இதய நோயின் அறிகுறிகள் என்ன?
ரத்த அழுத்தம், உடல் எடையை பரிசோதியுங்கள்
இதய நோய்க்கான காரணம் என்ன?
இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோம், அந்த அளவுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதால் அதன் இடைவெளி மிகவும் குறுகலாகிவிடுகிறது. இவ்வாறு படியும் கொழுப்புகள் ‘பிளேக்ஸ்‘ என அழைக்கப்படுகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது.
அதிக ரத்த அழுத்தத்துக்கும், இதய நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?
ரத்தக் குழாய் வழியாக ரத்தம் செல்லும் போது, அதன் பக்கவாட்டு சுவர்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதுதான் ரத்த அழுத்தமாக அளவிடப்படுகிறது. சிறிய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து இடைவெளி குறுகும்போது, ரத்தத்தை உடலின் பற்ற பாகங்களுக்கு ‘பம்ப்‘ செய்ய இதயம் சிரமம்படுகிறது. குறுகிய ரத்தக் குழாய் வழியாக ரத்தம் பாயும் போது அழுத்தம் அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் நிலையாக இருக்கும்போது, ரத்த குழாய் சுவர்கள் பலவீனமாகி இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஈஸ்ட்ரோஜன் காரணமாக, பெண்கள் இதய நோயிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனரா?
உடலில் நல்ல கொழுப்பை ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கிறது. இது பெண்களை பாதுகாக்கிறது. ஆனால், மாதவிடாய்க்குப் பின் பெண்களும், ஆண்களைப் போல் இதய பாதிப்புக்கு ஆளாகலாம். பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது ஈஸ்ட்ரோஜனால் ஏற்படும் நன்மையை கெடுத்து விடுகிறது.
புகைப்பிடிப்பதற்கும், இதய நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?
புகை பிடிப்பதால் ரத்த குழாயின் பாதை பாதிப்படைகிறது. அதில் கொழுப்பு படிவதையும், ரத்தம் உறைவதையும் அதிகரிக்கிறது. புகையிலையில் உள்ள நிகோடின் இதய துடிப்பை அதிகரித்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.
மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன?
மாரடைப்புக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளுதல் மிக முக்கியம். இதோ சில:
நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் (எரிச்சல், அழுத்தம்)
கழுத்து, தாடை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் அசௌகரியம்.
மூச்சுத் திணறல்
வாந்தி
வியர்த்தல்
உடல் குளிர்ச்சியடைதல்
இதில் எந்த அறிகுறியை நீங்கள் உணர்ந்தாலும், அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இதய நோய் பாதிப்பை குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சியை அதிகரித்தல், சரியான உடல் எடையை பராமரித்தல், புகைப்பிடிப்பதை கைவிடுதல், டென்ஷன் ஆவதை குறைத்தல் போன்றவை மூலம் இதய பாதிப்பை குறைக்கலாம். ரத்த அழுத்தம், கொழுப் பின் அளவு ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்து அதன் அளவு சரியாக உள்ளதா என கணக்கிட வேண்டும். ரத்த அழுத்தத்தை 6 மாதத்துக்கு ஒரு முறையும், கொழுப்பின் அளவை ஆண்டுக்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது.
சர்க்கரை நோயும், இதய நோய்க்கு முக்கிய காரணம் என்பதால், அதன் அளவையும் அடிக்கடி சோதனை செய்து தெரிந்து கொள்வது அவசியம். உடல் எடையையும் சரியான அளவில் உள்ளதா என்பதை அடிக்கடி சோதிக்க வேண்டும். கூடுதல் எடை, இதயத்தின் வேலையை அதிகரித்து ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தினந்தோறும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இதயநோயின் பல்வேறு வகைகள்
இதய செயல் இழப்பு என்றால் என்ன?
உடலின் மற்ற பாகங்களுக்கு போதிய ரத்தத்தை, போதிய அழுத்தத்துடன் இதயம் சரியாக அனுப்பவில்லை என்றால் அதுதான் இதய செயல் இழப்பு. இதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை பெற்று இதய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
அரித்மியா என்றால் என்ன?
சீரற்ற இதயதுடிப்பு அரித்மியா என அழைக்கப்படுகிறது. மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ அல்லது சீரற்ற முறையில் இதயம் துடிக்கும். இதயம் வேகமாக துடித்தாலோ, மயக்கம் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் இதயநோய் நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
சிஏடி(கரோனரி ஆர்டெரி நோய்) என்றால் என்ன?
இது பொதுவாக ஏற்படும் இதயநோய். ரத்த குழாயில் கொழுப்பு பொருட்கள் படிவதால் அது குறுகி அல்லது தடிமனாகி இதயத்துக்கு போதிய ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லாது. அப்போது நெஞ்சு வலி ஏற்படும். கொழுப்பு படிமங்கள் சேதமடைந்து கிழியும் போது ரத்தம் உறையும். அது ரத்தக் குழாயை முற்றிலும் அடைத்து விடும். அப்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
பைபாஸ் சர்ஜரி என்றால் என்ன?
உடலின் மற்ற பகுதியில்,(வழக்கமாக கால் பகுதியில்) இருந்து நல்ல நிலையில் உள்ள ரத்தக் குழாயை வெட்டி எடுத்து அதை இதயத்தின் அடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு கீழே இணைத்து ரத்தத்தை மாற்றுப் பாதையில் செல்ல வைப்பதுதான் பைபாஸ் சர்ஜரி.- பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் இதயவியல் நிபுணர் டாக்டர் கே.சந்திரசேகரன்.
-அஷ்ரப்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home