24 September 2014

''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்!


ஆவின்.. வைத்தியின் அசுர வளர்ச்சி

''ஆவின் நிறுவனத்தின் எம்.டி. சுனில் பாலிவாலை டிரான்ஸ்ஃபர் பண்ணி காட்றேன் பாருங்க'' என சபதம் போட்டார் வைத்தியநாதன். ஆனால், சுனில் பாலிவாலுக்கு பதிலாகப் பதவியை பறிகொடுத்தார் பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி.

'மாதவரம் மூர்த்தியின் தலை உருண்டதற்கு காரணம் ஒரே ஒரு ஆள்தான்’ என பெயர் குறிப்பிடாமல் 'பால் கடத்தலுக்கும் பதவி பறிப்புக்கும் சம்பந்தம் உண்டா?’ என்ற தலைப்பில் கடந்த 14.9.14 தேதியிட்ட ஜூ.வி இதழில் எழுதியிருந்தோம். அந்த ஆள் வேறு யாருமில்லை வைத்தியநாதன்தான். ஆவின் பால் கலப்பட ஊழல் விவகாரம் சந்தி சிரிக்க காரணமாக இருக்கும் வைத்தியநாதன் அ.தி.மு.க புள்ளி. அவரைப் பற்றிய வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார்கள் ஆவின் ஊழியர்கள். ''தென் சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன் 1985-ல் ஆவினில் தானியங்கி பால் நிலையத்தில் 10 ரூபாய் தினக்கூலியாக வேலைக்குச் சேர்ந்தார். இப்போது முக்கியப் பதவியில் இருக்கும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் மூலம்தான் வளர்ச்சி அடைய ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்போது தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் பெயரில் அந்த பூத்துகளை மோசடியாக கைப்பற்ற ஆரம்பித்தார் வைத்தியநாதன். அப்படிப் பெற்ற பூத்துகளில் தண்ணீரைக் கலந்து கொள்ளை லாபம் பார்த்தார். இதில் ருசி கண்டதால் ஆவினை கரையான்போல அரிக்க ஆரம்பித்தார். 1991-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது ஜனார்தனன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அவருடைய மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வைத்தியநாதனுக்கு நெருக்கம். இப்போது அவர் முன்னாள் அமைச்சராக இருக்கிறார். அவர் மூலம் பால் வண்டி கான்ட்ராக்ட்டை கைப்பற்றினார் வைத்தியநாதன். அதன் பிறகு வைத்தியநாதனின் வளர்ச்சி கிடுகிடு என உயர்ந்தது. அடுத்து 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நந்தனம் ஏரியா பூத் ஒன்றில் ஸ்டாலின் அப்போது ரெய்டு செய்தபோது வைத்தியநாதனின் தகிடுதத்தம் வெளிச்சத்துக்கு வந்தது. உடனே ஆந்திராவுக்குத் தப்பிப் போனார் வைத்தியநாதன். ஆவினை கைவிட்டுவிட்டு தீபிகா என்ற பெயரில் தனியாக பால் பண்ணை நடத்தி 'பூஜா’ என்ற பெயரில் பால் விற்றார். இதில் அந்த விழுப்புரம் பிரமுகரும் பார்ட்னராக இருந்தார்.
2001-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் ஆவினுக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தார். அவருக்கு அனைத்து ஆசிகளும் கிடைத்தன. விழுப்புரம் பிரமுகரும் அவருடைய சகோதரரும் வைத்தியநாதனுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தனர். அப்போதுதான் டேங்கர் லாரிகள்மூலம் பால் சப்ளை நடைபெறத் தொடங்கியது. அதில் கால் பதிக்க ஆரம்பித்தார் வைத்தியநாதன். டேங்கர் லாரி ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் கமிட்டியில் உட்கார்ந்து யாருக்கு டெண்டர் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார். 2006-ல் தி.மு.க ஆட்சி வந்ததும் மதிவாணன் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது கருணாநிதி அருகில் இருந்த ஒரு முக்கியப் பிரமுகரை பிடித்து படிப்படியாக ஆவின் நிறுவனத்தின் உச்சாணியில் ஏறத் தொடங்கினார்.
2011-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்தபோது டேங்கர் லாரிகள்மூலம் பால் கொண்டு வரும் கான்ட்ராக்ட்டில் கொடிகட்டிப் பறந்தார். இதன்மூலம் பல கோடிகளை சம்பாதித்தார். டெண்டர் கமிட்டி, தரக் கட்டுப்பாட்டு பிரிவு என ஆவினில் எல்லா இடங்களிலும் வைத்தியநாதனின் ஆட்கள்தான் இருப்பார்கள். வைத்தியால் உண்டுகொழுத்த அதிகாரிகள் நிறைய பேர் ஆவினில் இருக்கிறார்கள். பிளாட்டுகள், கடைகள், ஆடம்பரப் பொருட்கள் என வாங்கித் தந்து ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் குளிர்வித்துவிடுவார் வைத்தியநாதன்'' என்று பழைய வரலாறுகளை புரட்டிப் போட்டனர்.
பால் கடத்தல் பற்றி விவரித்தார்கள் விவரம் அறிந்தவர்கள். ''ஆவின் பால் பண்ணைகளுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இப்படி பால் கொண்டு வரும் டேங்கர் லாரிகளில் சீல் வைக்கப்பட்டிருக்கும். டேங்கர் லாரிகளை வழியில் எங்காவது நிறுத்தி அந்த சீலை லாகவமாகப் பிரித்துப் பாலைத் திருடுவார்கள். அதற்குப் பதிலாக வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட தண்ணீரையோ அல்லது பவுடரையோ கலப்பார்கள். பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலரும் வைத்தியநாதனுக்கு உடந்தையாக இருந்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது.
100-க்கும் மேற்பட்ட லாரிகளை வைத்தியநாதன் இயக்கி வந்தார். இதில் பல லாரிகள் ஒரே பதிவு எண் கொண்டவை. ஒவ்வொரு லாரியிலும் தினமும் 2 ஆயிரம் லிட்டர் வீதம் ஒவ்வொரு நாளும் 2 லட்சம் லிட்டர் வரை பால் திருடப்பட்டு வந்தது. பாலில் கலப்படம் செய்வதைக் கண்டுபிடிப்பதற்காகவே ஆவினில் விஜிலன்ஸ் பிரிவு உண்டு. ஆனால், இந்த முறைகேடுகள் பற்றி விஜிலன்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் பால் திருட்டைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி உதவியை நாடினார் ஆவின் எம்.டி சுனில் பாலிவால். பால் திருட்டு தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பி வைத்தார். முதல்வரின் ஒப்புதலுடன் அவர் எடுத்த நடவடிக்கையில்தான் இவ்வளவு விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இப்படி நடைபெறும் முறைகேடுகளால் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லமுடியாமல் ஆவின் முடங்கிப் போயிருக்கிறது'' என்றார்கள்.
வைத்தியநாதனை கைதுசெய்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறார்கள். யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தார் என்கிற விவரங்களை எல்லாம் வைத்தியநாதன் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடித்திருக்கிறார்களாம். திருடப்பட்ட பால் தனியார் பால் நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் 10 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆவின் பொது மேலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
''வைத்தியநாதனை கைது செய்துவிட்டு, ஆவின் ஊழியர்கள் சிலரை சஸ்பெண்ட் செய்துவிட்டால் மட்டும் போதாது. இந்த மெகா மோசடிக்கு துணை போன ஆவின் அதிகாரிகள் சிலரையும் கைதுசெய்ய வேண்டும். அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தியையும் விசாரிக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
சுனில் பாலிவாலிடம் பேசினோம். ''உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் தவறு இழைத்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீதும் ஆக்ஷன் இருக்கும். தவறுகள் நடக்காமல் இருக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பழைய சீல் முறையை மாற்றி நவீன சீல் முறைக்குத் திட்டமிட்டிருக்கிறோம். இப்படி புதிய யுக்திகளை பின்பற்றி தவறுகளையும் மோசடிகளையும் தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.
வெளுத்தது எல்லாம் பாலாகிவிடுமா என்ன?
- எம்.பரக்கத் அலி
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home