9 May 2014

இங்கிலாந்தில் இந்திய டாக்டர்கள் வேலை இழக்கும் அபாயம்


லண்டன்: இங்கிலாந்தில் பணிபுரியும் இந்திய டாக்டர்கள் பெரும்பாலானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பணிபுரியும் வெளிநாட்டு டாக்டர்கள் ஏராளமானோரை கடந்த ஆண்டுகளில் இங்கிலாந்து மருத்துவ கவுன்சில் பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக 250 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் இந்திய டாக்டர்கள் வேலை இழந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானோர் இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு இங்கிலாந்துக்கு பணிபுரிய சென்றவர்கள். கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவம் படித்து விட்டு இங்கிலாந்தில் பணிக்காக சென்ற 117 டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 75 சதவீதம் வெளிநாட்டு டாக்டர்களுக்கு இங்கிலாந்து அரசு தடைவிதித்துள்ளது. மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வந்த 458 டாக்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பணிபுரியும் வெளிநாட்டு டாக்டர்களுக்கு போதிய திறமை இல்லாததால் தேசிய சுகாதார துறையில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு டாக்டர்களுக்கு வைக்கப்படும் தேர்வுகளை மேலும் கடினமாக்க வேண்டும் என்று இங்கிலாந்து டாக்டர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த சூழலில்தான் லண்டனில் உள்ள பல்கலை கழக கல்லூரி கூறுகையில், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கும், இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற மருத்துவ பட்டதாரிகளுக்கும் திறமையில் மிகப் பெரிய இடைவெளி உள்ளது. எனவே வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான பணி நியமன தேர்வில் பாஸ் மார்க்கை 63 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் 95 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு டாக்டர்கள் மருத்துவ சேவை செய்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home