9 July 2014

நம்பினால் நம்புங்கள்!

* சீனாவிலுள்ள  Qingdao  - Haiwan   சாலைப் பாலத்தின் நீளம் 42.4 கிலோமீட்டர். 2007ல் தொடங்கி, 2011ல் கட்டி முடிக்கப்பட்டது இப்பாலம்.

* போலி மதுபானங்களைக் கண்டறியவும் லேசர் தொழில்நுட்பம் உதவும்.

* 2050ம் ஆண்டுக்குள், நம் மூளையிலுள்ள அத்தனை தகவல்களையும் ஒரு கணிப்பொறிக்குள் ‘பேக் அப்’ செய்துவிட முடியும் என எதிர்காலவியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

* 14ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட பூபோனிக் பிளேக் நோய் தாக்குதலில் 2.5 கோடி மக்கள் பலியானார்கள்.

* 2009ல் வட கொரியாவில் நிலத்தடி அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

* பாதிக்கப்படும் பரப்பளவு அடிப்படையில், நெதர்லாந்திலேயே மிக அதிக சூறாவளிகள் ஏற்படுகின்றன. அங்கு ஒவ்வொரு 1,991 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி. சூறைப்புயல்களுக்குப் புகழ்பெற்ற அமெரிக்காவிலோ, இது 8,187 ச.கி.மீ-க்கு ஒன்றாக இருக்கிறது.

நம் காதிலுள்ள மெழுகும், தாடையின் அசைவும் இணைந்து தூசுகள், இறந்த செல்கள் போன்றவற்றை வெளித்தள்ளி விடுகின்றன.

* பூமராங் நெபுலா - பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம் இதுதான். பூமியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிற இதன் வெப்பநிலை மைனஸ் 272 டிகிரி செல்சியஸ். இது ஹைட்ரஜனையே உறைய வைக்கிற அளவு குளிர்!

* ஒரு விண்கல்லில், சூரிய மண்டலத்தின் வயதை விடவும் பழமையான வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகின்றன.

-அஷ்ரப்

முத்தான மூன்று விஷயங்கள்

வங்கிகளின் ஸ்டேட்டஸ்!

இந்தியாவில் சில வங்கிகளை நாம் ஆஹா.... ஓஹோ என்று தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம். ஆனால் உலக அளவில் நாம் கொண்டாடும் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை அறிந்தால் தலை சுற்றுகிறது. வெல்ஸ் ஃபார்கோ, சேஸ், ஹெச்.எஸ்.பி.சி, பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி, சான்டன்டர் போன்ற வங்கிகள்தான் உலக அளவில் முன்னிலையில் உள்ள வங்கிகளாக கொண்டாடப்படுகின்றன. உலகின் மிக அதிக மதிப்புள்ள வங்கிகளுக்கான டாப் 10 பட்டியலில் இந்திய வங்கிகள் எதுவுமில்லை.

இந்த லிஸ்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி 38வது இடத்தில் இருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி 99வது இடத்தை வகிக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி வங்கி 126வது இடத்திலும், ஆக்சிஸ் வங்கி 175வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி 189வது இடத்தில் இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா 206வது இடத்தில் உள்ளது. சிறிய வங்கிகளை இணைத்து மிகப்பெரிய பிராண்ட் ஆக்குவதன் மூலம் சர்வதேசப் பட்டியலில் இந்திய வங்கிகள் இடம்பெறுவது சாத்தியமே!

இந்தியாவில் எத்தனை வர்த்தக வங்கிகள் இருக்கின்றன தெரியுமா? 26 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், 20 தனியார் வங்கிகளும், 43 வெளிநாட்டு வங்கிகளும், பிராந்திய ஊரக வங்கிகள் 64ம் ஊரக வங்கிகள் 4ம் இருக்கின்றன. கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1,606ம், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் 93,551ம் உள்ளன.

இது புதுசு

ஆக்ஸ்போர்ட் அகராதியில் அவ்வப்போது, புதிய வார்த்தைகளைச் சேர்ப்பது வழக்கம். இந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வார்த்தைகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது, ஆக்ஸ்போர்ட் அகராதி. இவற்றில் பல நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை:
MOOC   - இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் இலவச கோர்ஸ்களை இப்படி அழைக்கிறார்கள்.
PEAR CIDER  - பேரிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் மது பான வகை.
SELFIE  - கேமரா செல்போனில் தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் போட்டோக்கள்.
STREET FOOD - தெருவோரங்களில் விற்கப்படும் உணவு வகைகள்.
BABY  MOON - குழந்தை பிறப்புக்கு முன்பாக பெற்றோர் எடுக்கும் விடுமுறை.
BYOD (Bring your own device)   - உங்களுடைய உபகரணத்தைக் கொண்டு வரவும்.
CLICK AND COLLECT- கடைகளில் தேவையான பொருட்களை முதலில் டிக் செய்து கொடுத்து, பிறகு பொருட்களைப் பெறுதல்.
FOOD BABY - வீங்கிய குடல்.
HACKERSPACE  - கணினி தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பலரும் ஒருங்கிணையும் இடம்.

டாய்லெட் பேப்பர் தங்கத்தில்...

பணத்தை தண்ணியாக செலவு செய்யும் குணம் கொண்ட பணக்காரர்களுக்காக, 22 காரட் தங்கத்தினால் ஆன விலையுயர்ந்த டாய்லெட் பேப்பரை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளது ஆஸ்திரேலிய நிறுவனம். ‘டாய்லெட் பேப்பர்மேன்’ என்ற அந்த நிறுவனம், இயற்கைக்கு மாறான இந்தப் புதிய தயாரிப்பினை 22 காரட் தங்கத்தினால் செய்துள்ளது. இது 100 சதவீதம் பயன்படுத்தக்கூடியது என்றும், பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் விளக்கம் வேறு அளித்துள்ளது.

இதுவரை ஒரே ஒரு தங்க பேப்பர் ரோல் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை 13 லட்சத்து 76 ஆயிரத்து 900 மில்லியன் டாலர்.  ஆர்டர் செய்தால், தங்க டாய்லெட் பேப்பர் ரோலுடன், இலவசமாக ஒரு ஷாம்பெய்ன் மதுபாட்டிலையும் சேர்த்து டோர் டெலிவரி செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. துபாயில் உள்ள நிறுவனம், வெஸ்டர்ன் டாய்லெட்டுகளுக்கான இருக்கையை முழுக்க முழுக்க தங்கத்தினால் தயாரித்திருப்பதைப் பார்த்து, தங்க டாய்லெட் பேப்பர் ரோல் தயாரிக்கும் எண்ணம் உருவானதாக ‘டாய்லெட் பேப்பர்மேன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

-அஷ்ரப்

திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ்

திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், சாலை விபத்தில் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணை
தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.

விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள் ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள் அந்த வழியாக வந்த திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், அவர்கள் உடனே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் வேடிக்கை பார்க்கிறீர்கள் இந்த டிராஃபிக்ல் ஆம்புலன்ஸ் எப்பொழுது வருவது என்று தானே அந்த மயங்கி ரத்தம் சொட்டியநிலையில் இருந்த பெண்ணை. தன் பதவியையும் பொருட்படுத்தாமல் தூக்கி தனது காரிலேயே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார் ..

சின்ன சின்ன பதவியில் இருப்பவர்கள் கூட பந்தா காட்டிக் கொண்டு செய்ய யோசிப்பார்கள் ... ஆனால் ஒர் உயர் அதிகாரி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் செய்த காரியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது ....

இதில் இருந்து ஒன்று புரிந்தது ...
மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை ...
நாம்தான் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கிறோம் ...
எப்பவுமே போலிசை திட்டி தீர்க்கும் நாம்....
இதற்க்காகவாது பாராட்டலாமே !
நாமும் கொஞ்சம் திருந்தலாமே
அஷ்ரப்

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்...!

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மைச் சம்பவம்...!
இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில் விழுந்துவிட்டன. அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது.
சத்தம் கேட்டுக் கிணற்றை எட்டிப் பார்த்த முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி. தான் ஆசையாக வளர்த்த நாய் குட்டிகள் கிணற்றில் விழுந்து கிடக்கின்றன அதன் அருகில் பெரிய ராஜநாகம் படம் எடுத்து ஆடிக் கொண்டு இருந்தது.
கிணற்றில் ஒரு பகுதி கரையும் மறு பகுதி தண்ணீரும் இருந்தது.ராஜநாகம் நாய் குட்டிகளை ஒன்றும் செய்யவில்லை,நாய் குட்டிகள் தண்ணீரில் இறங்காதவாறு காவல் காத்து கொண்டு இருந்தது.
ராஜநாகம் மற்றும் நாய் குட்டிகள் 48 மணி நேரம் கிணற்றில் ஒன்றாக இருந்தன.இந்த 48 மணி நேரமும் நாய் குட்டிகள் தண்ணீரில் விழாதவாறு ராஜநாகம் அமைதியாக காவல் காத்து கொண்டு இருந்தது.
பிறகு வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கிய போது ராஜநாகம் மறு கரைக்கு சென்றது.நாய் குட்டிகளை காப்பாற்றிய வனத்துறையினர் அந்த ராஜநாகத்தையும் காப்பாற்றி காட்டில் விட்டனர்.
”அதிகம் விஷம் உடைய ஒரு ராஜநாகம் இரண்டு சிறிய உயிரனத்துக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பு கொடுக்கும் இந்த பூமியில் தான், சின்னஞ்சிறு குழந்தைகளையும் சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்யும் மனித மிருகங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறது”
இதுபோன்ற உயிர்களிடத்தில் இருந்தாவது நல்ல பண்புகளை கற்று கொள்ளுங்கள் மனித மிருகங்களே...!
-அஷ்ரப்

2 July 2014

லெகிங்ஸ்... சரியா... தவறா?

ஒரு காலத்தில் ஐந்தரை மீட்டர் புடவை கட்டிக்கொண்டு வளையவந்த பெண்கள், 'இதுதான் சூப்பர்' என்று ஒரு கட்டத்தில் சுடிதாருக்கு மாறினார்கள். காலங்கள் உருண்டோட... 'ஆஹா... என்ன ஒரு அற்புதமான டிரெஸ்!' என்கிறபடி இப்போது 'லெகிங்ஸ்' எனும் இறுக்கமான உடையின் மீது காதல்கொள்ள ஆரம்பித்துள்ளனர். டீன் ஏஜ் முதல்... நாற்பது வயதைக் கடந்தவர்கள் வரையிலும்கூட லெகிங்ஸ் அணிவது ஃபேஷனாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த லெகிங்ஸ் உடைக்கு எதிராக அதிருப்தி குரல்களும் ஆங்காங்கே கேட்கின்றன... நைட்டிக்கு எதிராக ஒலிப்பது போலவே!
இங்கே... 'லெகிங்ஸ் சரியா, தவறா' என்று விவாதிக்கிறார்கள் நம் பெண்கள் சிலர்.
மனீஷா (கொரியோகிராஃபர்): நாம பார்க்கிற வேலைக்கு ஏத்த மாதிரி டிரெஸ் போடுறதுல என்ன தப்பு? யோகா, விளையாட்டு, தியானம் போன்றவைகளுக்கு இந்த லெகிங்ஸ் ரொம்பத் தேவையா இருக்கு. அதனால, நான் இதுக்கு முதல் ஓட்டு போடுறேன்.
குணால், (பிசினஸ்மேன்): பெண்களுக்கான ஆடைகளிலேயே கவர்ச்சியானதுனா, அது புடவைதான். லெகிங்ஸ், வசதியான உடை என்பதை மறுக்க முடியாது. இப்போ லெகிங்ஸ் மட்டுமில்ல... ஒரு காலத்துல பெண்கள் சுடிதாருக்கு மாறினப்போவும் இப்படித்தான் 'குய்யோ முறையோ'னு கத்தின கூட்டம் இருந்துச்சு. இப்போ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட உடை ஆகலையா? அதுமாதிரி லெகிங்ஸும் இனிவரும் காலங்கள்ல இயல்பான உடையாகிடும்.
சபீதா (நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர்): புடவையைக் கவர்ச்சி உடைனு சொல்ற உங்களுக்கு, உடல் பாகங்களை அப்பட்டமா, ஆபாசமா காட்டக்கூடியது லெகிங்ஸ்னு தெரியலையா? வேகமா காற்றடிக்கும்போது டாப்ஸ் பறக்க ஆரம்பிச்சா... லெகிங்ஸின் கதி என்ன தெரியுமா?
ராதா (பள்ளி ஆசிரியை): ஒரு சுடிதார் செட் எடுக்க 400, 500 ரூபாயாகும். அதுக்கு தையற்கூலி தனி. ஆனா... லெகிங்ஸ், டாப்ஸ் சீப்பா முடிஞ்சுடும். மிக்ஸ் அண்ட் மேட்சாவும் போட்டுக்கலாம். அப்புறம்... தப்பா பார்ப்பாங்கனு சொல்றீங்க. அதுமாதிரியான ஆசாமிங்க... நீங்க போர்வையைப் போத்திட்டுப் போனாலும் உத்துப் பார்க்கத்தான் செய்வாங்க.
ஷமீம் (கல்லூரி மாணவி): இவ்வளவு சர்ச்சைகள் இருக்கிற உடைதான் வேணும்னு பிடிவாதம் பிடிக்காம, பட்டியாலா, காட்டன் பேன்ட்னு அடுத்த சாய்ஸ் எடுக்கலாமே..?! அதிலும் லெகிங்ஸ் நம்ம உடல்வாகுக்கு ஏற்ற உடையா இருக்காதுங்கும்போது, அதை மத்தவங்க வேண்டாம்னு சொல்றதுக்கு முன்ன நாமே ரிஜெக்ட் பண்ணலாமே?
லக்ஷ்மி சௌந்தர்யா (கல்லூரி மாணவி): நம்ம வசதிக்காகதான் நாம டிரெஸ் பண்ணணும். மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிச்சா, எந்த டிரெஸையும் முழுமனசோட போட முடியாது. என்னைப் பொறுத்தவரை, லெகிங்ஸ் நல்ல உடைதான். சுடிதார், சேலைகளில் கிடைக்காத கலர்கள்கூட இதில் கிடைக்குது. ஒரு லெகிங்ஸ் எடுத்துட்டு, வேற வேற நிறங்கள்ல டாப்ஸ் மேட்ச் செய்து போட்டுக்கலாம். ஒரு ஷால் அல்லது ஸ்டோல் நீட் லுக் தரும். என்னைப் பொறுத்தவரை, ஜீன்ஸைவிட இது ஃபிட் லுக் தருது. லெகிங்ஸ் போடுறதுக்கு யாரோட அனுமதியும் வேண்டாம், ஃபிட்டான உடலும், தன்னம்பிக்கையான ஆட்டிட்யூடும் இருந்தா போதும்.
மோனா (பேராசிரியை, டொரன்டோ யுனிவர்சிட்டி, கனடா): முதன் முதல்ல ஐரோப்பாவுலதான் இந்த லெகிங்ஸ்ங்கற டிரெஸ்ஸைக் கொண்டு வந்தாங்க. போர் வீரர்கள் பலரும் குளிரிலிருந்து தற்காத்துக்க, யூனிஃபார்முக்கு உள்ள இதைப் போட ஆரம்பிச்சாங்க. பெண்கள், ஆண்கள்னு ரெண்டு பாலினருமே இதை பயன்படுத்திட்டு இருந்தாங்க. அதுக்கு பிறகுதான் மற்ற குளிர்ப்பிரதேச நாடுகளிலும் இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. பொதுமக்களும் போட ஆரம்பிச்சாங்க.
ஆடைங்கிறது ஒவ்வொரு நாட்டோட சீதோஷ்ண நிலைக்கு தகுந்தாற்போல மாறக்கூடியது. சென்னையில ஒரு ரெஸ்டாரன்ட்ல, விருந்தினர்களை வரவேற்று உள்ளே அனுப்பும் ஒரு பணியாளர், உடம்புல முகம் தவிர மற்ற இடங்கள் துளியும் தெரியாத அளவுக்கு இறுக்கமா பேன்ட், ஷர்ட் - கோட் மாட்டி, வியர்வை வழியவழிய நின்னுட்டு இருந்தாரு. என்ன சொல்றதுனு தெரியல.
விளம்பிக்கா (கல்லூரி மாணவி): மேலைநாடுகளில் உடுத்துற மாதிரி நாமும் டிப் டாப்பா கோட், ஷூ, சாக்ஸ்னு போடலாமேனு யோசிக்கிறது தப்பு இல்ல. இந்த இடத்துக்கு, இந்த ஆடையில் போனா நல்லா இருக்கும்னு தோணினா, யோசிக்க வேண்டாம். மாலுக்குப் போகும்போது ஷார்ட் குர்தி, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குப் போகும்போது லாங் குர்தா, போற இடத்துக்குத் தோதான டாப்ஸ் போட்டுக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும், காட்டன் லெகிங்ஸ் நல்ல சாய்ஸ்!

-வே.கிருஷ்ணவேணி,

-அஷ்ரப்

1 July 2014

ஆர்குட்-டுக்கு அஞ்சலி: கூகுள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆர்குட்டை நினைவிருக்கிறதா? இணைய உலகம் கிட்டத்தட்ட மறந்துவிட்ட இந்த சமூக வலைப்பின்னல் சேவையை இனி நிரந்தரமாக மறந்துவிடும் நிலை ஏற்படப்போகிறது. ஆம், ஆர்குட் சேவையை வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது.

ஆர்குட் பயனாளிகளுக்கு இது நிச்சயம் அதிர்ச்சியான செய்திதான். ஆனால் முற்றிலும் எதிர்பாராத செய்தி அல்ல. ஆர்குட்டுக்கு பிறகு கூகுள், கூகுள் பிளஸ் சமூக வலைப்பின்னல் சேவையை அறிமுகம் செய்து, அதிலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில் ஆர்குட்டின் நாட்கள் எண்ணப்பட்டு வந்ததாகவே வைத்துக்கொள்ளலாம்.

கூகுளுக்கே கூட இது கஷ்டமான முடிவாகத்தான் இருக்கும். காரணம், கூகுள் சமூக வலைப்பின்னல் சேவையில் முதலில் அடியெடுத்து வைத்தது ஆர்குட் மூலம்தான். 2004-ல் ஆர்குட் அறிமுகமானது. அதாவது, ஃஃபேஸ்புக் அறிமுகமான அதே ஆண்டு!

கூகுளில் ஒரு சலுகை உண்டு. ஊழியர்கள் தங்களது 20 சதவீத நேரத்தை விருப்பம்போல தங்கள் சொந்த முயற்சிகளில் செலவிடுவதற்கான அனுமதிதான் அது. இந்த சலுகையின் பயனாக ஊழியர் ஒருவர் உருவாக்கிய சேவையைதான் கூகுள் ஸ்வகரித்துக் கொண்டது. ஊழியரின் பெயரையே (Orkut Büyükkökten) இந்த சேவைக்கும் வைத்தது. இப்படிதான் ஆர்குட் அறிமுகமானது.

சமூக வலை முழுவதும் ஃபேஸ்புக் பக்கம் சாய்ந்துவிட்டாலும் பிரேசிலிலும் இந்தியாவிலும் ஆர்குட் கொடி கட்டிப்பறந்த காலம் உண்டு. குறிப்பாக, பிரேசிலில் இது நம்பர் ஒன்னாக திகழந்தது. ஃபேஸ்புக் போன்றது என்றாலும், ஆர்குட்டில் உருவாக்கப்பட்ட குழுக்கள் துடிப்பான இணைய சமூகங்களாக இருந்தன. இந்தக் குழுக்களில் சில துவேஷம் பரப்ப பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் இருந்தாலும் இவை தீவிர நட்புறவை கொண்டிருந்தன.

ஆர்குட்டில் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களின் நம்பகத்தன்மை போன்றவற்றை மதிப்பிடும் வசதி இருந்தது. அதுமட்டும் அல்ல, ஆர்குட்டில் ஒருவருடைய அறிமுக பக்கத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இப்படி பல தனித்தன்மைகள் கொண்டிருந்தாலும் ஆர்குட் ஃபேஸ்புக் அலையில் பின்னுக்குத்தள்ளப்பட்டுக் கொண்டே வந்தது. பின்னர் ஜி-பிளசும் சேர்ந்து கொண்டது.

இப்போது பத்தாண்டுகளுக்கு பிறகு ஆர்குட்டை நிறுத்திக்கொள்ளப் போவதாக கூகுள் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதியிடன் இந்த சேவையை மூடிவிடுவோன் என்று கூகுள் தனது ஆர்குட் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பி குறிப்பிட்டுள்ளது.

அதற்கு முன்னர் இல்லாத வகையில் ஆர்குட் குழுக்கள் உரையாடலையும் தொடர்புகளையும் ஏற்படுத்தி தந்ததாக குறிப்பிட்டுள்ள கூகுள், யூடியூப், பிளாகர் மற்றும் ஜி-பிளஸ் மூலம் உலகம் முழுவதும் அவை சார்ந்த சமூகங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் ஆர்குட் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதால் அதற்கு விடை கொடுக்க தீர்மானித்து விட்டதாக தெரிவித்துள்ளது.

ஆர்குட் பயனாளிகள் செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் தகவல்களை கூகுள் டேக்கவுட் மாற்றிக்கொள்ளலாம். இனி புதிய உறுப்பினர்களும் சேர முடியாது. ஆனால், ஆர்குட் சமூகங்களை மட்டும் ஆவணமாக பாதுகாக்கப் கூகுள் உறுதி அளித்துள்ளது. இதில் இடம்பெற விரும்பாத ஆர்குட் உறுப்பினர்கள் இதில் இருந்து விலகி கொள்ளும் வசதியையும் அறிவித்துள்ளது.

ஆக, ஜியோசிட்டிஸ் துவங்கி இணைய உலகம் விடை கொடுத்த எத்தனையோ சேவைகளின் பட்டியலில் ஆர்குட்டும் சேரப்போகிறது. இணைய வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்களுக்கு கொஞ்சம் வறுத்தமான செய்திதான்.

-அஷ்ரப்