பாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !
நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி கிளப்ப வேண்டும்
.********************************************************
அந்தப் புகைப்படத்தில் இருந்தது ஒரு பேருந்து நிறுத்தம். நல்ல பளபளப்பான சாலையும், பயணிகள் காத்திருப்பதற்கான ஏற்பாடுகளும் தேர்ந்த ஓவியரால் வரையப்பட்ட சித்திரம் போல் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அந்தப் புகைப்படத்தின் கீழே இவ்வாறாக எழுதப்பட்டிருந்தது – “இது என்ன சிங்கப்பூரா? இல்லை சார், இது புனர் நிர்மாணிக்கப்பட்ட (இந்த வார்த்தையை MODI-FIED என்று எழுதுகிறார்கள்) அகமதாபாத். இதற்காகத்தான் குஜராத் மக்கள் (இந்துக்களும் முசுலீம்களும்) கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகள் சொல்வதற்கு மாறாக மோடியை மதிக்கிறார்கள்”
சமூக வலைத்தளங்களில் கட்டியமைக்கப்படும்
மோடியின் புகழ்.
மேற்படி புகைப்படம் முகநூலில் பல லட்சம்
பேர்களால் பகிரப்பட்டது. அசகாய
சூரர் மோடியின் இந்த சாதனையை
பல்லாயிரக்கணக்கானோர் பின்னூட்டங்கள் மூலம்
விதந்தோதிக் கொண்டிருந்தனர். எல்லாம் ’சிறப்பாக’ போய்க் கொண்டிருந்த
போது பலூன் பட்டென்று உடைந்தது. அந்தப் புகைப்படத்தில் இருப்பது
அகமதாபாத் இல்லையென்றும் சீனத்தின் குவாங்சௌ மாகாணத்தில் உள்ள பேருந்து நிலையமென்றும்,
இங்கே செய்யப்பட்டிருப்பது மலிவான ‘வெட்டி ஒட்டும்’ வேலை என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமானது.
செய்யப்பட்டருந்த ‘ஒட்டு’ வேலையின் தரம் பற்றி
சொல்லியாக வேண்டும். புகைப்படத்தில் காட்டப்பட்டிருந்த பேருந்துகளில் ஓட்டுநர்
இருக்கை இடப்புறமாக அமர்ந்திருந்தது. இந்தியாவிலோ இடது போக்குவரத்து
முறை இருப்பதால் வாகனங்களில் ஓட்டுநர் இருக்கை வலப்புறமாகவே
அமைந்திருக்கும். இதைக் கூட கவனிக்காமலா இத்தனை லட்சம் பேர் இதை
பரப்பியிருக்கிறார்கள் என்ற
ஆச்சர்யம் மேலிட்டது எனக்கு.
ஆச்சர்யங்கள் அதோடு முடியவில்லை. இந்த ஓட்டு வேலை அம்பலமானதைத்
தொடர்ந்து இணைய விவாதங்கள் எப்படி நடந்து
கொண்டிருக்கின்றன என்பதை கவனித்துக்
கொண்டிருந்தேன். ஆச்சர்யம் – நூற்றுக்கணக்கானோர் மோடியை ஆதரித்து சளைக்காமல் மறுமொழி
இட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் உதாரணத்திற்கு ஒன்றைப் பாருங்கள் –
“சரி, இப்ப என்ன? அது அகமதாபாத் இல்லை சீனா தான். போட்டோஷாப் தான் (ஒட்டு வேலை)
செய்திருக்காங்க. இருக்கட்டுமே? இப்பல்லாம் யார் தான்
போட்டோஷாப் செய்துக்கலை? நீங்க ஒரு பாஸ்போர்ட்
சைஸ் போட்டோ எடுத்தா கூட லேசா அங்கங்க டச்சப் பண்ணி தானே கடைசியா பிரிண்ட் அவுட்
எடுக்கறீங்க? உலகப்
புகழ் பெற்ற மாடல் அழகிகளின்
புகைப்படங்கள் கூட ஒட்டு வேலை செய்து தானே
வருது?
அது இருக்கட்டும், நீங்க ஏன் இன்னொரு
கோணத்தில் யோசிக்க கூடாது? ஒரு வேளை மோடியின் அகமதாபாத் பேருந்து நிலையத்தைப் பார்த்து அதில்
ஒட்டு வேலை செய்து தன்னோட நாட்டுடையது என்று சீனாக்காரன்
சொல்லியிருக்கலாமில்லே? நீங்க
ஏன் அந்தக் கோணத்தில் பார்க்கலை?”
உண்மையில் சொல்லப் போனால் அசந்து போய்
விட்டேன். மோடியின் பிரச்சாரங்களை
ஆப்கோ என்கிற அமெரிக்கர்கள்
ஒழுங்கமைத்து வருவதையும், கூலிக்கு ஆளமர்த்தி
இணையப் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தியிருப்பதையும், இணையத்தில் மோடிக்காக கூவுபவர்கள் பலர் கூலிகள் என்பதையும், அவர்கள் சொல்வதில்
நூற்றுக்கு நூறு அத்தனையும் பொய்கள் என்பதையும் நான் ஏற்கனவே அறிந்தே
வைத்திருந்தேன். இவ்வளவு தெரிந்திருக்கும் நம்மையே அசரடிக்கிறார்களே, விவரம் புரியாத அப்பாவி கோயிந்துகளின் நிலைமை எப்படியிருக்கும் என்று
யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை.
அரசியல் எதிரிகளை அவதூறு செய்வதற்கு
பேஸ்புக்/டுவிட்டர்.
மோடிக்காக மேற்படி பிரச்சாரங்கள், மேற்படி நபர்களால், மேற்படி முறைகேடான வழிகளில் செய்யப்பட்டு வருவது அனேகம் பேருக்குத் தெரியும் என்றாலும், அத்ன் முழுமையான
பரிமாணத்தை கோப்ராபோஸ்ட் தனது இரகசிய கேமராவில்இரகசியமாக பொறிவைத்துப்
பிடித்து வெளியிட்டுள்ளது. இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக
இரகசியமாக இயங்கி வரும் ”இணைய பிம்ப மேலாண்மை”
(ONLINE REPUTATION MANAGEMENT – ORM) சேவை
வழங்கி வரும் நிறுவனங்களிடம்
எதிர்கட்சியைச் சேர்ந்த கற்பனையானதொரு
இரண்டாம் கட்ட தலைவரின் செல்வாக்கை
உயர்த்தச் சொல்லி கேட்பது என்கிற
முகாந்திரத்தில் கோப்ராபோஸ்ட்
இணையதளத்தின் சையது மஸ்ரூர் ஹசன் இந்த
இரகசிய விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.
இணைய பிம்ப மேலாண்மை சேவையை வழங்கி
வரும் சுமார் இரண்டு டஜன் நிழல்
நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்
போது இரகசிய கேமரா பதிவொன்றில்
மேற்படி நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த
பிபின் பத்தாரே சொல்வதைக் கேளுங்கள் –
”இதோ நம்ம ப்ரவீன் ஜாரா தேர்தல்ல ஜெயித்தாரில்லே… அதுக்கு நாங்க என்ன செஞ்சோம் தெரியுமா?
அவரோட தொகுதில சில முசுலீம்
வாக்காளர்கள் இருந்தாங்க.
முசுலீம்கள் இவருக்கு ஓட்டுப் போட
மாட்டாங்கன்னு எங்களுக்குத் தெரியும்.
ஒரு பகுதியில சுமார் 60 சதவீத அளவுக்கு
முசுலீம் ஓட்டுக்கள் இருந்தது.
நாங்க என்னா செஞ்சோம்னா… ஒரு கலவரத்தை
உருவாக்கிட்டோம். அவங்க ஆள்
ஒருத்தனையே பிடிச்சி ஒரு கையெறி குண்டை
வெடிக்க வச்சிட்டோம். ஓட்டுப்பதிவு
நாளன்னிக்கு அவங்க ஆளுங்க ஒரு பய வெளியே
வரலையே.. அந்த 60 சதவீத
ஓட்டுக்களையும் அப்படியே அமுக்கிட்டோம்.
இந்த மாதிரியெல்லாம் எங்களால செய்ய
முடியும்”.
இவர்கள் கரங்கள் நீளும் எல்லை மெய்
நிகர் உலகமான இணையம் மாத்திரமல்ல; நேரடியாக களத்தில் இறங்கி கலவரங்களை ஒழுங்கமைத்து நடத்துவது, அதற்காக உள்ளூர் ரவுடிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வது என்று மெய்
உலகத்தினுள்ளும் சர்வசாதாரணமாக நீள்கிறது. சுதந்திரமான தேர்தலை நடத்த உள்ளூர்
போலீசு படையிலிருந்து மத்திய ஆயுதப் படைகள் வரைக்கும் இறக்குகிறோம்
என்று தேர்தல் பாதுகாப்பு குறித்து பீற்றிக் கொள்வதன் லட்சணம் இது தான். தேர்தல் காலங்களில் சாதாரண சுவரெழுத்து எழுதக் கட்டுப்பாடுகள் எனும்
பெயரில் தடை விதிக்கும் தேர்தல் ஆணையமோ,
தேர்தல் வெற்றிக்காக மத அடிப்படையில்
சமூகத்தை பிளவுபடுத்துவதைக் கண்டு கொள்வதில்லை.
யாரிடம் காசு வாங்குகிறார்களோ, அவர் சார்பாக முகநூல்
உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் பக்கங்களை உருவாக்குவது, லட்சக்கணக்கான போலி
கணக்குகள் துவங்கி அந்த பக்கங்களைத் தொடரச் செய்வது என்பதெல்லாம் இந்த
துறையில் இவர்கள் செய்யும் அடிப்படை வேலைகள். சம்பந்தப்பட்ட தலைவரைப்
பற்றி பல்வேறு துதிபாடல்களை உருவாக்குவது,
அதை லட்சக்கணக்கில் பரப்புவது
மட்டுமின்றி அந்த தலைவரின் அல்லது அந்தக் கட்சியின் எதிர்தரப்பைப் பற்றி
வதந்திகளை உருவாக்கவும் செய்கிறார்கள்.
ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்காளர்கள்
இருக்கிறார்கள், எந்த வார்டில் எத்தனை வாக்காளர்கள்,
அவர்களின் இன, மத, மொழிவாரியான
துல்லியமான சதவீதக் கணக்குகளை கையில் வைத்திருக்கிறார்கள். இவற்றைக்
கொண்டு ஒரு போட்டியாளருக்கு சாதகமான ஓட்டுக்களை அறுவடை செய்ய என்ன விதமான
வதந்திகளை உருவாக்குவது, எப்படிக் கலவரத்தைத் தூண்டி ஒரு பிரினரை ஓட்டளிக்காமல் செய்வது, கலவரங்களின் மூலம் ஓட்டுக்களை மதரீதியாகவும் சாதிரீதியாகவும் எப்படி பிளவுபடுத்துவது –
இதிலிருந்து ஆதாயம் பெறுவது எப்படி
என்பது வரை துல்லியமான திட்டங்கள் இவர்களிடம் உள்ளன.
வருமான வரிச் சட்டம், இணையத்திற்கான சைபர்
சட்டம், மதக் கலவரங்களைத்
தடுப்பதற்கு என்று பேரளவுக்கு உள்ள
அனைத்து விதமான சட்டப்பிரிவுகளையும்
மிகச் சாதாரணமாக மீறிச் செயல்படும்
இவர்களின் கையில் இத்தனை துல்லியமான
தகவல்களும் புள்ளி விவரங்களும்
இருந்தால் என்னவாகும் என்பதை 2002 குஜராத்
கலவரத்திலிருந்தே நாம் புரிந்து கொள்ள
முடியும். தற்போது அதை கச்சிதமாக
அறுவடை செய்வதன் வழியை இந்த நிறுவனங்கள்
செய்து கொடுக்கின்றன.
தில்லியைச் சேர்ந்த வெப்ஸ்ட்ரீக்ஸ்
என்கிற பிம்ப மேலாண்மை நிறுவனத்தின்
விஷால் சைனி என்பவர் இரகசிய கேமராவின்
முன் தெரிவித்திருக்கும் கருத்தின்
படி,
ஒரு வீடியோவை யூட்யூப் இணையதளத்தில்
வைரலாக பரப்புவதன் மூலம் சமூகத்தையே இரண்டாகப் பிளப்பது வெகு சாதாரணமாக சாதிக்க
முடியும் வேலை தான் என்பதாகும். வைரல் மார்க்கெட்டிங்குக்குஅதற்கு உதாரணமாக
சமீபத்தில் நடந்த முசாபர்நகர் மதக்கலவரத்தைக் காட்டுகிறார். VIRAL என்பது
ஏதேனும் ஒரு விஷயத்தை இணையத்தில் திடீரென்று பிரபலமாக்கி லட்சக்கணக்கில்
பரப்பி, பரபரப்பூட்டுவது. இதைக் கட்டண சேவையாகவே முகநூல் உள்ளிட்ட சமூக வளைத்தளங்கள் செய்து வருகின்றன.
இது போன்ற நிழல் நிறுவனங்கள் சமூக
வலைத்தளங்களோடு நெருக்கமாக கூட்டணி
வைத்துள்ளன. சமூக வலைத்தளங்களில் எந்த
விதமான செய்திகளை, யார், எதற்காக
வாசிக்கிறார்கள். வாசிப்பவர்களின் வயது, பால், மொழி, பிராந்தியம் உள்ளிட்டவைகளை
கட்டணத்திற்காக பெற்றுக் கொள்கிறார்கள்.
அதனடிப்படையில் மொழி, இன, மத, சாதி, பிராந்திய அடிப்படையிலான அணுகுமுறையை வகுத்துக் கொள்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்,
நரேந்திர மோடியை இசுலாமியர்களுக்குப்
பிடிக்காது. இது ஒரு உண்மை.
நரேந்திர மோடி பிரதமராக வேண்டுமென்றால்
அவர் மேல் படிந்திருக்கும்
இந்துத்துவ முத்திரையை போக்கி அனைத்து
மக்களுக்குமான தலைவர் என்கிற
பிம்பத்தை உருவாக்க வேண்டும். இதுவும்
ஒரு உண்மை. இப்போது பிம்ப மேலாண்மை
நிழல் நிறுவனங்கள் என்ன செய்வார்கள்
என்பதை வெப்போலாக்ஸ் என்கிற பிம்ப
மேலாண்மை நிழல் நிறுவனத்தின் தலைவர் ரவி
அகர்வால் என்ன சொல்லியிருக்கிறார்
என்று பாருங்கள் – “மோடியின் இரசிகர்களாக
முசுலீம்கள் இருப்பது போல சில
போலிக்கணக்குகளைத் துவங்கி மோடி
புகழ்பாட வேண்டும். என்றாலும் அந்த மாதிரி
நிறைய முசுலீம்கள் இருப்பது போலும்
தெரியக் கூடாது, இல்லாதது போலும்
தெரியக்கூடாது”
எத்தனை லைக்குகள் வேண்டும்?
நரேந்திரமோடியின் புகழ் பரப்பும் வேலையை
காண்டிராக்டாக பெற்ற ஒரு நிறுவனம் அதை மட்டும் செய்யக் கூடாது. எதிரிகள் பற்றி வதந்தி
கிளப்ப வேண்டும், மோடிக்கு எதிராக இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்குச்
சென்று காட்டமாக வாதிட வேண்டும்,
மோடியின் பொய்கள் அம்பலமாகும் இணைய
தளங்களுக்குச் சென்று சப்பைகட்டு கட்ட வேண்டும், மோடிக்கு எதிராக
செயல்படுபவர்களை இழிவு படுத்த வேண்டும். இதற்காக இவர்கள் எந்த எல்லைகளுக்கும் செல்லத்
தயாராக இருக்கிறார்கள். அந்த எல்லைகள் உங்கள் கற்பனைகளையெல்லாம் கடந்த
ஒன்று.
இதோ பெங்களூரைச் சேர்ந்த ட்ரையாம்ஸ்
என்கிற நிழல் நிறுவனத்தைச் சேர்ந்த
த்ரிகாம் பட்டேல், மோடியை அரசியல்
ரீதியாக எதிர்ப்பவர்களையும் மோடி
எதிர்ப்பு பத்திரிகையாளர்களையும்
எப்படிக் கையாள்வது என்பது பற்றிச்
சொல்வதைக் கேளுங்கள் – “அதுக்கெல்லாம்
உங்களுக்கு ஒரு சாத்தானின் மூளை
வேணும். அதெல்லாம் ரவுடிகள்
பார்த்துக்குவாங்க. எனக்கு சில தனியார்
துப்பறியும் நிறுவனங்களைத் தெரியும்.
அவங்க ஆட்கள் ரெண்டு பேரை விட்டு இவனை
நெருக்கமா கண்காணிக்கனும். இவனோட
விருப்பம் என்ன, எங்கேருந்து வந்தான்,
எங்கெல்லாம் போறான், அவனோடு தனிப்பட்ட
விருப்பங்கள் என்ன….. இந்த மாதிரி
இவனோட தனிப்பட்ட தகவல்களை எங்க தகவல்
கிடங்கில் சேர்த்து வச்சிக்குவோம்”
இவ்வாறாக சேகரிக்கப்படும் தகவல்கள் மோடி
எதிர்ப்பாளர்கள் மேல் ஏதாவது
ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
பாய்ந்து நிலைகுலைய வைக்க கூடும்.
இவையொரு பக்கம் இருக்க, மோடியின்
புகழ்பாடுவதற்காக வாங்கும் காசில்
புகழ் பாடுவது மற்றும் எதிரிகளை
வசைபாடுவது என்பதைக் கடந்து, ஒரு சில மோடி ’எதிர்ப்பு’ இணையதளங்களையும் இவர்களே நடத்துகிறார்கள். தவறான தரவுகளின் அடிப்படையில் மோடி எதிர்ப்புக் கட்டுரைகளை இவர்களே
வெளியிடுகிறார்கள். பின் இவர்களே பல நுற்றுக் கணக்கான பெயர்களில் வந்து அந்த செய்தியை ஆதாரப்பூர்வமாக ‘அம்பலப்படுத்துகிறார்கள்’.
மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் இப்படித்தான் சரியான தகவல்கள் இன்றி அவதூறாக எழுதுவார்கள்
என்பதை இதன் மூலம் பரவலாக பிரச்சாரம் செய்து கொள்கிறார்கள்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட
பல்வேறு அரசியல் கட்சிகள் இவர்களின் சேவையை பெற்றுக் கொள்வதாக கோப்ராபோஸ்டின்
இரகசிய விசாரணையில் இருந்து தெரிய வருகிறது. மற்ற எல்லாக்கட்சிகளைக்
காட்டிலும் பாரதிய ஜனதாவும்,
பிற எல்லா தலைவர்களைக் காட்டிலும்
மோடியுமே பிம்ப மேலாண்மை சேவை நிறுவனங்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுப்பதில்
முன்னணியில் இருக்கிறார்கள். பாரதிய ஜனதாவின் சார்பில் தான் இந்த
நிறுவனங்களுக்கு ஏராளமான வருவாய் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். என்றாலும், என்.ஜி.ஓக்கள், அரசு அலுவலர்கள், பெரும்
கார்ப்பரேட்டுகளும் கூட இந்த சேவையைப்
பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிய
வருகிறது.
ஒரே நிறுவனமே, மோடி சார்பாக ஒரு
காண்டிராக்டையும் காங்கிரஸ் அல்லது ஆம்
ஆத்மி சார்பாக ஒரு காண்டிராக்டையும்
பெற்று வேலை பார்த்தும் வருகிறார்கள்.
ஒவ்வொரு தரப்பை
பிரதிநிதித்துவப்படுத்தவும் தனித்தனி சர்வர்களை அமைத்துள்ளார்கள்.
என்றாலும், கூவுபவர்கள் ஒரே கூலிகள் தான். அதாவது, ஒரு கூலியின் மேசையில் வலது பக்கம் வைக்கப்பட்டிருக்கும்
லேப்டாப்பில் மோடிக்கு ஆதரவாக ராகுலை ஏசி ஒரு மறுமொழியைப் போட்டு விட்டு அதே மேசையில்
இடது பக்கமாக வைக்கப்பட்டிருக்கும் லேப்டாப்பில் ராகுலுக்கு ஆதரவாக
மோடியை ஏசி ஒரு கமெண்டு போடுவது இவர்களின் அன்றாடப் பணி.
மொத்தமும் மேட்ரிக்ஸ் உலகம் ஒன்றினுள்
நுழைந்து விட்டதைப் போன்ற அனுபவமே
நம்மைக் கவ்வுகிறது.காங்கிரசோ பாரதிய
ஜனதாவோ இந்த வழிமுறைகளைப்
பின்பற்றுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
ஆனால், இப்படியாகச் செய்யப்படும் பிரச்சாரங்களும், அதன் மூலம்
ஏற்படுத்தப்படும் செல்வாக்கும், மக்கள்
கருத்தும் தான் ஒரு தேர்தலின் போக்கைக்
கட்டுப்படுத்தும் என்றால் அந்த
ஜனநாயகத்தின் யோக்கியதை
எப்படியிருக்கும்?
இந்த அழுகுணி ஆட்டத்திற்காக மோடியைக்
குறை சொல்வதில் பிரயோஜனமில்லை. இது
தான் மோடி. இந்தப் பண்பு தான்
இந்துத்துவத்தின் பண்பு. இது தான் இந்து
சனாதன தர்மம் போதிக்கும் அறம். இது பல
சந்தர்ப்பங்களில் வெளிப்பட்ட ஒன்று
தான். கருப்பையைப் பிளந்து குழந்தையை
வெளியே இழுத்துக் கொன்றவர்கள் தான்
இந்து தத்துவ ஞான மரபின் வாரிசுகள்.
இத்தாலி பாசிஸ்ட் கட்சியின் மாணவர்கள்
தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலவர்கள்.
நாடே சுதந்திரத்திற்காக போராடிக்
கொண்டிருந்த போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு
வெள்ளையனின் காலை நக்கிக் கிடந்தது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெற்றெடுத்த கள்ளக்
குழந்தையான பாரதிய ஜனதாவின்
வழிமுறைகள் வேறு விதமாக இருந்தால் தான்
நாம் அதிர்ச்சியடைய வேண்டும்!
பெங்களூரின் ஸ்ரீராம் சேனா காசு
வாங்கிக் கொண்டு கலவரம் செய்து
அம்பலப்பட்ட விசயம் ஏற்கனவே பலருக்கும்
தெரியும். அதையே இப்போது கார்ப்பரேட் பாணியில் செய்யப் போகிறார்கள். நேற்றுவரை
வதந்திகளை உருவாக்கி தனது இரத்த வேட்டையை நிறைவேற்றிய இந்துமதவெறியர்களுக்கு
இப்போது தொழில்நுட்பம் உதவி செய்கிறது. இந்த அழுகுணி ஆட்டத்த்தை
மக்களிடம் வேரறுக்காமல் எந்த மக்களுக்கும் நிம்மதி இல்லை.
- தமிழரசன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home