23 September 2014

ஐ.எஸ். அமைப்பை வீழ்த்துவது எப்படி?

அமெரிக்காவின் இராக் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவரின் பார்வையில்…
அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகளின் இராக்கிய ஆக்கிரமிப்பின் விளைவாகத் தோன்றியதுதான் ஐ.எஸ். என்கிற பயங்கரவாத அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இராக்கின் மேற்கிலும் வடக்கிலும் மோசுல் உள்ளிட்ட சில நகரங்களைத் துப்பாக்கி முனையில் கைப்பற்றியதன் மூலம் உலகின் கவனத்தை அது ஈர்த்துவிட்டது.
இராக்கிலும் சிரியாவிலும் ராணுவ வீரர்களைச் சிறைப்பிடித்து, அவர்களைப் பொது இடங்களில் கை, கால்களைக் கட்டிவைத்துச் சுட்டுக்கொன்றது. மாற்று மதத்தவர்களை மதம் மாறுமாறு மிரட்டியது, மறுத்தோரைச் சுட்டுக்கொன்றது அல்லது வீடு - வாசலை விட்டு ஓடுமாறு அச்சுறுத்தியது.
அந்த அமைப்பு தோன்றிய நாள் முதல் அதைப் பார்த்துவருகிறவள் என்கிற வகையில் சொல்கிறேன், விமானத்திலிருந்து துப்பாக்கியால் சுடுவதாலோ, குண்டுகளை வீசுவதாலோ அதை அழித்துவிட முடியாது. மேற்கத்திய நாடுகள் அல்லாத வேறு நாடுகளைச் சேர்ந்த படைகளே திரண்டாலும், சிரியாவுக்கே சென்று போரிட்டாலும் அதை இப்போதைக்கு ஒடுக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கடைப்பிடிக்கும் ராணுவ உத்திகளையே அது பின்பற்று கிறது. அத்துடன் மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் குறைகளும் பலவீனங்களும் அதற்கு அத்துப்படி. அந்த அமைப்பின் மைய இலக்கே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றுடன் சேர்ந்த நாடுகள்தான்.
பதில் தாக்குதலின் பாதகங்கள்
உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்த ஐ.எஸ். தலைவர்கள் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ராணுவரீதியாகத் தலையிடுவார்கள், எங்கே நுழைவார்கள், எப்படித் தாக்குவார்கள் என்பதையெல்லாம் அருகிலிருந்து பார்த்தவர்கள்தான் ஐ.எஸ். தலைவர்கள். ஆகையால்தான், தங்களுடைய தாக்குதல்களுக்கான ஆட்களை அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், டென்மார்க் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்தே தேர்வுசெய்திருக்கிறார்கள்.
விமானங்களில் சென்று குண்டுவீசியோ, விமானங்களில் சென்று திடீர்த் தாக்குதல் நடத்தியோ ஐ.எஸ். அமைப்பினரை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்பதே மேற்கத்திய ஆட்சியாளர்களின் துடிப்பாக இருக்கும். இதனால் உடனடியாகச் சில வெற்றிகள் கிடைத்தாலும் அவை பயனுள்ளதாக, நீண்ட காலத்துக்கு உதவுவதாக நிச்சயம் இருக்காது.
அவர்களுடைய தாக்குதலுக்குப் பதில் தாக்குதல், அடிக்குப் பதிலடி என்று இறங்கினால் அவற்றையே சுட்டிக்காட்டித் தங்களுக்குத் தேவைப்படும் ஆட்கள், பணம், ஆயுதங்கள் ஆகியவற்றை அவர்கள் திரட்டிக் கொள்வதுடன், உள்ளூர் மக்களுடைய ஆதரவையும் பெற்றுவிடுகின்றனர். 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் இராக்கில் உள்நாட்டுப் போர் நடந்தபோது இதுதான் நடந்தது. ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாக மோதுவதைத் தவிர்ப்பதே வெற்றியைத் தரும். 2009, 2010 ஆண்டுகளில் இதுதான் நடந்தது.
பாக்தாதிலும் பிற நகரங்களிலும் கார்களில் வெடிகுண்டுகளை ஏற்றிவந்து கூட்டம் நிரம்பிய இடங்களில் அவற்றை மோதவைத்து வெடிக்க வைத்தனர். இதனால் அப்பாவிகள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். ஆனால், இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க ராணுவமோ, இராக்கிய ராணுவமோ எதிர்த் தாக்குதல் எதிலும் ஈடுபடவில்லை. எதிரி யார் என்று தெரியாத நிலையில், மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியில்லை என்ற முடிவும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதனால் நாளாவட்டத்தில் அந்த பயங்கரவாதிகள் மீது மக்களுக்கு வெறுப்புதான் வளர்ந்தது. நம்முடைய மக்களையே இப்படிப் பலிவாங்குகிறார்களே என்று அவர்கள் மீது கோபம் அடைந்தார்கள். நூரி அல் மாலிகி தலைமையிலான ஷியா அரசுக்கு அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவிப்பதால், இப்படித் தாக்குகிறோம் என்று சன்னி பிரிவு முஸ்லிம்களிடம் கூறினார்கள் ஐ.எஸ்.அமைப்பினர்.
மக்களின் வெறுப்பே ஆயுதம்
ஐ.எஸ். அமைப்பினரின் செயல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு மக்களிடையே ஆதரவும் செல்வாக்கும் சேராதபடிக்குத் தடுப்பதே இப்போதைக்கு மிகச் சிறந்த ராணுவ உத்தியாக எனக்குத் தெரிகிறது. அப்பாவி மக்களை ஐ.எஸ். அமைப்பினர் கூட்டம் கூட்டமாகக் கொல்வதன் மூலமாகவும், நாட்டை விட்டே ஓடுமாறு மிரட்டுவதன் மூலமாகவும் மக்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
சன்னி பிரிவினரே ஐ.எஸ். அமைப்பின் செயல்களை எதிர்க்கத் தொடங்கி விட்டனர். இது இப்படியே தொடரட்டும் என்றே மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் நினைப்பது போலத் தெரிகிறது. வடக்கு இராக்கில் மவுண்ட் சிஞ்சார், இர்பில் ஆகிய இடங்களில் நடந்த படுகொலைகளையும், அமெரிக்காவின் இரண்டு பத்திரிகை யாளர்களைக் கத்தியால் அறுத்துக் கொன்றதையும் எல்லோருமே கண்டித்துவருகின்றனர்.
என்ன செய்யலாம்?
ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சியை நான்கு தளங்களில் தடுக்கலாம் என்று நினைக்கிறேன். தங்களுடைய அமைப்பில் சேர்ந்து பணியாற்றி, மதத்துக்குத் தொண்டு செய்யுங்கள் என்று இணையம் மூலம் வேண்டுகோள் விடுத்து அப்பாவி இளைஞர்களை ஈர்க்கின்றனர். அப்படிச் சேர்ந்த சிலரைச் சீருடை, ஆயுதத்துடன் செல்ஃபி எடுக்கவைத்து வீடியோ மூலம் காட்டி, மற்றவர்களை ஈர்க்கப் பயன்படுத்துகின்றனர். அந்தச் சமூக வலைதளங்களுக்குச் சென்று, அந்த இயக்கத்தில் சேரக் கூடாது என்பதை எடுத்துக்கூறி, அவற்றின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துங்கள்.
இந்த அமைப்பினர் செயல்படும் இடத்தைச் சுற்றி, தற்காலிகமாக எல்லைக்கோடுகளைப் பகிரங்கமாக வரையுங்கள். பிற பகுதிகளில் நுழைந்து மக்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாத நெருக்கடி அவர்களுக்கு ஏற்படும். அல்லது அவர்களால் கைப்பற்றப்பட்டு உதவிக்காக ஏங்கும் அப்பாவிகள் இருக்கும் பகுதிகளைச் சுற்றி எல்லைக்கோடு வரைந்து, அவர்களுக்கு உதவுங்கள்.
பயங்கரவாதிகள் எவரையாவது கடத்திவைத்துப் பிணைத்தொகை கேட்டால், அதைக் கொடுக்கக் கூடாது என்று சர்வதேச அளவில் நியதியை ஏற்படுத்துங்கள். ஐ.எஸ். அமைப்பினர் தங்கள் பகுதிகளில் உள்ள அரிய கலைப்பொருட்களையும் மற்றவற்றையும் திருடி விற்கவோ, மக்களிடம் வரி வசூலிக்கவோ அனுமதிக்காதீர்கள். எண்ணெய் வளம் போன்றவை அவர்கள் கைகளில் சிக்கிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வருமானம் வரும் வழியை அடைத்தாலே இந்த பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் வேகமாக முடக்கப்படும்.
இப்படி ஓரிடத்தில் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகை யிடப்பட்டுவிட்டால், ஐ.எஸ். அமைப்புக்கு மக்களிடையே ஆதரவும் மதிப்பும் குறைந்துவிடும். இவர்களால்தான் நமக்கு இந்த வேதனைகள் என்று உணர்ந்து, அவர்களை ஆதரிக்காமல் இருப்பார்கள். அந்தத் தலைமையையும் அவர்களுடைய சித்தாந்தங்களையும் மக்களே எதிர்க்கத் தொடங்குவார்கள்.
இப்படி அவர்களைத் தனிமைப்படுத்தி எல்லைக்குள் அடக்குவதால் அவர்களுடைய செல்வாக்கு பரவாமல் தடுக்கப்படும். அத்துடன் அந்த அமைப்பே சிறுசிறு குழுக்களாக உடையும். அவர்களுக்குள் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாமல் வெகு விரைவில் வலுவிழந்துவிடுவார்கள்.
ஐ.எஸ். என்ற அமைப்பின் நெருப்பு தானாக அழியுமாறு விடுவதற்குச் சர்வதேசச் சமூகத்துக்குச் சுயகட்டுப்பாடு மிகமிக அவசியம். நாம் அடித்து அவர்களை அழிக்க முற்பட்டால், அதையே காரணமாகக் காட்டி மேலும்மேலும் மக்களிடம் ஆதரவு தேடுவார்கள். அனுதாபத்தில் மக்களும் அவர்களை ஆதரிப்பார்கள். அதற்கு இடமே தரக் கூடாது. ஐ.எஸ். அமைப்பு கையில் ஏந்தியிருப்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி. அந்தக் கத்தி அவர்கள் மீதே விழுந்து நாசமாக்கும்படி நாம் செயல்பட வேண்டும்.
- செல்ஸி மேனிங்,
இராக்கில் அமெரிக்கா நடத்திய போர்குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, தற்போது சிறையில் இருக்கிறார்.
© தி கார்டியன், தமிழில்: சாரி
-
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home