12 September 2014

கூர்மாசனம்

ஆசனம் என்பது உடலை ஓரு குறிப்பிட்ட நிலையில் இருக்கச் செய்வது. ஆசனம் செய்வதால் நமது அகத்திற்கும், புறத்திற்கும் நல்ல நன்மைகளை அளிக்கும். உடலையும், மனதையும் வன்மையடையச்செய்து நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே நாம் அனைவரும் சிறிது நேரம் ஆசனப்பயிற்சி செய்வது எளிமையானதும், இன்றியமையாததாகும். இன்று நாம் பார்க்கும் ஆசனம் கூர்மாசனம்.

பெயர்க்காரணம்: கூர்மம் என்றால் ஆமை. இந்த ஆசனம் செய்யும் போது நம் உடலானது ஆமையின் வடிவத்தில் இருப்பதால் இதற்கு கூர்மாசனம் என்ற பெயர் வந்தது.

எவ்வாறு செய்ய வேண்டும்:


முதலில் கால்களைக் கொஞ்சமாக பக்க வாட்டில் நகர்த்தி வைத்து முன் பக்கமாக நீட்டி உட்காரவும். அடுத்து முழங்கால்களைச் சற்று மேலே உயர்த்தி முன் பக்கமாக குனிந்து கொள்ள வேண்டும். பின்பு வலது கையை வலது முழங்காலுக்கு அடியில் நுழைத்து வெளிப்பக்கமாக கொண்டு வர வேண்டும். அதாவது வலது கை, வலதுகாலுக்கு செங்குத்தாகவும் இருக்க வேண்டும். அப்போது கால்கள் வளையாமல் இருக்கவேண்டும். இந்த நிலையில் முதுகையும், கழுத்தையும் முன் பக்கம் ஒன்றாக நீட்டி வயிறு, மார்பு, மற்றும் கீழ்தாடையைத் தரையில் பதிக்கவேண்டும். சுமார் 30விநாடிகளுக்கு சாதாரண மூச்சில் இருந்து பிறகு முழங்கால்களை உயர்த்தி கைகளை தளர்த்தி முதுகை நிமிர்த்தி மேலே எழுந்து உட்காரவும்.

என்ன பயன்கள்:

உண்ட உணவுகளை எளிதில் செரிமானம் அடையச்செய்து செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் இருக்க செய்கிறது. சுவாசப்பாதையை சீர் செய்வதுடன் மூக்கடைப்பு, நெஞ்சு சளி, இருமல், மூச்சுவிட சிரமம் ஏற்படுதல், இவற்றை சரி செய்கிறது.
தண்டுவடத்திற்கும், முள்ளந்தண்டு எலும்புகளுக்கும் வன்மையை அளிக்கிறது. இதயத்திற்கு செல்லும் இரத்தத்தை அதிகரித்து இதயத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்க செய்கிறது.

நுரையீரலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச்செய்கிறது. சிறுநீரகத்தை தூண்டச் செய்து கழிவுநீரை வெளியேற்ற உதவுகிறது. பெண்களின் இடுப்பு பகுதி தசைகளை வன்மையடையச் செய்கிறது. கருப்பையை தூண்டி கருப்பை சம்பந்தமான நோய்களை சரி செய்கிறது. நரம்பு மண்டலத்தை தூண்டச்செய்கிறது.  சுக மகப்பேறு அடைவதற்கு உதவி புரிகிறது.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home