22 November 2013

தமிழக அரசின் ஒத்துழையாமை! பட்டியல் போடும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி





தமிழகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறதுஎன்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டும் நிலையில், 'தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடு தலைவிரித்தாடுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடங்கிக் கிடக்கிறதுஎன்று குற்றம்சாட்டியுள்ளார் இந்த ஆணையத்தின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ஐ.ஜி.ரெட்டி. அவரைச் சந்தித்துப் பேசினோம்.
 ''தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கவும் பராமரிக்கவும் 1995-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு (NAHAI- நஹாய்) அதிகாரம் அளிக்கப்பட்டது. சாலைகள் மூலம் இந்த ஆணையம் தானாகவே வருவாய் ஈட்டவும் (டோல் கட்டண வசூல்) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம், மத்திய நிதி பெறும் சாலைப் பணிகளுக்கு 'மதிப்பீடு ஒப்புதல்மட்டுமே மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை வழங்கியது. இப்போது, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்தல், ஒப்பம் கோருதல், ஒப்பந்தகாரர் தேர்வு செய்தல், ஒப்பம் கையப்பமிடுதல் என ஏனைய பிற பணிகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமே செய்து வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், மேம்பாடு என்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்து தருகிறது. இதற்​கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில், மாநில அரசுகள் கையெழுத்​திட வேண்டும். புதிய திட்டங்களுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மறுக்கிறது. ஏற்கெனவே போடப்பட்ட பழைய ஒப்பந்தங்களையும் மதிக்க மறுக்கிறது. அதனால், தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. நில ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஒப்படைத்தலில் தாமதம், ஜல்லி, மண் உள்பட பல்வேறு கனிமப் பொருள்களுக்கான அனுமதியை வழங்காமல் இழுத்தடித்தல், பொதுப்பணித் துறை​யினால் வழங்கப்பட்ட தடையில்லா சான்றினைத் திரும்பப்​பெறுதல், தடையில்லா சான்றிதழ் தராமல் இழுத்தடித்தல்... என்று மாநில அரசின் ஒத்துழையாமை போராட்டம் நீடிக்கிறது.
தமிழக அரசிடம் பலமுறை, இந்தப் பிரச்னைகளை எடுத்துச் சென்றோம். ஆனால், பயன் இல்லை. மற்ற மாநிலங்களில் மாநில அரசுகளே முன்வந்து ஒப்பந்தம் செய்துகொண்டு, நெடுஞ்சாலை திட்டப் பணிகளை செயல்படுத்துகின்றன. ஆனால், இங்கே ஒத்துழைப்பு ஒப்பந்தமே கிடையாது. இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்துகொள்வது முக்கியமானது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு 2,614 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால், இதற்கான ஆணை இன்னும் தமிழக அரசால் பிறப்பிக்கப்படவில்லை. திண்டுக்கல் - தேனி - குமுளி சாலையை அகலப்படுத்தும் திட்டம் இன்னும் முடியவில்லை. 135 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலைத் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு மட்டுமே சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் மாநில அரசு, ஒவ்வொரு திட்டங்களுக்கும் எங்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பின் யதார்த்தம்'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
''தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத் துறையால் மத்திய அரசின் திட்டங்களுக்கு என்ன பிரச்னை?''
''நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்தம் எடுத்தவருக்கு, அந்த வேலைக்குத் தேவையான மண், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் தேவை பட்டியலையும் ஒர்க் ஆர்டரையும் கொடுத்துவிடுவோம். அவர்கள், சாலைகள் அமைப்பதற்கான கருங்கல் ஜல்லிகளை வாங்க, மாவட்ட நிலவியல் மற்றும் சுரங்கத் துறையின் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெறுவதற்காக ஒரு கன மீட்டருக்கு 100 ரூபாய் வீதம் தங்களுக்கு கையூட்டுத் தர வேண்டும் என்று ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய கூட்டணி கட்டாயப்படுத்துகிறது. இதற்காக, பெருமளவில் கையூட்டுத் தர வேண்டியுள்ளது. மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் இதே நிலைதான். கையூட்டாகத் தரப்படும் தொகையையும் சேர்த்தே மாநில நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான மதிப்பீடு தயாரிக்கப்படுவதுபோல் தெரிகிறது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் அப்படி செய்ய முடியாது. அதனால், தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் முன்வருவது இல்லை. நெடுஞ்சாலைத் துறைகளில் நடக்கும் இந்த ஊழல்கள் குறித்து தமிழக அரசிடமும் காவல் துறையினரிடமும் புகார் அளித்தும் அதை அவர்கள் பதிவுசெய்யவில்லை. காவல் துறையினர் எங்கள் ஒப்பந்தக்காரர் அளிக்கும் புகாரை வாங்காமல், அதிகாரமிக்க ஒருவர் கொடுக்கும் புகார்களை எங்கள் ஒப்பந்தகாரர்களுக்கு எதிராக பதிவுசெய்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை விளக்கி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளோம்''.  
''எந்தெந்த திட்டங்கள் கிடப்பில் போடப்​பட்டுள்ளன?''
''சென்னை-திருப்பதி சாலையை அகலப்படுத்தும் திட்டம், ஆந்திர மாநிலப் பகுதியில் பணி முழுமை பெற்றுவிட்டது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அனுமதி கிடைக்காத காரணத்தால், பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை. தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே நீடிக்கும் இந்த வேறுபாடான நிலை காரணமாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மற்ற திட்டங்களும்... 1,745 கிலோ மீட்டர் நீளத்துக்கான சாலைப் பணிகளும் குளறுபடியாக உள்ளன. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையப் பணிகளைச் செய்வதற்கு எந்த ஒப்பந்தக்காரரும் முன்வரவில்லை. ஏற்கெனவே பெற்ற ஒப்பந்தங்களையும் வேண்டாம் என்கிறார்கள். 2013-ம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்திருக்க வேண்டிய சென்னை-திருப்பதி சாலை, சென்னை-தடா சாலை, ஜூனில் முடிவடைந்திருக்க வேண்டிய எண்ணூர்-மணலி சாலை அபிவிருத்தி திட்டம்; செப்டம்பரில் முடிவடைந்திருக்க வேண்டிய சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், மே மாதம் முடிவடைந்திருக்க வேண்டிய திருச்சி-காரைக்குடி சாலைத் திட்டம், டிசம்பரில் முடிவடைய வேண்டிய கிருஷ்ணகிரி-வாலாஜாபாத் சாலைத் திட்டம் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.''
''சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலையின் கதி என்ன?''
''சென்னை துறைமுகத்துக்கு வந்துசெல்லும் கன்டெய்னர் லாரிகள் போக்குவரத்துக்காக துறைமுகம் - மதுரவாயல் இடையே 19 கிலோ மீட்டர் நீளத்துக்கு 1,885 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க, 2009 ஜனவரி 9-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். மொத்தமுள்ள 889 தூண்களில் 120 தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் 15 தூண்களில் சாலை அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டது. இந்த நிலையில் சேத்துப்பட்டு அருகே கூவம் ஆற்றுக்குள் ஏற்கெனவே திட்டமிட்டபடி பணிகள் நடக்காததால், ஆற்றுநீரின் போக்கு தடைபடும் என்று கூறி, இந்தத் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் நீர்வள ஆதாரத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உயர்மட்ட எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன.
'இந்தத் திட்டத்துக்கான வழித்தடத்துக்கு புதிதாக அனுமதியும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதலையும் பெற வேண்டும்என்று, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக நீர்வள ஆதாரத் துறை கேட்டுக்கொண்டது. ஆனால், 'திட்டத்தின் வழித்தடத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாததால், புதியதாக அனுமதியும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதலும் பெறத் தேவையில்லைஎன்று தெரிவித்தோம். எக்ஸ்பிரஸ் சாலைக்காக தூண்கள் அமைக்கப்படும் பகுதிகளில் தண்ணீர் போக்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், மாநில அரசுக்கு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அக்கறை இருப்பதுபோல் தெரியவில்லை.''
- வேதனையுடன் முடிக்கிறார் ஐ.ஜி.ரெட்டி. வாக்களித்த மக்களுக்கு செய்யும் நன்மை இதுதானா?
- எஸ்.முத்துகிருஷ்ணன்
படங்கள்: எம்.உசேன்,
சொ.பாலசுப்பிரமணியன்
 ஆணையமே தேவை இல்லை! 
பொறியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜியிடம் இதுபற்றி பேசினோம்.
''தமிழக அரசு மீது ஆணையம் சுமத்தியுள்ள முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று... பணிக்குத் தேவையான மண் அள்ள உரிய அனுமதி மறுக்கப்படுகிறது என்பது. ஏற்கெனவே தாது மணல், ஆற்று மணல் கொள்ளை பற்றி நாம் அறிந்துள்ளோம், இந்த மண் கொள்ளைப் பற்றி தெரிந்துகொள்வதும் முக்கியம். நெடுஞ்சாலை அமைக்க சாலை வடிவம் கொடுக்க மண் தேவைப்படும்போது, அதனை அரசு நிலங்களில் இருந்து அள்ள அனுமதி அளிக்கலாம். இதுபோன்ற பெரிய நெடுஞ்சாலை பணி ஒப்பந்தக்காரர்கள் சாலை பணியைக் காரணம் காட்டி, அந்தப் பணியின் தேவை குறிப்பிட்டு உத்தரவைப் பெறுவார். ஆனால், அதைவிட பல நூறு மடங்கு வெட்டி எடுத்து அவர்களும் அதிகார வர்க்கமும் ஆதாயம் அடைவர். இதனைத் தவிர்க்க உரிய முறையில் ஆராய்ந்து உரிமம் அளிக்க மாநில அரசு முற்படும்போதுதான் இவர்கள் அலறுகின்றனர்.  
ஆணையத்தின் பணிகளில் மட்டும்தான் ஊழலா? பணிகளை மாநில அரசு மேற்கொண்டால் இருக்காதா? இருக்கும். ஆனால், நிச்சயம் இந்த அளவுக்கு இருக்காது. உதாரணத்துக்கு, ஒரு அரசு அதிகாரி பணி நிமித்தமாக அரசு செலவில் விமானத்தில் பறக்க முடியாது. ஆனால், ஆணைய அதிகாரிகள் அவசியம் என்கிற பெயரில் எப்போதும் விமானப் பயணமே மேற்கோள்கின்றனர்.
சென்ற 2012-ம் ஆண்டு அறிக்கைபடி, ஆணையத்தின் மொத்த பணியாளர்கள் 1,065 மட்டுமே. இதில் நிரந்தரப் பணியாளர் 120 பேர். அவர்களுக்கு மட்டும் சம்பளத் தொகை 61 கோடி ரூபாய்; ஆணைய பயணச் செலவு 21 கோடி; இதரச் செலவுகள் 15 கோடி. 96,250 கோடி ரூபாய் மொத்த இருப்பு உள்ளது. இந்த ஆண்டு ஆணையம் 10 ஆயிரம் கோடி பங்குகள் மூலம் நிதி திரட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆணையத்தின் கையிருப்பு மட்டும் இன்றைக்கு 8,000 கோடி. இந்த ஆணையம் சுங்கவரி வசூல் செய்து அதன் மூலம் பெரும் ஒப்பங்களைவிட்டு, மிகப் பெரிய கோடீஸ்வரர்களை உலகப் பணக்காரர் வரிசையில் சேர்ப்பதற்கும், ஆணைய அதிகார வர்க்கம் அரண்மனை வாழ்வு வாழ்வதற்கும் வழிகாட்டுகிறது. அதனால்தான், இருக்கும் நிதியினை மோசமாகியுள்ள சாலைகளுக்குப் பயன்படுத்தாமல் புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்த முன்வருகிறது, உதாரணத்துக்கு... பழைய மகாபலிபுரம் சாலை ஒன்று போதும்.
அதோடு மிகப் பெரும் ஒப்பந்த நிறுவனமும் ஆணைய அதிகாரிகளும் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணியில் இணைந்து செய்த ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி வெளிக்கொண்டுவர முயன்ற நேர்மையான பொறியியல் அதிகாரி சத்யேந்திர துபே 27.11.2003-ல் கொலை செய்யப்பட்டது நினைவில் வரும். இவ்வளவு குறைகள் ஆணையத்தின் மேல் இருந்தாலும், நிறைய சாலைகள் அமைக்கப்படுகிறதே என்பவர்கள் கண்களுக்கு... அவர்கள் அமைத்த சொம்பு அளவுக்கான சாலைகள்தான் தெரிகிறதே ஒழிய, அவர்கள் முழுங்கும் ஊழல் அண்டாக்கள் தெரிவது இல்லை. ஆணையம் ஒழிக்கப்பட்டு பழைய முறையில் மாநில அரசிடமே பொறுப்பு ஒப்படைத்தால் பணிகள் சிறப்பாகவும், உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் நலன் பாதுகாக்கப்பட்டும், நிர்வாக சிக்கலின்றி பணிகள் நடைபெறவும் உதவும்'' என்கிறார்.
நூற்றுக்கு நூறு இல்லை!
 தேசிய நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்கு ஜல்லி, மண் எடுக்க நிலவியல் மற்றும் சுரங்கங்கள் துறை அனுமதி மறுப்பது குறித்தும், லஞ்சம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்தும் தொழில்கள் துறை அமைச்சர் பி.தங்கமணியிடம் பேசினோம். ''நூற்றுக்கு நூறு இந்தக் குற்றச்சாட்டுகள் தவறு. எந்த இடத்தில் அப்படி நடக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மாநில நெடுஞ்சாலைகள் துறை பணிகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கேட்க தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். அவரது போனை எடுத்தவர், ''அமைச்சர் வெளியில் இருக்கிறார்'' என்று மட்டும் பதில் சொன்னார். அவர் விளக்கம் கொடுத்தால், அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home