என்றார்.
நான் கும்பிடு போட்டு விட்டு வெளியே வந்துவிட்டேன்.
அடுத்து ஒரு ஆளுங்கட்சி பிரமுகர், இதை கார்டன் கவனத்துக் கொண்டு போகலாம் என்றபடிகார்டனில் வேலை செய்யும் ரவிச்சந்திரனுடன் என்னைப் பேச வைத்தார்.
அந்த ரவிச்சந்திரனோ, “இதையெல்லாம் நாங்க எப்படி மேடத்தின் கவனத்துக்கு கொண்டு போக முடியும். அதிகாரிகள் கேட்டதைக் கொடுத்து விட்டுப் போங்க சார்என்றார்.
அந்த நிமிடமே வரி விலக்கே வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன். மக்களுக்கு விழிப்புணர்வைப் போதிக்கும் படத்தை எடுத்ததுக்கு தண்டனையா நான் வரியையும் கட்டிட்டு படத்தை ரிலீஸ் பண்ணப் போறேன்.
என் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கலைங்கிற தகவல் பல திரைப்புள்ளிகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர்கள் என்னிடம் துக்கம் விசாரிக்கிறார்கள். இன்னும் என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம், “லஞ்சத்தை எதிர்க்கவே லஞ்சம் கொடுத்தாகணும்என்பதுதான்என்றார் ஆவேசமும் ஆதங்கமுமாக.
எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் கடவுள்என்பார்கள். லஞ்சமும் ஒருவகையில் அப்படித்தான் போலும்.
நன்றி  : நக்கீரன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home