9 November 2013

வரவேற்பறை படுக்கையறையாக விரியும் கோலம் – ஊடக அவலம்!



தற்போது போதாததிற்கு நித்தியானந்தா வைத்து கூட தந்தி தொலை காட்சியில் வந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டு இருக்கிறார்
என்ன கொடுமை சரவானா என்று தான் சாதாரண மக்கள் கூட அக்கம் பக்கம் பேச தொடக்கி உள்ளார்கள் தற்போது
ஊர் அறிந்த கேடிகளை கூட இந்த ஊடகம் நல்லவனாய் காட்டுகிறது இதை விட ஒரு நல்ல உதாரணம் இந்த ஊடகத்தை மக்கள் மதிக்காமல் இருப்பதற்கு ஒரு எடுத்து காட்டு தேவையில்லை ஏன் பணக்கார வீடுகளில் இதை போன்ற கேவலங்களை நடைபெறுவது இல்லையா ? அதை வெளியே கொண்டுவர வேண்டியது தானே ஏன் துணிவு இல்லையா . இவர்களுடைய பரபரப்பிற்கு ஏழைகளின் மானங்களை அடகுவைக்கிரார்கள் இந்த வக்கற்ற ஊடகங்கள்

தற்பொழுது தமிழகத்தில் புற்றீசல் போல தொலைக்காட்சிகள் தோன்றி வருகின்றன. பொழுதுபோக்கு என்ற பெயரில் சினிமா, நகைச்சுவை, பாட்டு என்ற நிலை மாறி ஒவ்வொரு தொலைக்காட்சியும் பார்வையாளர்களைக் கவரவேண்டும்
என்ற நோக்கில் ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு விதவிதமான நிகழச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. வியாபாரம் மட்டுமே நோக்கமாக கொண்டியங்கும் இத்தொலைக்காட்சிகள், இதன் மூலம் பார்வையாளர்களின் செல்போன் பில்களையும் மறைமுகமாக கறந்து வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்னரெல்லாம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சமூகத்தின் நிலைபாடுகள், அடிப்படை வசதிகள் என ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி நீதிக்காக, நீதியின் குரல், சட்டம் உங்கள் கையில் என பல சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பார்வையாளர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் நிகழ்ச்சிகளாகவும் பல நிகழ்ச்சிகள் வலம்வந்தன. இவைகூட தொலைக்காட்சிகளின் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் ஒன்றாக இருப்பினும்கூட அவற்றால் பொது மக்களுக்குப் பல்வேறு பயன்களும் இருந்தன என்பது உண்மை!
அதன் தொடர்ச்சியாக, பாலியல் சம்பந்தமான கேள்வி பதில்கள் இரவு நேரங்களில் பத்துமணிக்கு மேல் ஒளிபரப்பு செய்தன. இத்தகைய நிகழ்ச்சிகள், மக்களின் உள்மன வக்கிர எண்ணவோட்டங்களை வெளிக்கொண்டு வந்து சமூகத்துக்கு அது தீங்காக முடியுமென்பதை அரசுகள் கவனித்து இப்பணமுதலைகளின் இத்தகைய செயல்பாடுகளுக்குக் கடிவாளம் போட்டிருக்கவேண்டும். எதிர்ப்பு எப்பக்கமிருந்தும் எழாததால் குளிர்விட்டுப்போன இப்பண முதலைகள் அடுத்த நிலைக்கு நகர்ந்தன.
தற்பொழுது கேரளாவில் உள்ள தொலைக்காட்சிகள் கண்ணாடி, நிஜம், கதையல்ல ஜீவிதம்  போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. இந்நிகழ்ச்சிகள் குடும்ப தகராறுகளைத் தீர்த்து வைக்கும் அளப்பரிய சேவை நிகழ்ச்சிகள் என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளன. அந்த நிகழ்ச்சிகளைக் காப்பியடித்து தமிழக தொலைக்காட்சிகள் சொல்வதெல்லாம் உண்மை என்று தலைப்பிட்டு, சமூகத்தினுள் மறைமுகமாக நடக்கும் அசிங்கங்களை அம்பலப்படுத்தி வருகிறன.
கணவன்-மனைவி உறவு, லெஸ்பியன் உறவு, ஹோமோ செக்ஸ் என சமூகத்தில் இலைமறைவு காயாக உள்ள நல்ல/கெட்ட செயல்களை வீடுகளின் வரவேற்பறைகளில் திரைவிரித்து சிறு குழந்தைகளின் மனதையும் காவு கொள்கின்றன.
மேலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகளாகவும் இந்நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மாறிவருகிறார்கள்(இவர்களின் வாழ்வில் நடக்கும் கேவலங்களோ, அவர்கள் ஒளிபரப்பும் கேவலங்களைவிட படுமோசமானவை என்பது நகைமுரண்).  இதன் மூலம், சமூகத்தின் இப்போதைய கேடுகாலம் மீடியாக்களின் பொற்காலமாக மாறிவருகிறது.
பத்திரிகை தர்மத்தைமீறி எங்கே சென்றீர்கள், எங்கு உறவு கொண்டீர்கள் என இன்னும் அச்சில் ஏற்றமுடியாத வக்கிரக் கேள்விகளுடனான நிகழ்ச்சிகளை ஜி தொலைக்காட்சி நடத்தி வருகிறது. இப்படியே நீடித்தால் படுக்கையறை காட்சியையும் காணொளியில் விவரிக்கும் நிலைக்கு இத்தொலைக்காட்சிகள் சென்றுவிடுமோ என்று அஞ்சவேண்டியுள்ளது.
எனவே, இதுமாதிரியான சமூகத்தின் மனதை மென்மேலும் வக்கிரமாக்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் சிறு குழந்தைகளும் இளைய சமுதாயமும் பாதிக்கப்பட்டு தற்கொலையோ அல்லது கொலையோ நடக்கும் முன்பு இத்தகைய நிகழ்ச்சிகளை தடை செய்ய அரசு முன்வரவேண்டும்.
நாட்டில் லஞ்சம், ஊழல், கொள்ளை, விலை ஏற்றம், உற்பத்தி பாதிப்பு, விவசாயம் சீரழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் இதுவரை முழு சுதந்திரம் அடையாத கிராமங்களின் பிரச்சனைகள் என எத்தனையோ இருந்தும் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இந்த அசிங்கங்களை அம்பலப்படுத்தும் தொலைக்காட்சி தொடர்களுக்குக் கடிவாளம் இட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!
நன்றி
வைகை அனிஷ், +91 9715-795795 & இன்று ஒரு தகவல் கட்டுரையாளர்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home