27 August 2014

உழைக்க கற்றுக் கொடுப்பதே பேருதவி - மாத்தி யோசி

சுயநலம் பார்ப்பவர்களுக்கு மத்தியில் பொதுநல சிந்தனைகளோடு, வலம் வரும் அரவிந்தன் ஒரு பைக் மெக்கானிக். தனது சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை தனியாக பிரித்து வைத்து, அதன் மூலம் ஆதரவற்ற முதியோர், படிக்க வசதியில்லாத குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்கு உதவுவது அவரது வழக்கம்.

இப்படிப்பட்ட அரவிந்தனை ஒரு நாள் சந்திக்க வந்தான், பிளஸ்2 படித்து விட்டு உயர்படிப்புக்கு செல்ல காத்திருந்த மாணவன் கபிலன். வயல்வெளியில் வேலை செய்து தாய் மாரியம்மாள் கொண்டு வரும் சொற்ப வருமானம் மட்டுமே கபிலனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம்.

‘கல் உடைக்கும் வேலை செய்து வந்த, கபிலனின் தந்தை வேலப்பனுக்கோ, மகனை இன்ஜினியர் ஆக்க வேண்டும் என்பது கனவு. இதற்காக காலம் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்தார் வேலப்பன். இப்படிப்பட்ட நிலையில், ஒரு நாள் குவாரியில் நடந்த வெடி விபத்தில் வேலப்பன் சிக்கினார். சிகிச்சை என்ற பெயரில் அரசு மருத்துவமனையில் சில நாட்கள் மரணத்தோடு போராட்டம் நடத்தினார். இறுதியில் மரணத்திற்கே வெற்றி கிடைத்தது.

இறப்பதற்கு சில நாட்கள் முன்பு, மகனை அழைத்து நெற்றியில் முத்தமிட்டு கண்ணீர் வடித்த வேலப்பன், எனது நாட்கள் எண்ணப்படுகிறது. நான் இறந்து விடுவேன். ஆனால் நீ இன்ஜினியராக வேண்டும் என்ற எனது கனவு இறந்துவிடக்கூடாது. இதற்காக நீ முயற்சி செய். கண்டிப்பாக உனக்கு நல்லவர்கள் உதவி செய்வார்கள் என்று வேலப்பன் கூறிய கடைசி வார்த்தைகள் தான் கபிலனின் வேதவாக்கு.

கபிலனின் நிலைகேட்டு வருந்திய அரவிந்தன், தனது கையில் இருந்த பணம் முழுவதையும் அவனது கையில் திணித்தான். தனது குடும்பத்தை பற்றிய கவலை அவருக்கு இல்லை. ஆனால் கபிலன், ‘‘இன்ஜினியரிங் விண்ணப்பம் வாங்க இப்போது எனக்கு தேவை இந்த பணம் மட்டும் தான். அதுமட்டும் போதும்’’ என்று என்று கூறி, சில நூறு ரூபாயை எடுத்துக் கொண்டான்.

‘‘என் தந்தை இருந்திருந்தால் உழைத்து என்னை படிக்க வைத்திருப்பார். ஆனால் இப்போது நானே, உழைத்து படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனவே இப்போது எனக்கு நீங்கள் செய்வது உதவி. கல்லூரியில் சேர அழைப்பு வரும் வரை உங்கள் பட்டறையில் எனக்கும் உழைக்க கற்றுக் கொடுங்கள்.
அதுதான் நீங்கள் எனக்கு செய்யும் வேண்டிய பேருதவி’’ என்றான் கபிலன். அப்போது அரவிந்தனின் கரங்கள், அவருக்கு தெரியாமலேயே கபிலனுக்கு அடித்தது ஒரு ராயல் சல்யூட்...

-அஷ்ரப்

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

* அடுத்து தொலைத்துவிட்ட விவரத்தை தினசரி பத்திரிகையில் அறிவிப்பு விளம்பரம் செய்ய வேண்டும்.

* இதற்கு குறைந்தது ரூ.500 வரை செலவழிக்க நேரிடும்.

* பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும்.

* இதனை தாசில்தாரிடம் கொடுத்து அவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
* சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.

* பின்னர் பத்திரிகை விளம்பரத்தை வெட்டி எடுத்து தாசில்தார் சான்றிதழ், வங்கி வரைவோலை முதலியவற்றை கோரிக்கை மனு ஒன்று எழுதி அதனுடன் இணைக்க வேண்டும்.

* மனுதாரர் எந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்தாரோ அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

* அதனை மாவட்ட அதிகாரி பரிசீலனை செய்து மாநில அரசு தேர்வு துறை இயக்குநருக்கு மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க சிபாரிசு செய்வார்.

* சான்றிதழ் தன்மைக்கேற்ப (படித்த ஆண்டின்) 3 அல்லது 6 மாதங்களுக்குள் சான்றிதழ் நகல் பள்ளி கல்வி தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

* இதனை இறுதியாக எந்த பள்ளியில் படித்து முடித்தோமோ, அந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற முடியும்.


-அஷ்ரப்

இஸ்லாத்தில் பெண்களின் நிலைபாடு பற்றி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

”இறைநம்பிக்கையாளர்களே ! பெண்களை (அவர்களின் மனம் பொருந்திவராத நிலையில்) நீங்கள் பலவந்தப் படுத்தி அனந்தரமாக்கிக் கொள்வது உங்களுக்குக் கூடாது.” {அல்குர்ஆன் 4:19}

ஆண் அல்லது பெண் ஈமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதம் இழக்க மாட்டார்கள்.
{அல்குர்ஆன்.4:124}

மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போலவே முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமையுண்டு.
{அல்குர்ஆன்.2:228}

''தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளை பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக ! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.......அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டும் என்பதற்க்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.''
{அல்குர்ஆன்.24:31}

''சிலரை மற்றும் சிலரை விட இறைவன் மேன்மை படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு''
{அல்குர்ஆன்.4:32}

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. {அல்குர்ஆன்.30:21}

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.{அல்குர்ஆன்.16:97}

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.{அல்குர்ஆன்.2:187}

-
அஷ்ரப்

தூக்கம் கண்களை தழுவவில்லையா?

நாட்டில் 20 சதவீதம் பேர் சரியாக தூக்கம் வராமல் தவிக்கின்றனர். மருத்து வமனைகளில் பல்வேறு சிகிச்சைகளுக்காக வருகின்றவர்களில் 50 சதவீதம் பேர் தூக்க குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்றன புள்ளி விபரங்கள். தூக்கமின்மை நீண்டு கொண்டே சென்றால் அது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சுகமான தூக்கம் மூளையின் இயல்பான செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். ஞாபகம், கவனம், சிந்தனை திறன் போன்றவை அதிகரிக்க வேண்டும் என்றால் ஒருவர் தடையின்றி தினசரி 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். தூக்கமின்மை ஏற்பட்டால் வெவ்வேறு விதமான பிரச்னைகள் உருவாக வழிவகுக்கும்.

படுக்கையில் கிடந்தாலும் தூக்கம் வராமல் தவித்தல், தூக்கத்தின் இடையே திடீரென்று தூக்கம் கெட்டு எழுதல், குறைந்த நேரம் மட்டுமே தூங்க முடிகின்ற நிலை, சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்தால் தொடர்ந்து பின்னர் தூங்க முடியாத அவஸ்தை போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் நீண்ட நேரம் தூங்கினாலும் எழும்பும்போது உடல் அசதி காணப்படும். சரியான தூக்கம் அமையாததே இதற்கு காரணம். இதற்கும் பரிகாரங்கள் உள்ளன.

* நீண்ட நாட்களாக தூக்கமின்மை பிரச்னை இருந்து வந்தால் அது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். மன குழப்பங்களுக்கு தீர்வு கண்டால் தூக்கம் தானாகவே வரும். ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கம் ஒரு பிரச்னையாகி வந்தால் அது கவனிக்கத்தக்க விஷயம் என்பதை மறக்க கூடாது.

* இருதயநோய், சுவாச கோளாறுகள், மூட்டுவலி, நீரழிவு நோய், தைராய்டு, அதிக உடல் பருமன் உள்ளிட்டவை தூக்கமின்மைக்கு காரணங்கள். மன அமைதி குறைவு, சந்தேக நோய்களும் தூக்கம் கெடுவதற்கு காரணமாக அமையலாம். புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை மருந்துகளை பயன்படுத்துதல் தூக்கத்தை கெடுக்கும்.

* தூங்குவதற்கு முறையாக நேரம் ஒதுக்காத நிலை, இரவில் அடிக்கடி வேலை செய்தல், மன அழுத்தம், பகலில் தூங்கும் தன்மை போன்றவையும் தூக்க குறைவை ஏற்படுத்தும். அதிகமாக சேட்டையில் ஈடுபடுகின்ற குழந்தைகளுக்கும் இரவில் தூக்க குறைவு காணப்படும்.

* சாதாரண பிரச்னைகளையும் பெரிதாக்கி யோசனைகளில் மூழ்குவது, பிரச்னைகளுக்கு நடுவில் சிக்கி தவிப்பவர்கள் மத்தியில் இருப்பது, கணவன்-மனைவிக்கு இடையே பொருத்த குறைவு, எப்போதும் சலசலப்பு காணப்படுகின்ற சமூக சூழல் போன்றவையும் தூக்கம் குறைவு ஏற்பட காரணமாக அமையும்.

* தூக்கமே ஒரு பிரச்னையாவதில் இருந்து தப்பிக்க எல்லா நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். குறித்த நேரத்தில் தூங்க வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். மதிய தூக்கம் கட்டாயமானால் அது அரைமணி நேரத்தை கடக்க வேண்டாம். தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

* தூங்க செல்வதற்கு 4 மணி நேரம் முன்னதாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். விளக்குகளை எரியவிட்டு தூங்க கூடாது. படுக்கையில் இருந்தவாறே புத்தகம் படித்தல், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேர உணவு குறைவாக இருக்க வேண்டும். தூங்க செல்லும் முன்னர் புகைபிடிக்க கூடாது.

* தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு குளிக்கலாம். தூங்க சென்று விட்டால் இடைஇடையே நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 2 வாரங்களுக்கு மேல் தூக்கமின்மை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது.

-
அஷ்ரப்

26 August 2014

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!



சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.

1)
ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது

சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் நிகழ்கால பிரச்சனைகளை மட்டும் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், கடந்த காலம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளை யோசித்து கவலைக்கொள்ளாதீர்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி ஆகும்!

2) பிரச்சனைகளை பார்த்து கவலை வேண்டாம்;

நமது செயல்களில் ஏதேனும் தவறு ஏற்படும் என்று நினைத்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும், நம்முடைய செயல்கள் சரியான இலக்கை அடைய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். நம்முடைய எல்லா பிரச்சனைகளை பற்றி கவலை அடைவதே நம மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக உள்ளது.

3) போராடுங்கள், விட்டு கொடுக்க கூடாது!

ஒரு சில நேரங்களில் நமக்கு எதிராக எல்லா செயல்களும் நடப்பது போல் அமையும். அந்த நேரத்தில் மனதை தளரவிடாமல் போராடி நமது இலக்கை அடைய வேண்டும். இந்த மனப்பக்குவமே சாதனையாளர்கள் மற்றும் சாதனையற்றவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

4) மற்றொரு கோணத்தில் பாருங்கள்!

ஒரு பிரச்சினை நம்மை சூழ்ந்திருக்கும்போது, சில நேரங்களில் அது பெரியதாக தோன்றும். அந்த நேரத்தில் அந்த பிரச்சனைகளிலில் இருந்து விலகியிருந்து மற்றொரு கண்ணோட்டங்களில் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானதாகும். எனவே பிரச்சனைகள் எழும்போது நாம் அமைதியாக தூங்கி எழுந்தால் அந்த பிரச்சனைகள் மிக எளியதாக தோன்றும். மற்றொரு கண்ணோட்டத்தில் பிரச்சனைகளை பார்ப்பதன் மூலம் புதிய கோணத்தில் அதற்கொரு முடிவு கிடைக்கிறது.

5) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; தயாராக இருக்க வேண்டும்.

சிறந்த வாசிப்பு, புரிந்துகொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால், மன அழுத்த காலங்களில் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

6) அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்

நீங்கள் ஓய்வெடுக்கவும் மற்றும் உங்களின் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கை உரியவர்களிடம் உங்களின் நேரத்தை ஒதுக்கி செலவிடுவது, நீங்கள் ஓய்வெடுத்து கிடைப்பதைவிட மிக நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

7) உறங்குதல். உடற்பயிற்சி, தியானம்

உங்களின் உணர்வுசார் நுண்ணறிவை அதிகரித்து மூளையை ரீசார்ஜ் செய்வதன் மூலம் மன நிலைகளை நிர்வகிப்பதில் தூக்கம் முக்கியமானதாகும். உங்களுடைய சுய கட்டுப்பாடு, கவனம், மற்றும் நினைவகம் ஆகியவை உங்களின் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது, உங்களின் கண்களை மூடிக்கொண்டு, உட்கார்ந்து, மூச்சு சுவாச பயிற்சியை மேற்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் மனம் அமைதி அடையும்.

8) தாழ்வாக நினைப்பதை நிறுத்தவும்

நம்மளை பற்றி நாமே எதிர்மறையாக அல்லது தாழ்வாக நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏதாவது தவறாக சென்றாலும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இதோடு உலகம் முடிவதில்லை. எப்போதும் உங்களை உயர்த்தியே எண்ணுங்கள்.
-
அஷ்ரப்