30 October 2013

சமூக வலைதளங்களால் ஏற்படும் விபரீதங்கள்…



சகோதரர்களே இந்த பதிவை அவசியம் முழுமையாக படிக்கவும்
உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்களால் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவம் கூட நொடிப் பொழுதில் உலகம் முழுவதும் பரவுகிறது.  இது மக்களிடையே விரைவாக விழிப்புணர்வு ஏற்படுத்த உதவினாலும், இந்த வலைதளங்களால் ஏற்படும் விபரீதங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதற்கு ஒரு உதாரணம்.
இந்தியா ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன் கிஷோர்சிங்(29). சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.  அதே நிறுவனத்தில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த சந்தியா(25) என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்தார்.    பெற்றோர்கள், இவர்களின் காதலை ஏற்கவில்லை.     ஒரு வழியாக, பெண் வீட்டார் சம்மதித்தனர்.   சந்தன் பெற்றோர் கடைசி வரை எதிர்ப்பு தெரிவித்தனர்.
காதலர்கள் 3 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். மயிலாப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினர். தேன் நிலவுக்காக பெல்ஜியம், ஹங்கேரி நாடுகளுக்கு சென்றனர். வெளிநாடு சென்றது, பதிவுத் திருமணம் செய்தது போன்ற புகைப்படங்களை சந்தியா தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டார்.
இது சந்தனுடைய பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவரை தொடர்பு கொண்டு நாங்கள் உனக்கு திருமணம் ஆகவில்லை என்று எல்லோரிடமும் சொல்லி வருகிறோம். அவசரப்பட்டு உனது மனைவி திருமண புகைப்படத்தை பேஸ் புக்கில் போட்டுள்ளார். இது எங்களுக்கு அவமானமாக உள்ளது. உடனே அவற்றை எடுக்கச் சொல்என்றனர்.
இதுபற்றி மனைவியிடம் சந்தன் தெரிவித்த போது, அவர் பேஸ்புக்கிலிருந்து படங்களை எடுக்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சந்தனுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டு கடைசியில் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.
சந்தனுக்கு அவரது பெற்றோர் ஆஸ்திரேலியாவில் பெண் பார்த்துள்ளனர். இது சந்தியாவுக்கு தெரிய வந்ததால்தான் அவர் பேஸ்புக்கில் போட்ட தனது திருமண படத்தை எடுக்கவில்லை என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். காதல் திருமணம் செய்தபின், சந்தனால் பெற்றோரை சமாதானப்படுத்த முடியவில்லை.
இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருந்திருக்கலாம். ஆனால், சந்தியாவுக்கு தன்னை விட்டு சந்தன் பிரிந்து விடுவாரோ என்ற பயம். இந்த சூழ்நிலையில்தான் சந்தனுக்கு எமனாக பேஸ்புக் வந்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களால் தினம்தினம் நடக்கும் விபரீத சம்பவங்களை இவற்றை பயன்படுத்துவோர் உணர்ந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home