14 October 2014

மருத்துவம் - இதயம்


மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே இதயத்தில் சிறு சிறு அடைப்புகள் இருக்குமாமே... அவை ஆபத்தில்லாதவையா? இதய நோய் வருமா, வராதா, அடைப்புகளால் ஆபத்து உண்டா என்பதை எப்படி, எப்போது தெரிந்து கொள்வது? பெண்களுக்கும் இது பொருந்துமா?  

இதய நோய் நிபுணர் மகுடமுடி

மாதவிடாய் நிற்கும் வரை ஹார்மோன்களின் சுரப்பு காரணமாக பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புகள் குறைவு. மெனோபாஸ் வந்துவிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கு சமமாக இதய நோய்கள் தாக்கும். மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழலில் ஆண்கள்-பெண்கள் இருவருக்குமே இதயம் தொடர்பான நோய்கள் சம அளவு தாக்குகின்றன. வழக்கமாக நான்கைந்து கிலோ மீட்டர் நடக்கும் ஒருவருக்கு திடீரென ஒரு கிலோ மீட்டர் நடந்தாலே மூச்சு வாங்கினாலோ, பல மாடிகள் ஏறி இறங்கியவருக்கு சில படிகள் ஏறினாலே மூச்சிறைத்தாலோ எச்சரிக்கை அடைய வேண்டும்.

மார்பக பகுதியில் மெல்லிய வலி, திடீர் அசதி ஏற்பட்டால் உஷாராக வேண்டும். நீரிழிவு பாதித்தவர்களுக்கு வலி தெரியாது என்பதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் சைலன்ட்டாக தாக்கும் அபாயம் அதிகம். 60 வயதை கடந்தவர்களும் மேலே சொன்ன விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்பை எனப்படும் வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளன. இடது பக்க மார்பில், தாடையில், தோள்பட்டையில் வலி இருந்தாலும் அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மருத்துவரை சந்தித்து இ.சி.ஜி. சோதனை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, இ.சி.ஜி. சோதனை இன்று பிரச்னை இல்லை என காட்டினாலும் அடுத்தடுத்த நாட்களில் பிரச்னை இருப்பதைக் காட்டும். இந்த சோதனை இதயம் ஓய்வில் இருக்கும்போது செய்யப்படுவதே காரணம். எனவே, சந்தேகம் இருப்பவர்கள் ட்ரெட்மில் சோதனையும் செய்து பார்க்கலாம். அதில் இதயத்துக்கு அதிக வேலை கொடுத்து சோதிக்கப்படும். இதில் பிரச்னை இருப்பது தெரிந்தால் அடுத்து சி.டி. ஆஞ்சியோகிராம் செய்து பார்க்கலாம்.

நீரிழிவு, ஹைபர்டென்ஷன், மன அழுத்தம் என எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் உடற்பயிற்சிகளையும் பின்பற்றி சரியான எடையுடன் இருப்பவர்கள் இதய நோய் பற்றி கவலைப்பட தேவையில்லை. மற்றவர்கள் ஏரியேட்டட் குளிர்பானங்கள், அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிகரெட், மது போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் இதயத்தை பாதுகாக்கலாம்.

-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home