26 June 2014

கதையல்ல..நிஜம்.



கதை 1 :
அமெரிக்க நிலப்பரப்பிற்குச் சென்ற ஆங்கிலேயர்கள் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தினர். துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் தாக்கிய ஆங்கிலேயர்களை எதிர்த்து வெறும் வில் அம்பு, ஈட்டிகள் கொண்டு செவ்விந்தியர்கள் காட்டிய வீரம் ஆங்கிலேயர்களை அதிர வைத்தது! மண்ணையும், கலாச்சாரத்தை இழக்க விரும்பாத எண்ணம்தான் அந்த வீரம். ஆனால் நாளடைவில் ஒவ்வொரு பகுதியாக இழந்து வந்த செவ்விந்தியர்கள் ஒரு கட்டத்தில் முற்றிலும் அனைத்தையும் இழக்கத் துவங்கினர். இருப்பினும் ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் காட்டிய வீரத்தின் மீதான பிரம்மிப்பும், பயமும் போகவில்லை. மீண்டும் அவர்கள் ஒருங்கிணைந்து நம்மை திருப்பி விரட்டிவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
அப்போதுதான் ஆங்கிலேயர்களுக்கு ஒரு அருமையான யோசனை தோன்றியது. செவ்விந்தியர்களின் இளம் வயது பிள்ளைகளை அவர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து தனி பகுதி ஒன்றை ஏற்படுத்தி அவர்களை அங்கு தங்க வைத்து ஆங்கில மொழியும், ஆங்கிலேயர்கள் உணவு, உடை கலாச்சாரமும் பயிற்றுவித்தனர். இப்படியாக பல ஆண்டுகள் பிரித்து வைக்கப்பட்ட செவ்விந்திய இளம் தலைமுறை தங்கள் தாய்மொழியை முற்றிலும் மறந்து ஆங்கிலம் மட்டும் பேசி ஆங்கில உணவுகளை உண்டு ஆங்கிலேய உடை அணிந்து வாழத் துவங்கிவிட்டது. தங்கள் மொழியை இழந்ததன் மூலம் கலாச்சாரத்தை இழந்தது. வாழ்வியலை இழந்தது. மண்ணை இழந்தது. இதன் காரணமாக வீரத்தை முற்றிலும் இழந்தது. இன்றுவரை ஆங்கிலேயர்கள் அங்கு சவுக்கியமாக எந்த எதிர்ப்பும் இன்றி ஆட்சி புரிகின்றனர்.
கதை 2 :

உலகின் பல நாடுகளில் பிரிந்து வாழ்ந்துகொண்டு இருந்த யூத இனம். பல நூற்றாண்டுகளாக அவர்கள் போய்ச் சேர்ந்த அந்தந்த நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் எந்த ஒரு நாடும் அவர்களை தன் மக்களாய் பார்க்கவில்லை. அன்னிய உணர்வுடனேயே இருந்தது. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் தாக்கப்படத் துவங்கினர். இதன் உச்சகட்டமாய் ஹிட்லர் அவர்களைத் தேடித் தேடி கொத்துகொத்தாய் கொலை செய்யத்துவங்கினார். இந்த சந்தர்ப்பத்தில்தான் தங்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்ற சிந்தனை அவர்கள் மனதில் வரத்துவங்கியது.
ஆனால் அது சாதாரண வேலை அல்ல. காரணம் ஒவ்வொரு நாட்டிலும் வசித்து வந்த யூதர்கள் தங்கள் மொழியை அறவே மறந்து அந்தந்த நாட்டு மொழிபேசி அந்தப் பகுதியின் பிரஜையாகவே தங்களை நினைத்து வந்தனர். அந்த சிந்தனையை மாற்றி எங்கிருந்தாலும் தாங்கள் யூதர்கள் என்று நினைப்பை அவர்களுக்கு வர வைக்க வேண்டும் என்றால் வழக்கொழிந்து சில ஆயிரம் பேர் மட்டும் அறிந்ததாக இருக்கும் தங்கள் தாய்மொழியான "ஹீப்ரூ" மொழிக்கு உயிர் குடுத்தால் மட்டுமே அந்த உணர்வை கொண்டு வர முடியும் என்ற உண்மை புரிந்தது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள யூதர்களின் இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலர் அருகில் உள்ள நாடுகளில் இருந்த யூதமொழி தெரிந்த தங்களது மூத்தவர்களிடம் அம்மொழியைக் கற்று தங்கள் பகுதிக்கு வந்து அங்கிருந்த யூதர்களுக்குத் தங்கள் தாய்மொழியைக் கற்பித்தனர். ஓரிரு ஆண்டுகளில் உலகின் அனைத்து யூதர்களும் ஹீப்ரூவை அறிந்ததும் தங்களுக்கான மொழியை மீட்டதுபோல தங்களுக்கான பூமியையும் உருவாக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் என்ற ஒரு தேசத்தை தங்களுக்கென உருவாக்க முடிந்தது!
நீதி : மொழியை, கலாச்சாரத்தைத் தொலைத்த செவ்விந்தியர்கள் மண்ணை இழந்தனர். மொழியை,கலாச்சாரத்தைப் பெற்ற யூதர்தள் மண்ணைப் பெற்றனர்!!
# கதையல்ல..நிஜம்.


அஷ்ரப்
கருத்தே.....
இஸ்ரேலை அவர்கள் பெற்ற முறையில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. ஆனால் அதை அடைய அவர்களுக்கு காரணமாக இருந்தது மொழிமீட்பு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.


-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home