26 June 2014

ஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீ£வுகள்!





புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு (ஃப்ளாட்) வாங்கும் பலருக்கு அதற்கான பத்திரம் பதிவு செய்யும் விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. ஃப்ளாட்டுக்கான பத்திரத்தை எப்போது பதிவு செய்யவேண்டும்? கட்டுமான ஒப்பந்தத்தை எப்போது பதிவு செய்ய வேண்டும்? அதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்கிற விவரம் ஃப்ளாட் வாங்கும் பலருக்கும் தெரிவதில்லை. இவற்றுக்கான விளக்கத்தைச் சென்னையைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் டி.பார்த்தசாரதியிடம் கேட்டோம்.
''தமிழக அரசு அண்மையில் கட்டுமான ஒப்பந்தத்தையும் (கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட்) பதிவு செய்யவேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை 2013, அக்டோபர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கட்டுமானச் செலவில் 2 சதவிகிதத்தை இதற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக்கான பிரிக்கப்படாத மனையை (யூ.டி.எஸ்) பதிவு செய்யும்போதே, இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தையும் பதிவு செய்துவிட வேண்டும். யூ.டி.எஸ். பதிவுக்கு மொத்தம் எத்தனை சதுர அடி யூ.டி.எஸ். இருக்கிறதோ, அதற்கான அரசு கைடுலைன் மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரைத்தாள் கட்டணமாகவும், 1 சதவிகிதத்தைப் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
எனினும், ஏற்கெனவே ஃப்ளாட் வாங்க முன்பணம் அல்லது பகுதிப் பணம் கொடுத்து அல்லது முழுப் பணம் கொடுத்து யூ.டி.எஸ் பதிவு செய்திருப்பவர்கள், கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யத் தேவை இல்லை. அதற்கான கட்டணத்தைப் பில்டர் கேட்டால், கொடுக்கத் தேவை இல்லை. இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும்தான். தனி வீடு மற்றும் வரிசை வீடுகளுக்குப் பொருந்தாது'' என்று விளக்கம் சொன்னவர், கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்வதால் என்ன நன்மை என்பதை விளக்கி சொன்னார்.
''அடுக்குமாடி கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும் என அரசாங்கம் சொல்வது வரவேற்கத்தக்கதுதான். சில புரமோட்டர்கள், அதிகமாக யூ.டி.எஸ். பதிவு செய்வது இதன் மூலம் தடுக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தப் பத்திரத்தில் ஃப்ளாட் நம்பர் பதிவு செய்யப்படுவதால், ஒரே ஃப்ளாட் ஒன்றுக்குமேற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படுவது அல்லது விற்கப்படுவது தடுக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யப்படாத காலத்தில்,  ஏற்கெனவே சொன்ன வீட்டுக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கித் தருவது  நடந்திருக்கிறது. இனி அப்படிச் செய்ய முடியாது. இந்த ஒப்பந்தத்தில் எந்த பிளாக், எந்தத் தளம், ஃப்ளாட் எண், சூப்பர் பில்ட்-அப் ஏரியா எல்லாம் பதிவு செய்யப்படுகிறது. இதனால், பில்டர் வேறு வீட்டை மாற்றிக்கொடுக்க முடியாது என்பதால் 2% கட்டணம் கூடுதலாகச் செலுத்தினாலும் வீடு வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பான அம்சமாக இது இருக்கிறது'' என்றவரிடம், 'கட்டுமான ஒப்பந்தத்துக்கான 2 சதவிகிதக் கட்டணம் எப்படி கணக்கிடப் படுகிறது?’ என்று கேட்டோம்.
''இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஃப்ளாட் ஒன்றின் விலை ரூ.50 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இதில் யூ.டி.எஸ். சதுர அடிக்கான அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.16 லட்சம் எனில், கட்டுமானச் செலவு 34 லட்சம் ரூபாய். இங்கே ரூ.16 லட்சத்துக்கு 8%, அதாவது, ரூ.1,28,000 முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும். ரூ.34 லட்சத்துக்கு 2%, அதாவது, ரூ.68,000 கட்டுமான ஒப்பந்த பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும்'' என்றவர் சற்று நிறுத்தி, புதிய அடுக்குமாடி வீட்டை பதிவு செய்யும்போது கட்டவேண்டிய வேறு சில கட்டணங்கள் பற்றியும் விளக்கிச் சொன்னார்.
''ஃப்ளாட் வாங்குபவர்கள் சேவை வரி (சர்வீஸ் டாக்ஸ்) மற்றும் மதிப்புகூட்டு வரி அல்லது விற்பனை வரி (வாட்) கட்டவேண்டி வரும். கட்டுமானச் செலவில் 30% கட்டுமானக் கூலியாக இருக்கிறது. இந்தக் கட்டுமானக் கூலியில் 12.36% சேவை வரியாகக் கட்டவேண்டும். அடுத்து, கட்டுமானச் செலவில் 70% கட்டுமானப் பொருட்களுக்கான செலவாக இருக்கிறது. இந்த 70 சதவிகித தொகையில் 4% மதிப்புக்கூட்டு வரியாகக் கட்ட வேண்டும்.
இந்தக் கட்டணங்களை மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் பொருத்தி பார்த்தால் சுலபமாக விளங்கும். கட்டுமானச் செலவு ரூ.34 லட்சத்தில் 30% என்பது ரூ.10,20,000. இதில் 12.36%, அதாவது, ரூ.1,26,072 சேவை வரியாகக் கட்ட வேண்டும். கட்டுமான செலவு ரூ.34 லட்சத்தில் 70% என்பது ரூ.23,80,000. இதில் 4%, அதாவது, ரூ.95,200 விற்பனை வரியாகக் கட்ட வேண்டும்'' என்றவரிடம், பழைய ஃப்ளாட் பதிவு செய்ய என்ன நடைமுறை? என்று கேட்டோம்.
''புதிய ஃப்ளாட்டுக்கு இருப்பதுபோல் பழைய ஃப்ளாட்டுக்கு அதிகக் கட்டணங்கள் இல்லை. மனை மற்றும் வீட்டின் மதிப்பில் 7% முத்திரைத்தாள் கட்டணமாகவும், 1% பதிவுக்
கட்டணமாகவும் செலுத்தினால் போதும். அதாவது, மனை மற்றும் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், அதில் 8%, அதாவது ரூ.4 லட்சம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாகச் செலுத்தவேண்டும். மனையின் மதிப்பு அரசு கைடுலைன் அடிப்படையிலும் வீட்டின் மதிப்பு, சிறிய வீடாக இருந்தால் சார் பதிவாளர் மூலமும் பெரிய வீடாக இருந்தால் பொதுப்பணித்துறை பொறியாளர் மூலமும் மதிப்பீடு செய்யப்படும். இதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்'' என்றார்.
இனி ஃப்ளாட் பத்திரப் பதிவு செய்யும்போது விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்துத் தெளிவாக இருப்பீர்கள்தானே!
-சி.சரவணன்

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home