5 December 2013

சி.ஐ.ஏவின் கரங்களில் ஆதார் ஆவணங்கள்?



ஆதாரின் ரகசியத்தை பாதுகாப்பதில் நாட்டு மக்கள் எழுப்பும் கவலை பொய்யாகவில்லை. இதன் அறிகுறியை இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சந்திப்பு சுட்டிக்காட்டுகிறது.

இந்திய குடிமக்களின் அடிப்படை விபரங்களை ஆவணப்படுத்திய ஆதார் விபரங்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏவின் கரங்களுக்கு செல்வதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சி.ஐ.ஏவின் நிதியைப் பெற்று இயங்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மோங்கோ டி.பி என்ற நிறுவனம் ஆதார் ஏஜன்சியான யூனிக் ஐடெண்டிஃபிகேஷன் அதாரிட்டி ஆஃப் இந்தியா (யு.ஐ.டி.எ.ஐ) வுடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்பதற்கு அதிகாரப்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை. ஆனால், அந்நிறுவனத்தின் சி.இ.ஒ மாக்ஸ் ஷேல்ஸன் இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் நடத்திய சந்திப்பு இது தொடர்பானது என்று எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

யு.ஐ.டி.எ.ஐ என்ற ஆதார் திட்டத்திற்காக மத்திய அரசு பொறுப்பை ஒப்படைத்த ஆணையத்திடம் இருந்து மோங்கோ டி.பி நிறுவனம் முக்கிய ஒப்பந்தம் செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் விபரங்கள் அடங்கிய ஆதார் பரிசோதித்தல், ஆய்வு செய்தல் ஆகியவற்றில் உதவுவதை மோங்கோ டிபி நிறுவனம் இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்பார்க்கிறது என்று எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

குவிந்து கிடக்கும் பெரும் தரவுகளை (datas) கையாளும் சாஃப்ட்வெயர் (மென்பொருள்) மோங்கோ டி.பியின் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது.

2007-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் 1400 கோடி ரூபாய் நிதியை சேகரித்துள்ளது. நிதி அளித்ததில் சி.ஐ.ஏவின் துணை நிறுவனமான இன்க்யூடெல்லும் உள்படும் என்று அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இன்க்யூடெல் தங்களுடைய முதலீட்டாளர்களில் ஒருவர் என்று மோங்கோ டிபியின் இணையதளம் கூறுகிறது. ஆனால், இந்நிறுவனத்திடமிருந்து எவ்வளவு தொகை? பெறப்பட்டது என்ற விபரம் இணையதளத்தில் இல்லை.

சி.ஐ.ஏவின் பணிக்காக நூதன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தல், அவற்றை உபயோகிப்பதில் உதவுதல் ஆகியவற்றை இந்த நிதியை பெறுவதற்கு பதிலாக தாங்கள் செய்வதாக மோங்கோ டி.பி நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.

அதேவேளையில் இவ்விவகாரம் தொடர்பாக யு.ஐ.டி.எ.ஐ மற்றும் மோங்கோ டி.பி நிறுவனம் பதிலளிக்க மறுத்துவிட்டதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

யு.ஐ.டி.எ.ஐ தலைவர் நந்த நிலேகனி தங்களின் தொலைபேசி அழைப்புக்கோ, இ-மெயில் மெஸேஜுக்கோ பதிலளிக்கவில்லை என்று எகனாமிக் டைம்ஸ் கூறுகிறது. ஆனால், மோங்கோ டி.பி நிறுவனத்துடன் ஏஜன்சி ஒப்பந்தத்தை துவக்கியுள்ளதாக யு.ஐ.டி.எ.ஐயின் மூத்த அதிகாரி உறுதிச் செய்துள்ளார். மோங்கோ டி.பியின் நிறுவனத்தின் சாஃப்ட்வெயரை ஆரம்பக்கட்ட ஆய்வுக்கு உபயோகிக்க துவங்கிவிட்டதாக அந்த மூத்த அதிகாரி கூறுகிறார்.

யு.ஐ.டி.எ.ஐயுடன் நேரடி ஒப்பந்தத்திற்கு மோங்கோ டி.பி தயாராவது தெளிவாகவில்லை என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் கூறுகிறது. இந்த விபரம் சரியானது என்றால் யு.ஐ.டி தரவுகள் (datas) ரகசியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று செண்டர் ஃபார் இண்டர்நெட் அண்ட் சொசைட்டியின் எக்ஸ்க்யூடிவ் இயக்குநர் சுனில் ஆப்ரஹாம் கூறுகிறார்.

இந்தியா உள்ளிட்ட ஆசியா, ஐரோப்பிய பகுதிகளில் தகவல் தொடர்பு பரிமாற்றங்களை அமெரிக்க இண்டலிஜன்ஸ் ஏஜன்சி உளவு பார்ப்பதாக எட்வர்ட்

ஸ்நோடன் வெளியிட்ட தகவல்களையும் எகனாமிக்ஸ் டைம்ஸ் சுட்டிக்காட்டுகிறது.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home