16 September 2014

தூக்கம்

தூக்கம் தரும் உணவுகள்
தூக்கமின்மைக்கான காரணங்களாக டென்ஷன், கவலை, நோய் என ஆளுக்கொன்றை சொல்வார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, தூக்கத்துக்கும் உணவுக்கும் நெருங்கின தொடர்பு உண்டு. காரணமே இல்லாமல், நாள் கணக்காக தூக்கமில்லாமல் சிரமப்படுகிறவர்கள், முதலில் கவனிக்க வேண்டியது அவர்களது உணவை!

தூக்கத்தை வரவழைப்பது செரோட்டனின் என்ற சுரப்பு. இது உருவாகக் காரணம் ட்ரிப்டோஃபன் என்கிற அமினோ அமிலம். இது அதிகமுள்ள உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது நல்ல தூக்கம் நிச்சயம். பிஸியாக இருக்கிற மூளைக்கு ரெஸ்ட் கொடுத்து, தூக்கத்தைத் தூண்டுவதில் இதன் பங்கு அதிகம். ட்ரிப்டோஃபன் அதிகமுள்ள உணவுகளில் பால், பால் பொருட்களுக்கு முதலிடம். சூடாக ஒரு கப் பால் குடித்தால் நல்ல தூக்கம் வருவதாக நிறைய பேர் சொல்வார்கள். காரணம், ட்ரிப்டோஃபன். அடுத்த இடம் வாழைப்பழத்துக்கு. கேழ்வரகு, கம்பு, பாதாம், தர்பூசணி விதை, வெள்ளரி விதை, கசகசா, எள், வேர்க்கடலை, சோயா உணவுகள் - இதில் எல்லாம் ட்ரிப்டோஃபன் அதிகம்.

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு சரியாக இல்லாத பெண்களுக்கும் தூக்கம் சரியாக இருக்காது. ஈஸ்ட்ரோஜென் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டாலே இந்தப் பிரச்னை சரியாகும். சோயா, ஆரஞ்சு பழத்தோலில் உள்ள வெள்ளைப்பகுதி, மாதுளைத் தோல் - இதில் எல்லாம் ஈஸ்ட்ரோஜென் நிறைய இருக்கிறது. வயிறு முட்ட சாப்பிடுவது, சாப்பிட்ட உடனே படுக்கப் போவது - இந்த இரண்டும் தூக்கத்தைக் கெடுக்கும். அதே மாதிரி அதிகக் கொழுப்பு, அதிக மசாலா சேர்த்த சாப்பாடும் செரிமானமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால், இரவு வேளைகளில் அதைத் தவிர்க்க வேண்டும்.

வயிறு உப்புசத்தை உண்டாக்கும் உணவுகள், வாயுவை உற்பத்தி பண்ணும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சாப்பாட்டுக்கும் தூக்கத்துக்கும் இடையில் 2 மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டியது அவசியம். தூக்கத்தைக் கொடுக்கிற உணவுகள் மாதிரியே தூக்கத்தைக் கெடுக்கிற உணவுகள் என  ஒரு பட்டியல் உண்டு. அதில் முதலிடம் காபி, டீ, சாக்லெட், கஃபைன் கலந்த அயிட்டங்களுக்கு. தூக்கம் வராமல் இருக்கும் போது, சட்டென சூடாக ஒரு கப் காபியோ, டீயோ குடிக்கிறோம். மந்தமாகி தூக்கத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிற நரம்புகளைத் தூண்டிவிட்டு, இன்ஸ்டன்ட் உற்சாகத்தைக் கொடுப்பவை இவையெல்லாம்.

அதிக சர்க்கரை, ஆல்கஹால், புகைப்பழக்கமும் தூக்கத்தின் எதிரிகள். தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் சூடான பாலில் அரை டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், தூக்க மாத்திரை தோற்றுப் போகிற அளவுக்கு ஆனந்தமான உறக்கம் வரும்!
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home