அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது….+அது ஒரு அழகிய மொபைல் காலம்.
பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.
எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடம் கிடைக்கும்.
மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.
எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.
வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.
சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.
எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.
சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.
மழை
நின்று நிதானமாகப் பொழியும்.
சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.
தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.
வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.
எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.
வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது.
சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.
யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.
ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்.
சுவாசிக்கக் காற்று இருந்தது
குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.
தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு வண்டி ஓட்டுவோம்…!
மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன்.
மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.
கடந்து தொலைந்துப் போனவை-
நாட்கள் மட்டுமல்ல…. நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்!
ஆம்…
அந்தக் காலம் நன்றாக இருந்தது !
- கவிஞர் மகுடேசுவரன்
*****************************
* ஒரு வாரம் ஆனாலும் சார்ஜ் தீரும் என்கிற கவலை இருந்ததே இல்லை!
* காவேரி ஆற்றில் மூழ்கி எடுத்தும் ,
பொன்மலை ஸ்டேஷன் தண்டவாளத்தில் தவறி விழுந்தும்,
உடைத்தே தீரவேண்டுமென சண்டை ஒன்றில் போட்டு உடைத்தும் கூட, கை குலுக்கியபடி சிரிக்கும் மொபைல் அது !
* விசைப்பலகை தேய்ந்து போகும் அளவிற்கு மெசேஜ் அனுப்பிய மொபைல் அது !
* எழுந்து யாரையாவது அடிக்க தோன்றும் அளவுக்கு அலறும் அலாரம் அது !
* காலை வணக்கம் தொடங்கி இரவு வணக்கம் வரை எல்லாவற்றிற்கும் குரூப் மெசேஜ் அனுப்பியே கொல்ல உதவிய மொபைல் அது !
*பந்து போல கூட பயன்படுத்தி இருக்கிறொம் ; ஆனால் பந்தாவாக யாரும் அதைப் பயன்படுத்தியதில்லை
# ஆன்ட்ராய்டுகளும் ஆப்பிள்களும் வந்தாலும் எங்களுக்கு அதுதான் அழகிய மொபைல் காலம் !-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home