6 December 2013

தலைக்கு கலரிங் செய்கிறீர்களா?



உடைகள்ல மட்டுமில்ல, தலைல இருக்கற முடி கூட இந்தக் காலத்துக்கு ஏற்றாமாதிரி இருக்கனும்னு பெண்கள் விரும்பறாங்க. அதனாலயே சிகை அலங்கார நிபுணர்களும் உலக ஃபேஷன் டிரண்டுக்கு தகுந்தா மாதிரி தங்கள் திறமையை வளர்த்துட்டு வர்றாங்க’’ என்கிறார் சிகை அலங்கார நிபுணரான நஜீப்.

பிரபல அழகு சாதன நிறுவனம் ஒன்று சிகை அலங்கார போட்டியை நடத்தியது. இதற்காக உலகம் முழுக்க சிகையலங்காரத்தில் கொடிகட்டிப் பறக்கும் நிபுணர்கள் தென்னிந்திய பெண்களுக்கு முடி திருத்தம் செய்வதற்காக வந்திருந்தனர். அந்தப் போட்டியில் நடுவராக இருந்த நஜீப், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

‘‘
வெளிநாட்ல இருக்கற ஹேர் ஸ்டைல் ரொம்ப சுலபமானது. ஆனா, அதையே நம்மூருக்கு தகுந்தா மாதிரி மாத்தி அமைக்கறது சாதாரண விஷயமில்லை. ஒவ்வொருத்தரோட சருமம் ப்ளஸ் கூந்தலுக்கு தகுந்தா மாதிரி அலங்காரம் செய்யனும். தென்னிந்திய பெண்களுக்கு கூந்தல் அலை அலையா இருக்கும். முடில அதிகமான வளைவு இருக்கும். அதனாலயே பார்க்கறப்ப அடர்த்தியா காட்சி தரும்.

இதுவே வெளிநாட்டு பெண்களுக்கு பார்த்தீங்கன்னா, வளைவு, நெளிவு இருக்காது. முடியின் நிறமும் செம்பட்டை. நம்மூர் பெண்களுக்கோ கருப்பு இல்லைனா, பிரவுன். அதனால நம்மூர் பெண்கள் ஸ்ட்ரெயிடனிங் செய்துக்கறது மூலமா, முடிகள்ல இருக்கற வளைவுகளை நேராக்கலாம். அதுக்கு அப்புறம் கலரிங் செய்துகிட்டா, அழகா இருக்கும். அதுக்காக எல்லா நிறங்கள்லயும் கலரிங் செய்துக்க கூடாது. பிரவுன், பிரவுன் சார்ந்த நிறங்கள், சிவப்புலயே அடர்ந்த நிறம், தேன் போன்ற நிறங்கள்ல கலரிங் செய்துகிட்டா அழகா இருக்கும்.

முடியை தோள்பட்டை வரை வைத்துக் கொள்ளலாம். நீளமாக இருந்தா டிரிம் செய்துக்கலாம்’’ என்று சொல்லும் நஜீப், எந்த வகையான முகத்துக்கு எந்தவகையான சிகையலங்காரம் தேவை என பட்டியலிடுகிறார்.‘‘வட்ட வடிவ முகத்துக்கு சுருள் சுருளான முடிகள் அழகா இருக்கும். சதுர முகத்துக்கு கன்னத்துல முடிகள் விழறா மாதிரி அமைக்கலாம். இதய வடிவ முகத்துக்கு தோள்பட்டை வரைக்கும் விடலாம்.

மொத்தத்துல கலரிங் செய்யறப்ப ஒருத்தரோட சரும நிறம், முடியின் நிறம், கருவிழியோட நிறம் இதெல்லாத்தையும் பார்த்து அதுக்கு தகுந்தா மாதிரி கலரிங் செய்யனும்’’ என்று சொல்லும் நஜீப்பின் அப்பா தில்லியில் சலூன் கடை வைத்திருப்பதால் சின்ன வயதிலேயே சிகை அலங்காரத்தில் இவருக்கு ஈடுபாடு வந்துவிட்டதாம். இப்போது பிரபல நடிகைகள் மற்றும் மாடல்களுக்கு சிகையலங்காரம் செய்து வருகிறார்.


அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home