13 December 2013

மொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து



'மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) ரத்து செய்யப்படும்' என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. "கடந்த, 10 ஆண்டுகளில், அதிகளவில் சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது' என, தேசிய குற்ற ஆவண காப்பாகம் (என்.சி.ஆர்.பி.,) தெரிவித்தது. 2012ல், தமிழகத்தில் மட்டும், 68 ஆயிரம் சாலை விபத்துகளில் நடந்துள்ளன; 16,175 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், ஒரு மணி நேரத்திற்கு, எட்டு விபத்து; நாள்தோறும் சராசரியாக, 44 உயிரிழப்பு ஏற்படுகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்ட கலெக்டர் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழுவினருக்கு, போக்குவரத்து துறை அறிவுறுத்தியது. அதன்படி, சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகினறன. பெரும்பாலான விபத்துகள், கவனச் சிதறலால் ஏற்படுகின்றன. குறிப்பாக, மொபைல் போன் பேசிக் கொண்டே, வாகனத்தை ஓட்டும் போது ஏற்படும் கவனச் சிதறலால், அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இதையடுத்து, இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், பஸ், லாரி உள்ளிட்ட, எந்தவொரு வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது, மொபைல்போன் பேசிக் கொண்டு இயக்குவதை தடுக்க, போக்குவரதது துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழகத்தில் அனைத்து, ஆர்.டி.ஓ.,க்களுக்கும் போக்குவரத்து துறை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 70 ஆர்.டி.ஓ., (வட்டார போக்குவரத்து அலுவலர்) அலுவலகங்கள் உள்ளன. ஆர்.டி.ஓ., தலைமையிலான கண்காணிப்பு குழுக்கள், அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றன. அப்போது விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இனி, வாகன சோதனையின் போது மொபைல் போனில் பேசிக் கொண்டே செல்லும் வாகன ஓட்டிகள் மீது, அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம். மோட்டார் வாகன சட்டப்பிரிவின் படி, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், மொபைல்போன் பேசிக் கொண்டே, வாகனங்களை இயக்குவது தவறு. இனி, மொபைல் போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுபவரின் ஓட்டுனர் உரிமத்தை அதிகபட்சமாக, 15 நாட்கள் வரை, தற்காலிக நீக்கம் செய்வது தொடர்பாக, "நோட்டீஸ்' வழங்கப்படும். ஓட்டுனர் உரிமம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர், மீண்டும் மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டினால், அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வோம். முதற்கட்டமாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர். தேவையின் அடிப்படையில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் திட்டமும் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
=அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home